மயிலாடுதுறையில் மணமக்கள் இந்து, கிறிஸ்துவம், இஸ்லாம் ஆகிய மும்மத முறைப்படி செய்துகொண்ட புரட்சித் திருமணம் , பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மயிலாடுதுறை ரஸ்தா மணவளித் தெருவைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் - சியாமளா தம்பதியின் மகன் புருஷோத்தமன். பொறியியல் பட்டதாரியான இவர் தரங்கம்பாடி வட்டம் சேத்தூரில் கிராம அலுவலராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் வசிக்கும் வீதியில் அனைத்து மதத்தைச் சார்ந்தவர்களும் இவரிடம் பாசமாகப் பழகி வருவதால், சிறுவயது முதலே மும்மதக் கோட்பாடுகளின் மீதும் இவருக்கு ஆர்வம் உண்டு


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
புருஷோத்தமனுக்கு, தஞ்சை மாவட்டம் திருவையாறைச் சேர்ந்த ராஜேந்திரன் - காவிரி தம்பதியின் மகள், எம்.காம் பட்டதாரி புவனேஸ்வரியைத் திருமணம் பேசி முடித்துள்ளார்கள்.
``சமய நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாகவும், அனைத்து மதத்தினரும் உறவினர்களே என்பதை உணர்த்தவும், மதத்தால் வேறுபட்டிருந்தாலும் மனதால் அனைவரும் ஒற்றுமையாக இருப்போம் என்பதையும் நம் திருமணம் மூலம் செய்துகாட்டுவோம், மூன்று மத முறைப்படி நமது திருமணம் நடைபெற வேண்டும்" என்று புருஷோத்தமன் வீட்டினர், பெண் வீட்டினரை கேட்டுக்கொண்டனர். அவர்களும் இந்த நல்ல முயற்சியை மகிழ்ச்சியுடன் வர வேற்றுள்ளனர்.
மயிலாடுறையிலுள்ள தனியார் திருமணமண்டபத்தில் கடந்த மார்ச் 26-ம் தேதி மாலையில் இஸ்லாமிய முறைப்படியும், கிறிஸ்துவ முறைப்படியும் திருமணம் நடைபெற உள்ளது என்றும், 27-ம் தேதி காலை இந்து முறைப்படி திருமணம் நடைபெறும் என்றும் பத்திரிகை அடித்து விநியோகம் செய்யப்பட்டது. அதன்படி குறித்த தேதியில் இஸ்லாமிய முறைப்படி ஆடைகளை அணிந்து மேடையில் வந்தமர்ந்த புருஷோத்தமனுக்கும், புவனேஸ்வரிக்கும் மயிலாடுதுறை பள்ளிவாசல் மௌலானா இஸ்லாமிய முறைப்படி, திருமண நோக்கம் மற்றும் கணவன் மனைவி கடமைகள் பற்றி எடுத்துக்கூறி ஆசீர்வதித்து திருமணத்தை நடத்தி வைத்தார்.
அதன் பிறகு, கிறிஸ்துவ முறைப்படி ஆடை, அலங்காரங்களை செய்துகொண்டு மணமேடையில் அமர்ந்த தம்பதிக்கு மங்கைநல்லூர் கிறிஸ்துவ போதகர் தலைமையில் கிறிஸ்துவ முறைப்படி அறிவுரைகள் வழங்கப்பட்டு, மோதிரம் மாற்றி திருமணம் செய்து வைக்கப்பட்டது.

நேற்று காலை 9 மணிக்கு இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. மணமக்களுக்கு மூன்று மதங்களின் முறைகளின்படியும் திருமணம் நடந்ததைக் கண்டுகளித்த உறவினர்களும் நண்பர்களும் வெகுவாகப் பாராட்டி மகிழ்ந்தனர். `இந்தியாவிலேயே இது முதல் முயற்சி. தமிழகத்தில் மத ஒற்றுமை தழைத்தோங்க இதுபோன்ற திருமணங்கள் நிறைய நடைபெற வேண்டும்' என்று, கிராம நிர்வாக அலுவலரின் இந்தப் புதிய முயற்சியை அனைவரும் வரவேற்று பாராட்டி வாழ்த்தினர்.