Published:Updated:

மாநில எல்லைகளில் நாள்கணக்கில் நிறுத்தப்படும் லாரிகள்! - தீப்பெட்டி உற்பத்தி பாதிக்கும் அபாயம்

தீப்பெட்டி உற்பத்தி
தீப்பெட்டி உற்பத்தி

தீக்குச்சிகள் தயாரிப்பதற்காக வெளி மாநிலங்களிலிருந்து மரத் தடிகளை ஏற்றிவரும் லாரிகள், சோதனைச் சாவடிகளில் நாள்கணக்கில் நிறுத்திவைக்கப்படுவதால், தீக்குச்சி உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டு, ஆலைகள் மூடப்படும் அபாயம் இருப்பதாக வேதனையுடன் கூறுகிறார்கள் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள்.

தமிழகத்தில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, விருதுநகர், தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் தீப்பெட்டி உற்பத்தி நடந்துவருகிறது. 50 முழு இயந்திர தீப்பெட்டித் தொழிற்சாலைகளும், 400 பகுதி இயந்திரத் தீப்பெட்டித் தொழிற்சாலைகளும், 3,000 சிறு தீப்பெட்டித் தொழிற்சாலைகளும் இயங்கிவருகின்றன. இந்தத் தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் எட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுவருகின்றனர். இவர்களில், 80 சதவிகிதத் தொழிலாளர்கள் பெண்கள்தான். தீப்பெட்டி உற்பத்திக்கு முக்கிய மூலப்பொருளே தீக்குச்சிதான். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மட்டும் 150-க்கும் மேற்பட்ட தீக்குச்சி தயாரிக்கும் ஆலைகள் இயங்கிவருகின்றன.

தீக்குச்சி மரத் தடிகள்
தீக்குச்சி மரத் தடிகள்

இந்தக் குச்சிகளைத் தயாரிக்கத் தேவையான மரத் தடிகள், கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்படுகின்றன. இதுதவிர, வெளிநாடுகளிலிருந்தும் சில வகை மரத் தடிகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்தத் தீக்குச்சி ஆலைகளில் மரத் தடிகளை அறுவை இயந்திரம் மூலம் ஓரடி நீளத்துக்கு அறுத்து, அதன் பட்டைகளை நீக்கிய பின்னர், குச்சியாக்கும் இயந்திரம் மூலம் குச்சிகள் தயாரிக்கப்பட்டு தீப்பெட்டி ஆலைகளுக்கு அனுப்பப்படுகின்றன.

`வடமாநிலங்களில் கனமழை; ரூ. 300 கோடி சரக்கு தேக்கம்!' -கலங்கும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள்

பின்னர், குச்சிகளில் மருந்து ஒட்ட வைக்கப்பட்டு, பெட்டிகளில் அடைக்கப்பட்டு, பண்டல்களாக விற்பனைக்காக ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 18 சதவிகிதம் விதிக்கப்பட்டிருந்த ஜி.எஸ்.டி வரியை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 12 சதவிகிதமாகக் குறைத்து அறிவித்தது மத்திய அரசு. இதனால், தீப்பெட்டி உற்பத்தியாளார்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதையடுத்து, கொரோனா பரவலால் தமிழகத்தில் தீப்பெட்டித் தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன.

அறுக்கப்பட்ட தீக்குச்சி மரத் தடிகள்
அறுக்கப்பட்ட தீக்குச்சி மரத் தடிகள்

இதனால், பல கோடி மதிப்பிலான தீப்பெட்டி பண்டல்கள் குடோன்களில் தேக்கம் அடைந்தன; லாரிகளில் பிற மாநிலங்களுக்கு ஏற்றிச் செல்லபட்ட பண்டல்களும் தேக்கமடைந்தன. இதையடுத்து கடந்த ஒரு மாதமாக தீப்பெட்டி ஆலைகள் மீண்டும் இயங்கிவருகின்றன. இந்தநிலையில், வெளிமாநிலங்களிலிருந்து தீக்குச்சிகள் தயாரிக்கப் பயன்படும் மரத் தடிகளை ஏற்றிவரும் லாரிகள், சோதனைச் சாவடிகளில் நாள்கணக்கில் நிறுத்தப்படுவதாகவும், இதனால் தடிகள், அவற்றின் தன்மையை இழந்து பெருத்த நஷ்டம் ஏற்படுவதாகவும் வேதனையுடன் கூறுகிறார்கள் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள்.

Vikatan

இது குறித்து கோவில்பட்டியைச் சேர்ந்த நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கச் செயலாளர் சேதுரத்தினத்திடம் பேசினோம். ``தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டி பண்டல்கள் ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், ஹரியானா போன்ற வட மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதுடன், தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கப்பல்களில் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஊரடங்கால் மூலப்பொருள் தட்டுப்பாட்டால் திணறிய தீப்பெட்டித் தொழில், தற்போது மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்பியிருக்கிறது. இந்தநிலையில் தடிகள் உரிய நேரத்தில் வந்து சேருவதில் சிக்கல் நீடிக்கிறது. கேரளாவிலிருந்து பீசா, மட்டி ரக மரத்தடிகளும், கர்நாடகாவிலிருந்து குச்சி முருங்கை மரத்தடிகளும் வருகின்றன.

தீக்குச்சித் தடிகள்
தீக்குச்சித் தடிகள்

தற்போது மாநில எல்லைகளிலுள்ள செக்போஸ்ட்களில் தடிகள் ஏற்றிவரும் லாரிகள், சோதனை என்ற பெயரில் நாள்கணக்கில் நிறுத்திவைக்கப்படுகின்றன. வெட்டப்பட்ட மரங்களை 10 நாள்களுக்குள் குச்சிகளாக மாற்றிவிட வேண்டும். நாள்கள் கூடினால், தடிகளிலுள்ள ஈரப்பதம் இழந்து காய்ந்துவிடும். பின்னர் அதை விறகுக்காக மட்டும்தான் பயன்படுத்த முடியும். எனவே, சோதனைச்சாவடிகளில் சோதனைகளை விரைவாக நடத்தி, நாள்கணக்கில் நிறுத்திவைக்காமல் உடனுக்குடன் அனுப்ப வேண்டும். இது குறித்து அரசுக்குக் கோரிக்கை வைத்திருக்கிறோம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு