ஈரோட்டில் இயங்கிவரும் ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையத்தின் மீது வந்த புகாரின் அடிப்படையில், மாவட்ட சுகாதார நலப் பணிகள் இணை இயக்குநர் பிரேமாகுமாரி தலைமையிலான சுகாதாரத்துறை அதிகாரிகள் இன்று திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது, கருத்தரித்தல் மையத்தில் இருந்த ஸ்கேன் சென்டர், அது தொடர்பான ஆவணங்களையும் சரிபார்த்தனர். கருத்தரித்தல் மையத்தில் திடீர் ஆய்வு நடந்ததால், அப்போது பரிசோதனைக்காக வந்திருந்த வெளி நோயாளிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இந்த மையத்தில் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வுக்குப் பின்னர் நலப் பணிகள் இணை இயக்குநர் பிரேமா குமாரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``இந்தக் கருத்தரித்தல் மையத்திலுள்ள ஸ்கேன் சென்டர், லைசென்ஸ் பெறாமல் இயங்குவதாக ஒருவர் புகார் அளித்திருந்தார். அதன்பேரில் இந்த மையத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வின் முடிவில் புகார்தாரர் புகாரளித்த தேதியில், இந்த ஸ்கேன் சென்டருக்கு லைசென்ஸ் பெறவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, இந்த ஸ்கேன் சென்டருக்கு உடனடியாக சீல் வைக்கப்பட்டது. இன்னும் பத்து நாள்களுக்குள் இது தொடர்பான ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு கருத்தரித்தல் மையம் மீண்டும் இயங்க அனுமதி வழங்குவது குறித்துப் பரிசீலிக்கப்படும்'' என்று தெரிவித்தார்.