Published:Updated:

`டோர் டெலிவரி மூலம் இறைச்சி விற்பனை..!’ - புதிய கட்டுப்பாடுகளை விதித்த வேலூர் கலெக்டர் #corona

வேலூர் கலெக்டர் சண்முக சுந்தரம்
வேலூர் கலெக்டர் சண்முக சுந்தரம்

பொதுமக்கள் போன் மூலம் வியாபாரியிடம் ஆர்டர் கொடுத்து இறைச்சியை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ளலாம். 

கொரோனா துயரத்திலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்க, வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து இறைச்சிக் கடைகளும், மீன் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், இறைச்சி மற்றும் மீன் விற்பனை சங்கத்தைச் சேர்ந்த வியாபாரிகள் மீண்டும் தங்கள் விற்பனையைத் தொடர கலெக்டர் சண்முக சுந்தரத்திடம் அனுமதி கோரினர்.

கொரோனா ராட்சத  ஓவியம்
கொரோனா ராட்சத ஓவியம்

அதனடிப்படையில், இன்று முதல் இறைச்சி மற்றும் மீன்கள் விற்பனையை ஆர்டரின் பேரில், வீடுகளுக்கே சென்று கொடுக்க கலெக்டர் சண்முக சுந்தரம் நடைமுறைகளைத் தளர்த்தியுள்ளார். அதே சமயம், எக்காரணம் கொண்டும் கடைகளில் வைத்து இறைச்சியை விற்பனை செய்யக்கூடாது. காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். பொதுமக்கள் போன் மூலம் வியாபாரியிடம் ஆர்டர் கொடுத்து இறைச்சியை வீட்டிலிருந்தே பெற்றுக் கொள்ளலாம்.

கடைகளில் விற்றால், கடைக்கு சீல் வைக்கப்படுவதுடன் வாடிக்கையாளருடைய வாகனமும் பறிமுதல் செய்யப்படும். தவிர, குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும். அதேபோல், வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பேக்கரி கடைகளும் தினமும் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், பேக்கரி கடைகளில் பார்சல் மட்டுமே வழங்க வேண்டும்.

`கழுகு’ பார்வையில் வேலூர்
`கழுகு’ பார்வையில் வேலூர்

கடைகளிலேயே டீ, காபி, குளிர்பானம் அருந்துவதற்கோ அல்லது ஸ்நாக்ஸ் போன்ற தின்பண்டங்களைச் சாப்பிடுவதற்கோ அனுமதியில்லை. சமூக விலகலையும் அவசியம் கடைப்பிடிக்க வேண்டும். மீறிச் செயல்படும் பேக்கரி கடைகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்து அறிவுறுத்தியுள்ளார் கலெக்டர் சண்முக சுந்தரம்.

மரணிப்பவரின் முகத்தைக்கூட கடைசியாக ஒருமுறை பார்க்கவிடாத துயரத்தைக் கொடுத்துள்ளது, கொரோனா. துயரத்திலிருந்து தற்காத்துக்கொள்ள அனைவரும் எச்சரிக்கையாக இருப்போம், விலகி இருப்போம், பாதுகாப்பாக வீட்டிலிருப்போம்!

அடுத்த கட்டுரைக்கு