Published:Updated:

`ஸ்விகி மூலம் இறைச்சி விற்பனை..!’ - வேலூர் மக்களுக்காகக் களமிறங்கும் டெலிவரி பாய்ஸ் #corona

ஸ்விகி
ஸ்விகி

காய்கறி, மளிகைப் பொருள்களைத் தொடர்ந்து ஆட்டிறைச்சி, கோழிக் கறி, மீன் விற்பனை செய்யவும் ஸ்விகி நிறுவனம் களமிறங்கியுள்ளது.  

கொரோனா துயரத்திலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்க, வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து இறைச்சிக் கடைகளும் மீன் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், இறைச்சி மற்றும் மீன் விற்பனை சங்கத்தைச் சேர்ந்த வியாபாரிகள் மீண்டும் தங்கள் விற்பனையைத் தொடர கலெக்டர் சண்முகசுந்தரத்திடம் அனுமதி கோரினர். அதனடிப்படையில், கடந்த 15-ம் தேதி முதல் இறைச்சி மற்றும் மீன்கள் விற்பனையை ஆர்டரின் பேரில், வீடுகளுக்கே சென்று கொடுக்க கலெக்டர் சண்முகசுந்தரம் நடைமுறைகளைத் தளர்த்தினார்.

கொரோனா ராட்சத ஓவியம்
கொரோனா ராட்சத ஓவியம்

அதே சமயம், ``எக்காரணம் கொண்டும் கடைகளில் வைத்து இறைச்சியை விற்பனை செய்யக் கூடாது. காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். பொதுமக்கள் போன் மூலம் வியாபாரியிடம் ஆர்டர் கொடுத்து இறைச்சியை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ளலாம். கடைகளில் விற்றால், கடைக்குச் சீல் வைக்கப்படுவதுடன் வாடிக்கையாளருடைய வாகனமும் பறிமுதல் செய்யப்படும். குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும்’’ என்று எச்சரிக்கை விடுத்திருந்தார் கலெக்டர் சண்முக சுந்தரம்.

அதன்படி, வியாபாரிகளும் குடியிருப்புப் பகுதிகளுக்கே சென்று இறைச்சியை விற்பனை செய்துவருகிறார்கள். ஆனால், இந்த நடைமுறை போதுமான அளவுக்குக் கைகொடுக்காததால், `ஸ்விகி’ டெலிவரி ஆப் மூலம் இறைச்சியை விற்பனை செய்ய வியாபாரிகள் ஒப்பந்தம் போட்டுள்ளனர். ஸ்விகியில் இப்போது இட்லி, தோசை, அசைவ உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனுடன் ஆட்டிறைச்சி, கோழிக் கறி, மீன் விற்பனை செய்யவும் ஸ்விகி களமிறங்கியுள்ளது.

வேலூர் கலெக்டர் சண்முக சுந்தரம்
வேலூர் கலெக்டர் சண்முக சுந்தரம்

இதற்காக, கிலோவுக்கு குறிப்பிட்டத் தொகையை இறைச்சி வியாபாரிகளிடமிருந்து ஸ்விகி கட்டணமாகப் பெற உள்ளது. இறைச்சி வியாபாரிகளும் ஸ்விகியுடன் ஒப்பந்தம் செய்ய ஆர்வம் காட்டிவருகிறார்கள். மாவட்ட கலெக்டரிடம், இதற்கான அனுமதி பெறுவதற்கான வேலைகள் நடந்துவருகின்றன என்று வேலூர் மாவட்ட கறிக் கோழி வியாபாரிகள் சங்கத் தலைவர் கிருஷ்ணராஜ் நம்மிடம் தெரிவித்துள்ளார்.

அதே சமயம், ``மாட்டிறைச்சியையும் பார்சல் செய்து விற்பனை செய்வார்கள் என்பதால் இனிமேல் ஸ்விகியில் உணவு வாங்க மாட்டோம்’’ என்று சைவ உணவுப் பிரியர்கள் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் விமர்சனம் வைக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

வேலூர் ஸ்விகி நிறுவனத்தின் மேலாளர் முகமது ஹாரிஸிடம், இதுதொடர்பாக கேட்டோம். ``ஹோட்டல்களுடன் ஒப்பந்தம் வைத்துள்ளதைப் போன்றே காய்கறி, மொத்த மளிகை வியாபாரிகளுடன் ஒப்பந்தம் வைத்துக்கொண்டு காய்கறிகளையும் மொத்த மளிகைப் பொருள்களையும் டெலிவரி பாய்ஸ் மூலம் விற்பனை செய்துவருகிறோம்.

ஸ்விகி
ஸ்விகி

அடுத்தகட்டமாக, இப்போதைய கொரோனா சூழலைக் கருத்தில் கொண்டு, இறைச்சியையும் டெலிவரி கொடுப்பதற்கான சாத்தியங்களை ஆராய்ந்து வருகிறோம். அதற்கான அனுமதி, நிர்வாகம் உள்ளிட்ட நடைமுறைகளைத் தொடங்கியிருக்கிறோம். அனுமதி கிடைக்கும்பட்சத்தில் அடுத்தகட்ட நடவடிக்கையைத் திட்டமிடுவோம். மாட்டிறைச்சி விற்பனை தொடர்பான சர்ச்சைக்கு நான் பதில் கூற விரும்பவில்லை’’ என்றார்.

தொடர்ந்து, ஸ்விகியின் லீகல் டீமைச் சேர்ந்த வினோத் என்பவரிடமும் பேசினோம். மாட்டிறைச்சி தொடர்பான கேள்விக்கு அவரும் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

சானிடைஸர் தயாரிப்புக்காக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் அரிசி... மக்கள் கருத்து என்ன? #VikatanPoll
அடுத்த கட்டுரைக்கு