Published:Updated:

'பால்மாட்டை விற்று கணவருக்கு மருத்துவம் பார்க்கும் மனைவி' - உதவி கிடைக்காமல் தவிக்கும் அவலம்!

அழகேந்திரன் மனைவியுடன்
அழகேந்திரன் மனைவியுடன்

'இடது கால் முழுவதும் அழுகியது போல் புண் ஏற்பட்டுவிட்டது' என கண் கலங்கினார் பேச்சியம்மாள்.

மதுரை மாவட்டம் மேலூர் எட்டிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அழகேந்திரன். கலப்பை தயார்செய்யும் தொழில் செய்துவந்த இவர், உடல்நிலை பாதிக்கப்பட்டதற்குப் பின் வீட்டிலேயே இருந்துவருகிறார்.

பேச்சியம்மாள்
பேச்சியம்மாள்

இதனால் அழகேந்திரனையும் குழந்தைகளையும் அவரது மனைவி பேச்சியம்மாள் கூலி வேலை செய்து காப்பாற்றிவந்தார். மேலும், அழகேந்திரனுக்கு சர்க்கரை நோய் அதிகமான காரணத்தால் அவருக்கு சிகிச்சையும் அளித்துவருகிறார்.

இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காலத்தில் அவர் வேலைக்குச் செல்ல முடியாததால், வீட்டில் கஷ்டம் ஏற்பட்டு வீட்டில் இருந்த பசுமாட்டையும் விற்று மருத்துவம் பார்த்துவருகிறார். இந்நிலையில் பேச்சியம்மாள், "என் கணவருக்கு சர்க்கரை நோய் தாக்கியதிலிருந்து வேலைக்குச் செல்ல முடியவில்லை.

இதனால் வீட்டில் ஓய்வு எடுத்துக்கொண்டு, நாங்கள் வளர்த்த பால்மாட்டை பார்த்துக்கொண்டார். என்னுடைய மகனும் மகளும் மேலூர் அரசு கலைக் கல்லூரியில் படித்துவருகின்றனர். இந்நிலையில் 100 நாள் வேலை, கட்டட வேலை என கிடைத்த வேலைக்குச் சென்று குடும்பத்தைக் கவனித்துவருகிறேன். கடந்த 6 மாதமாக என் கணவருக்கு சர்க்கரை நோய் தீவிரமடைந்து கால்களில் புண் ஏற்பட்டுவிட்டது. இதனால் இடது காலில் முழுமையாகப் புண் ஏற்பட்டு அழுகும்நிலைக்கு வந்துவிட்டது.

வீட்டில்
வீட்டில்

தற்போது, அலங்காநல்லூர் பகுதியில் உள்ள ஹோமியோபதி மருத்துவமனையில் என் கணவருக்கு சிகிச்சை செய்து வருகிறேன். ஓரளவு முன்னேற்றம் அடைந்துவருகிறார். தற்போது, கொரோனா சமயத்தில் பேருந்து வசதி இல்லாமல் இருப்பதால் வாடகை காரில் அழைத்துச் சென்றுவருகிறேன்.

மருத்துவம், போக்குவரத்து என்று கடன் எனக்கு அதிகமாகிவிட்டது. இதனால் எங்கள் வாழ்வாதாரமாக இருந்த பசுமாட்டை விற்று மருத்துவம்பார்க்கிறேன். தொடர்ந்து சிகிச்சை எடுத்துக்கொண்டால், என் கணவர் உடல்நிலை குணம் அடையும் என மருத்துவர் தெரிவித்துள்ளார்" என்று வேதனை தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு