கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில் சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. அந்த வகையில் வடகோவை – மருதமலை சாலையை அகலப்படுத்தும் பணிகள் கடந்த மாதம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிலையில், பாரதியார் பல்கலைக்கழகம் அருகே சாலையில் ஆறு ஆல மரங்கள் உள்ளன.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அதில் ஏராளமான பல்லுயிர்கள் வாழ்வதால், அந்த மரங்களை வெட்டாமல், சற்று இடைவெளிட்டு ஐ – லேண்ட் போல அமைத்து மரங்களை காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து மருதமலை அடிவாரத்தில் குடியிருக்கும் பொது மக்கள் கூறுகையில், “பாரதியார் பல்கலைக்கழகம் முதல் மருதமலை வரை சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. தற்போதுள்ள சாலையில் எந்தக் குறையும் இல்லை. அங்கு சாலை விரிவாக்கம் செய்வது என்பது ரியல் எஸ்டேட் பிரமுகர்களுக்கு தான் பயன்படும். ஏற்கெனவே 2012ம் ஆண்டு சாலை விரிவாக்கம் என்ற பெயரில் அங்கு ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டன.

ஆண்டில் ஒரு சில நாள்களைத் தவிர மற்ற நாள்கள் மருதமலைக்கு பெரிய கூட்டம் வருவதில்லை. மரங்களுக்கு எதுவும் ஆகாத வகையில் விரிவாக்கம் பணிகளை செய்ய வேண்டும். இது சம்பந்தமாக முதல்வர் தனிப்பிரிவு, நெடுஞ்சாலைத்துறை செயலாளருக்கும் மனு அனுப்பியுள்ளோம்” என்றனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை கோவை கோட்டப் பொறியாளர் மாதேஸ்வரன் கூறுகையில், “இந்தப் பணி மிகவும் ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளது. பொது மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, நிலம் கையப்படுத்துவதற்கான திட்டமே இப்போதுதான் வகுக்கப்பட்டுள்ளது. இதன் பிறகுதான் எத்தனை மரங்கள் எடுக்க வேண்டிய சூழ்நிலை வரும் என்று பட்டியல் எடுப்போம்.

முடிந்தவரை மரங்களை வெட்டாமல் திட்டத்தை நிறைவேற்ற பரிசீலனை செய்வோம். தவிர்க்க முடியாத நேரத்திலும் மரத்தை வேறு பகுதிக்கு இடம்பெயர்க்கலாம். போதிய இடம் இருந்தால், மரத்தை அப்படியே விட்டுக்கூட பணியை தொடர்வோம்” என்றார்.