Published:Updated:

`இது பட்டினிக் காலம், பண்டிகைக் காலம் அல்ல..!' -சேலம் மாநகராட்சியின் வசூலால் சீறும் வியாபாரிகள்

மார்க்கெட்
மார்க்கெட் ( எம்.விஜயகுமார் )

எங்க கடைகளுக்கு தினக் கூலித் தொழிலாளிகளும் அடித்தட்டு மக்களுமே அதிகம் வருகிறார்கள். இதையெல்லாம் உணராமல் வசூல் வேட்டையில் சிலர் ஈடுபடுகின்றனர்.

சேலம் மாநகராட்சியின் குத்தகைதாரர்கள், மார்க்கெட் வியாபாரிகளிடம் தினசரி வசூல் வேட்டை நடத்துவதால் கொந்தளிக்கின்றனர் வியாபாரிகள்.

''இது பண்டிகைக் காலம் அல்ல; பட்டினி காலம் என்பதை உணர்ந்து பெரிய லாபம் பார்க்காமல் வியாபாரம் செய்கிறோம். எங்க கடைகளுக்கு தினக் கூலித் தொழிலாளிகளும் அடித்தட்டு மக்களுமே அதிகம் வருகிறார்கள். இதையெல்லாம் உணராமல் வசூல் வேட்டையில் சிலர் ஈடுபடுகின்றனர். மாநகராட்சியும் இதைக் கண்டுகொள்வதில்லை" எனக் கோபத்தை வெளிப்படுத்துகின்றனர்.

மார்க்கெட்
மார்க்கெட்

லாக் டவுன் உத்தரவால் அனைத்துத் தரப்பு மக்களும் பாதித்துள்ளனர். அதனால் அனைத்துவிதக் கடன்களுக்கான இ.எம்.ஐ-களை 3 மாதங்களுக்குத் தள்ளி வைக்க ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியதால் நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கிகளே கடனுக்கான வட்டியைத் தள்ளி வைத்திருக்கிறது. ஆனால் சேலம் மாநகராட்சியில் குத்தகைதாரர்கள் மார்க்கெட் வியாபாரிகளிடம் பணம் வசூலிக்கத் தவறுவதில்லை.

இதுபற்றி நம்மிடம் பேசிய வியாபாரிகள், ''தினந்தோறும் சேலம் செவ்வாய்ப்பேட்டை பால் மார்க்கெட்டில் கடை போடுவது வழக்கம். கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த அரசு ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்ததால் பால் மார்க்கெட்டை மூடிவிட்டார்கள். சேலம் புதிய பேருந்து நிலையத்தில் தனிமனித இடைவெளிவிட்டு மார்க்கெட்டைத் தொடங்கினார்கள்.

டோக்கன்
டோக்கன்

அதையடுத்து நாங்கள் புதிய பேருந்து நிலையத்தில் தற்காலிகமாகக் கடைகள் போட்டுள்ளோம். எங்க கடைகளுக்கு தினக்கூலித் தொழிலாளிகளும் அடித்தட்டு மக்களுமே அதிகம் வருகிறார்கள். வெறும் பத்து ரூபாயை வைத்துக்கொண்டு சிலர் காய்கறிகள் கேட்கும்போது பரிதாபமாக இருக்கிறது.

இப்படிப்பட்ட நிலையில், மாநகராட்சி குத்தகைதாரர் தக்காளி ஆறுமுகம் மற்றும் மாநகராட்சி வருவாய் ஆய்வாளர்களான சாரதி தமிழ்மணி, கதிரவன் ஆகியோர் கடை போடுவதற்கு டோக்கனைக் கொடுத்து 200 ரூபாயை வசூலிக்கின்றனர். கேட் காசு என 50 ரூபாயை வசூலிக்கின்றனர். காலையில் மூன்று மணி நேரம் வியாபாரம் செய்கிறோம். இதில் இவர்களுக்கு 250 ரூபாய் கொடுத்துவிட்டால் எப்படிக் குறைந்த விலைக்குக் காய்கறிகள் விற்க முடியும்'' என்கின்றனர் கோபத்துடன்.

இதுகுறித்து குத்தகைதாரர் தக்காளி ஆறுமுகத்திடம் கேட்டபோது, ''ஒரு வருடத்திற்கு 52.80 லட்ச ரூபாய்க்குக் குத்தகை எடுத்திருக்கிறேன். ஒரு நாளைக்கு 16,500 ரூபாயை மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டும். இச்சூழ்நிலை உணர்ந்து மாநகராட்சி கமிஷனரிடம் கோரிக்கை வைத்தேன். அவர் கண்டுகொள்ளாததால் வசூலிக்கிறேன். மூட்டைகளுக்காக 200 ரூபாயும், கேட் காசு 50 ரூபாய் என 250 வசூலிக்கிறேன். மாநகராட்சி உத்தரவிட்டால் உடனே வசூலிப்பதை நிறுத்திக் கொள்வேன்'' என்றார்.

கமிஷனர் சதீஷ்
கமிஷனர் சதீஷ்

இதுதொடர்பாக, மாநகராட்சி கமிஷனர் சதீஷைத் தொடர்புகொண்டோம். அவர் போனை எடுக்காததால், மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசினோம். ''மாநகராட்சி மூலம் வசூலிக்கும் சொத்து வரி, வீட்டு வரி, குடிநீர் வரியை மட்டுமே அரசு வசூலிக்கக் கூடாது எனக் கூறியுள்ளனர். மார்க்கெட் வியாபாரிகளிடம் குத்தகைதாரர்கள் வசூலிப்பதைப் பற்றி அரசு எதுவும் கூறவில்லை'' என்றார்கள்.

அடுத்த கட்டுரைக்கு