Published:Updated:

`இது நிரந்தரம் அல்ல; தலைக்கு மேல் தொங்கும் கத்தி!'- புதிய ஆய்வை மேற்கொள்ளும் ஓ.என்.ஜி.சி?

இது தலைக்கு மேல் தொங்கிக்கொண்டிருக்கும் கத்தி” என எச்சரிக்கிறார் டாக்டர் பாரதிச்செல்வன்!

எரிவாயு எடுக்கும் திட்டம்
எரிவாயு எடுக்கும் திட்டம்

தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஷேல் கேஸ் எடுக்க ஓ.என்.ஜி.சி நிறுவனம் திட்டமிட்டிருந்தது. இதற்கான ஆய்வுப்பணிகள் இந்தியாவின் மற்ற பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது இத்திட்டத்தைக் கைவிடுவதாக ஓ.என்.ஜி.சி நிறுவனம் அறிவித்துள்ளது.

டாக்டர் பாரதிச்செல்வன்
டாக்டர் பாரதிச்செல்வன்

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, காவிரி டெல்டா மக்களின் தொடர் போராட்டங்களின் காரணமாகவே இத்திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் ஆலோசகர் டாக்டர் பாரதிச்செல்வன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அதேசமயம் இத்திட்டம் எதிர்காலத்தில் தொடங்கப்படுவதற்கான ஆபத்து இருப்பதாகவும், இது தலைக்கு மேல் தொங்கிக்கொண்டிருக்கும் கத்தி” எனவும் எச்சரிக்கிறார்.

இதுகுறித்து நம்மிடம் விரிவாகப் பேசும் இவர், ``2013-ம் ஆண்டு தமிழ்நாட்டில் ஒன்பது வட்டாரங்கள் உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மொத்தம் 50 வட்டாரங்களில் ஷேல் கேஸ் எடுப்பதற்கான ஆய்வை மேற்கொள்ள ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்கு, மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் அனுமதி அளித்திருந்தது. குஜராத் மாநிலம் காம்பே, அஸ்ஸாம் மாநிலம் அரகான், ஆந்திராவில் கிருஷ்ணா-கோதாவரி பகுதிகளில் 700 கோடி ரூபாய் செலவில் ஆய்வு நடத்தியது ஓ.என்.ஜி.சி நிறுவனம். அங்கு லாபகரமாக விற்பனை செய்யும் அளவுக்கு ஷேல் கேஸ் வளம் இல்லாததாலும், தமிழ்நாட்டில் காவிரிப்படுகையில் ஆய்வு மேற்கொள்ள முடியாத அளவுக்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததாலுல் இத்திட்டத்தைக் கைவிடுவதாக ஓ.என்.ஜி.சி நிறுவனம் அறிவித்துள்ளது.

ஓ.என்.ஜி.சி
ஓ.என்.ஜி.சி

இது மக்களின் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றியாகும். மக்களின் கடும் எதிப்பின் காரணமாக, இங்கு ஆய்வுப்பணிகள்கூட தொடங்கப்படவில்லை. தற்போது இத்திட்டத்தையே ஓ.என்.ஜி.சி நிறுவனம் கைவிட்டுள்ளது. ஷேல் கேஸ் திட்டத்தின் பாதிப்பிலிருந்து மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளார்கள். ஆனால், அதேசமயம் இது நிரந்தரம் அல்ல. இந்தியாவில் உள்ள ஷேல் கேஸ், நிலக்கரிப்படுகை மீத்தேன் உள்ளிட்ட ஹைட்ரோ கார்பன் வளங்களை, பன்னாட்டு நிறுவனங்களின் உதவியுடன் தெளிவாகக் கண்டறிவதற்கான புதிய ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என மத்திய பெட்ரோலிய அமைச்சகத்துக்கு கோரிக்கை வைத்துள்ளதாகவும், அது அங்கு பரிசீலனையில் உள்ளதாகவும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே, எதிர்காலத்தில் மீண்டும் இதுபோன்ற ஆபத்து எழுந்ததால், அமைதி வழிப்போராட்டங்களின் மூலமாகவே மக்கள் தங்கள தற்காத்துக் கொள்ள முடியும். இது ஒருபுறமிருக்க, பன்னாட்டு நிறுவனமான வேதாந்தா உள்ளிட்ட சில நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டங்கள் ரத்து செய்யப்படவில்லை” எனத் தெரிவித்தார்.