Published:Updated:

மேலவளவு குற்றவாளிகள் விடுதலையை எதிர்த்து ஆர்பாட்டம்!- தள்ளுமுள்ளு, கைதால் மதுரையில் பரபரப்பு

இவர்களில் 3 பேரை திமுக ஆட்சிகாலத்தில் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்தனர். அதைத்தொடர்ந்து ஒருவர் இறந்துவிட எஞ்சியிருந்த 13 பேரை கடந்த 9 -ம் தேதி தமிழக அரசு விடுவித்துள்ளது.

மேலவளவு
மேலவளவு ( என்.ஜி.மணிகண்டன் )

மேலவளவுக் கொலைக் குற்றவாளிகளை அரசு விடுதலை செய்ததை கண்டித்து மதுரை கோரிப்பாளையத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்பாட்டம் நடத்த வந்தபோது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலவளவுப் போராட்டம்
மேலவளவுப் போராட்டம்
என்.ஜி.மணிகண்டன்

மேலவளவில் பட்டியலின ஊராட்சித்தலைவர் முருகேசன் உட்பட 7 பேர் 1997-ல் கொடூரமாக கொல்லப்பட்டனர். இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் 17 பேர் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருந்து வந்தார்கள்.

இவர்களில் 3 பேரை திமுக ஆட்சிகாலத்தில் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்தனர். அதைத்தொடர்ந்து ஒருவர் இறந்துவிட எஞ்சியிருந்த 13 பேரை கடந்த 9 -ம் தேதி தமிழக அரசு விடுவித்துள்ளது. இதை பல்வேறு அமைப்புகள் கண்டித்துள்ளன.

மேலவளவுப் போராட்டம்
மேலவளவுப் போராட்டம்
என்.ஜி.மணிகண்டன்

இதை எதிர்த்து பாதிக்கப்பட்டவர் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், எந்த அடிப்படையில் விடுதலை செய்துள்ளீர்கள் என்று தமிழக அரசை கேள்வி எழுப்பியுள்ளனர் நீதிபதிகள்.

இந்த நிலையில் இவர்களின் விடுதலை உத்தரவை ரத்து செய்து, மீண்டும் சிறையில் அடைக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மதுரையில் கண்டன ஆர்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை.

தீண்டாமை ஒழிப்பு முன்னணி
தீண்டாமை ஒழிப்பு முன்னணி
என்.ஜி.மணிகண்டன்

தடையை மீறி ஆர்பாட்டம் நடத்த இவ்வமைப்பின் மாநிலத்தலைவர் செல்லக்கண்ணு, பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ் தலைமையில் கோரிப்பாளையத்தில் திரண்டனர். அவர்களை காவல்துறையினர் தடுததபோது மறியல் செய்ய சாலையில் அமர்ந்தனர். இதனால் காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்பு அனைவரையும் கைது செய்வதாக அறிவித்த காவல்துறையினர் குண்டுக்கட்டாக தூக்கி சென்று வாகனத்தில் ஏற்றி சென்றனர்.