`இளைஞர்களுக்கு இலவசப் பயிற்சி!’ - தற்காப்புக் கலையில் அசத்தும் 80 வயது `கணபதி வாத்தியார்’

80 வயதிலும் தற்காப்புக் கலையை இலவசமாகக் கற்றுத் தந்து கொண்டிருக்கிறார் கணபதி வாத்தியார்.
கருவாழக்கரை மேலையூரில் 80 வயதிலும் தளராமல் தற்காப்புக் கலைகளை இலவசமாகக் கற்றுத்தருகிறார் கணபதி வாத்தியார். தமிழரின் பாரம்பர்ய கலையை அழியாமல் சுமார் 60 ஆண்டுக்களுக்கும் ஏராளமானவர்களுக்கு கற்றுக் கொடுத்துவரும் கணபதிக்கு, அரசு சார்பில் எந்த விருதும் தந்து ஊக்கப்படுத்தவில்லை என்ற வருந்தம் இருக்கிறது.

மயிலாடுதுறை மாவட்டம் கருவாழக்கரை மேலையூரைச் சேர்ந்தவர் கணபதி. சிறு வயதிலேயே வீர விளையாட்டுகளில் ஆர்வம் ஏற்பட்டு சிலம்பம், குஸ்தி, மடுவு, சுருள்வாள், அரிவாள் வீச்சு என அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார். 22 வயது முதல் இன்றுவரை, தான் கற்ற கலைகளை ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு கற்றுக்கொடுத்து வருகிறார். தற்போது கொரானா ஊரடங்கில் ஆர்வத்துடன் வரும் 50-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாகத் தற்காப்பு கலையைக் கற்றுத்தருகிறார்.
இதுபற்றி கணபதியிடம் பேசினோம். ``10 வயது முதல் 22 வயது வரை சிலம்பத்தில் ஆரம்பித்து தற்காப்புக் கலைகள் அனைத்தையும் கற்றுக்கொண்டேன். அது என்னோடு அழிந்து விடக்கூடாது.

வீரம் தமிழனின் ரத்தத்தோடு கலந்த விஷயம். இக்கலை அறிந்து கொண்டால் உடல்நலம் ஆரோக்கியமாக இருக்கும். எத்தனை எதிரிகள் வந்தாலும் அவர்களை சமாளிக்க முடியும். சுற்றுவட்டாரத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு கற்றுத் தந்துள்ளேன். இதில் அரசியல் பிரபலங்களும் உண்டு. பல பட்டம் பெற்று பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் இருந்தபோதிலும், இப்பகுதியில் மக்கள் என்னை வாத்தியார் என்றே அழைக்கின்றனர். பாரம்பர்யக் கலைகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும், எனக்கு அரசு சார்பில் ஒரு விருது கூட கொடுத்து கௌரவிக்கவில்லை. நான் சாகும்வரை இப்பணியைத் தொடர்ந்து செய்வேன்" என்றார்