Published:Updated:

`நாமதான் பாத்து போகணும்.. இல்லைனா இப்படித்தான்!'- கிராம மக்களை அதிரவைத்த அதிகாரிகள்

மழைநீரால் நிரம்பி சேதமான சாலையை சீரமைக்க கோரி, மாயனூர் பகுதி மக்கள், வலை விரித்து மீன் பிடித்தும், பரிசல் ஓட்டியும், நீச்சல் அடித்தும் வித்தியாசமான முறையில் போராட்டம் நடத்தினர்.

நூதன போராட்டம்
நூதன போராட்டம்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் இருக்கிறது, மாயனூர். கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரே சுற்றுலா மையம் மாயனூர் தான். வளர்ந்து வரும் சுற்றுலா தலமான மாயனூரில் பிரசித்தி செல்லாண்டியம்மன் கோவில், சிறுவர் பூங்கா, அம்மா பூங்கா ஆகியவை அமைந்துள்ளன. கரூரிலிருந்து நாமக்கல் மாவட்டத்தை இணைக்கும் வகையில், இருவழிச்சாலை வசதியுடன்கூடிய மாயனூர் கதவணை கட்டப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளிலிருந்து வெளியூர் சுற்றுலா பயணிகள் மாயனூருக்கு வந்து செல்கின்றனர்.

மழைநீரால் நிரம்பிய சாலையில் நூதன போராட்டம்
மழைநீரால் நிரம்பிய சாலையில் நூதன போராட்டம்

இந்நிலையில், மாயனூர் கதவணைக்கு செல்லும் பரிசல்துறை பிரதான சாலையை முறையாக பராமரிப்பு செய்யாததால், தார்சாலை மண்சாலையாக மாறி குண்டும், குழியுமாக மாறி, அதில் பயணிக்கும் மக்களுக்கு இம்சை தர ஆரம்பித்தது. இதனால், அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளும், பகுதிகள்வாசிகளும் புழுதி பறந்து மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். இந்த குண்டும், குழியுமான சாலையை சீரமைக்கும்படி பலமுறை அந்த பகுதி மக்கள் அரசு, மாவட்ட நிர்வாகம், ஊராட்சி நிர்வாகம், மக்கள் பிரதிநிதிகள் என்று பலதரப்புக்கும் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், அந்த சாலையை யாரும் சரிசெய்யவில்லை.

`பரிதாபமாக சாலையில் அலைந்து கொண்டிருந்தார்!’- மனநலம் பாதித்தவரை மீட்டு நெகிழ வைத்த கரூர் அமைப்புகள்

இந்நிலையில், மாயனூர் பகுதியில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. மழையால் கதவணைக்கு செல்லும் பரிசல் துறை சாலைம் சேறும் சகதியுமாக மாறியதுடன், குழிகளில் ஆங்காங்கே மழை தண்ணீர் தேங்கி நிற்க ஆரம்பித்தது. இதனால், இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் மாயனூர் கதவணைக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் கடும் அவதி அடைந்து வந்தனர்.

மழைநீரால் நிரம்பிய சாலையில் நூதன போராட்டம்
மழைநீரால் நிரம்பிய சாலையில் நூதன போராட்டம்

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், கோபமமடைந்த அப்பகுதி பொதுமக்கள், மாயனூர் கதவணை பரிசல் துறை சாலையை சீரமைக்ககோரி, சாலையில் தேங்கிய மழை நீரில், மீன் வலையுடன் மீன்பிடித்தும், பரிசலை இயக்கியும், தண்ணீரில் படுத்து நீச்சல் அடித்தும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றி, மாயனூர் பகுதி இளைஞர்கள் சிலர் நம்மிடம், "இப்பகுதியில் வசிக்கும் சிறுவன் ஒருவன் சில தினங்களுக்கு முன்பு இந்த குழியில் விழுந்து காயம் அடைந்துவிட்டான். அந்த தகவலையும் சொல்லி, அதிகாரிகளிடம் சாலையை சீரமைக்க வலியுறுத்தினோம். 'மழைபேஞ்சு தண்ணி கிடந்துச்சுனா, நாமதான் பாத்து போகணும். இல்லைனா, இப்படிதான் ஆகும்'னு பொறுப்பில்லாம பதில் சொன்னாங்க. ஏற்கனவே, பலமுறை இந்த சாலையை செப்பனிட வலியுறுத்தி எல்லாருக்கும் மனுமேல மனுக் கொடுத்து அலுத்துட்டோம்.

மழைநீரால் நிரம்பிய சாலையில் நூதன போராட்டம்
மழைநீரால் நிரம்பிய சாலையில் நூதன போராட்டம்

இந்த சூழலில் எங்க அவலத்தை அதிகாரிகளுக்கு உணர்த்துவதற்காக, வித்தியாசமான முறையில் போராட்டம் நடத்தினோம். நடுரோட்டில் உள்ள குழியில் தேங்கி நின்ற தண்ணீரில் நீச்சல் அடித்தும், பரிசலை இயக்கியும், மீன்வலையைக் கொண்டு மீன் பிடித்தும் எங்க எதிர்ப்பைக் காட்டினோம். இதன்பிறகும், இந்த சாலையை சரிபண்ணலனா, எங்க போராட்டம் வேற வேற வடிவங்களில் தொடர்ந்துகிட்டே இருக்கும்" என்றார்கள்.