Published:Updated:

`10 அடிதான் அகலம்; தடுப்புச் சுவரும் இல்லை!’ - திக்...திக் பயணத்தால் கலங்கும் கீழையூர் மக்கள்

`குறுகலான அய்யாவைனாறு பாலத்தை விபத்து நடக்கும்முன் சீரமைத்துத் தர வேண்டும்’ என்று அரசுக்குக் கோரிக்கை வைக்கிறார்கள் கீழையூர் மக்கள்.

கீழையூர் பாலம்
கீழையூர் பாலம்

நாகை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்த கீழையூரில் 50 வருடங்களுக்கு முன் அய்யாவைனாறு ஆற்றின் நடுவே கான்கிரீட் பாலம் அமைக்கப்பட்டது.

பாலம்
பாலம்

காலப்போக்கில் பாலத்தின் மீது இரண்டு பக்கமும் இருந்த தடுப்புச் சுவர்கள் சிதலமடைந்து உடைந்துவிட்டன. இதனால், தற்போது தடுப்புச் சுவர்கள் இல்லாமல் பாதுகாப்பற்ற நிலையில் அய்யாவைனாறு பாலம் உள்ளது. எனவே, அவ்வழியே செல்லும் மக்கள் பெரும் அச்சத்துடனே பாலத்தைக் கடக்க வேண்டியிருக்கிறது. தரங்கம்பாடி தாலுகாவையும், சீர்காழி தாலுகாவையும் இணைக்கும் இந்த ஆற்றுப்பாலத்தில் 30 வருடங்களுக்கு மேலாக மயிலாடுதுறையிலிருந்து கீழையூர் மார்க்கத்தில் தடம் எண் 384-ல் அரசுப் பேருந்தும் இயக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் பேசினோம். ``அய்யாவைனாறு பாலத்தின் அகலமே சுமார் 10 அடிதான் இருக்கும். முன்பெல்லாம் பேருந்து வந்தால் எதிர்திசையில் சைக்கிளில் செல்வார்கள். ஆனால், தடுப்புச் சுவர் உடைந்ததால், இப்போது சைக்கிளில் செல்வதற்கும் யோசிக்க வேண்டியதாயிருக்கு. கொஞ்சம் கவனம் சிதறினாலும், கீழே பள்ளத்தில் விழ வேண்டியதுதான். எதிர் எதிராக வாகனங்கள் மாறிச் செல்வதற்கு பாலம் அகலமாக இல்லை. கீழையூரில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இதனால் கீழையூரைச் சுற்றியுள்ள கிராமங்களான பாகசாலை, செம்பதனிருப்பு, புதுப்பேட்டை, எருமல் போன்ற பகுதிகளிலிருந்து பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் இந்தப் பாலத்தைக் கடந்துதான் செல்ல வேண்டும். வாகன ஓட்டுநர்களின் கவனம் கொஞ்சம் சிதறினால்கூட பெரிய அளவில் விபத்துகள் நடந்து உயிர்ப்பலிகள் ஏற்பட்டுவிடக்கூடும்.

பாலம்
பாலம்

எனவே, வருமுன் காக்க அகலமான புதிய பாலம் கட்டப்பட வேண்டும். குறைந்தபட்சம் பாலத்தின் இரண்டுபுறங்களிலும் தடுப்புச் சுவர்களாவது அமைத்துக் கொடுக்க வேண்டும். இதுதொடர்பாக ஊராட்சி அமைப்பினரிடமும், அரசு அதிகாரிகளிடமும் பலமுறை கோரிக்கை வைத்தும் , கடந்த 5 வருடங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பலமுறை போராடியும் பயனில்லை'’ என்று ஊர் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.