Published:Updated:

`1 நிமிடம்; 52 பந்துகள்... கால்களால் எடுத்து வீசிய மயிலாடுதுறை மாணவன்!’ - யோகாவில் உலக சாதனை

யோகாவில் ஒரு நிமிடத்தில் 52 பந்துகளைக் கால்களால் எடுத்து வீசி பள்ளி மாணவன் உலக சாதனை படைத்துள்ளார்.

மாணவர் சந்தோஷின்
மாணவர் சந்தோஷின்

மயிலாடுதுறையில் பூர்ணா சலபாசனா யோகாவில் 1 நிமிடத்தில் 52 பந்துகளைக் கால்களால் எடுத்து வீசி பள்ளி மாணவன் உலக சாதனை படைத்துள்ளார்.

உலக சாதனை
உலக சாதனை

நாகை மாவட்டம் மயிலாடுதுறையைச் சேர்ந்த சீனிவாசன்- சுகன்யா தம்பதியின் மகன் சந்தோஷ். மயிலாடுதுறையிலுள்ள தனியார் பள்ளியொன்றில் சந்தோஷ் தற்போது எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். சிறு வயது முதல் யோகா கற்றுக்கொள்வதில் ஆர்வமுடைய சந்தோஷுக்கு, பள்ளி யோகா ஆசிரியை பிரசன்னதேவி பயிற்சி தந்தார். அதன் விளைவாக கோவாவில் நடைபெற்ற யோகா திருவிழாவில் பங்கேற்ற சந்தோஷ் 'சர்வதேச யோகா அவார்டு' பெற்றுள்ளார். தேசிய அளவில் 'யோகா அர்ஜுனா' விருதையும் இந்தியன் யோகா பெடரேஷன் நடத்திய போட்டியில் 'வேர்ல்டு யோகா கப் 2019' என்ற விருதையும் பெற்றுள்ளார்.

`600 யோகா ஆசிரியர்கள்;  90 வருடங்களுக்கு மேல் பயிற்சி'- காலமானார் `யோகா பாட்டி' நானம்மாள்!

இந்நிலையில், பூர்ணா சலபாசனம் யோகாவில் சாதனை புரிய வேண்டும் என்ற நோக்கில் சந்தோஷ் கடந்த ஆறு மாத காலமாகக் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். இவரின் யோகா சாதனையை வெளிப்படுத்தும் விதமாக யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக்ஸ் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஃப்யூச்சர் கலாம்ஸ் புக்ஸ் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அமைப்பினரால் பள்ளியில் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாணவன் சந்தோஷ் பூர்ணாசலபாசனா யோகா மூலம் 1 நிமிடத்தில் 52 பந்துகளை ஒரு திசையிலிருந்து எதிர் திசைக்கு கால்களால் எடுத்து வீசி உலக சாதனைப் படைத்தார். இதை, அப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

உலக சாதனை
உலக சாதனை

மாணவர் சந்தோஷின் இந்த உலக சாதனையை யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக்ஸ் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஃப்யூச்சர் கலாம்ஸ் புக்ஸ் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அமைப்பைச் சேர்ந்த பாபு, பாலகிருஷ்ணன், உமா ஆகியோர் பதிவு செய்தனர்.