Published:Updated:

கொரோனா... தனது தனியார் மருத்துவமனையை வழங்கிய மேட்டுப்பாளையம் மருத்துவர்! -குவியும் பாராட்டு

மகேஸ்வரன்
மகேஸ்வரன்

கோவை மேட்டுப்பாளையத்தில் தனியார் மருத்துவர் ஒருவர் தனது மருத்துவமனையை கொரோனா உபயோகத்துக்காக அரசாங்கத்துக்கு வழங்கியுள்ளார்.

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கொரோனாவைத் தடுக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், ஆதரவற்ற மக்களுக்கு உணவு வழங்குவது. மளிகைப் பொருள்கள் வழங்குவது என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் தங்களாலான பணிகளைச் செய்து வருகின்றனர்.

கொரோனா
கொரோனா

அதேபோல, அரசியல் கட்சிகளும் பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றன. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் மகேஸ்வரன், கொரோனா உபயோகத்துக்காக அவர் நடத்தி வரும் `சுப' மருத்துவமனையை அரசாங்கத்துக்கு ஒப்படைத்துள்ளார்.

இதுகுறித்து மருத்துவர் மகேஸ்வரன், ``கொரோனா தொடர்பாக பிரதமர் ஒருநாள் சுய ஊரடங்கு உத்தரவுக்கு அழைப்பு விடுத்தபோதே எனக்குள் ஓர் எண்ணம் ஓடியது. பின்வரும் நாள்கள் எளிதாக இருக்காது என்று தோன்றியது. அதற்கு முன்னரே, எங்கள் மருத்துவமனையை அரசு பயன்படுத்திக் கொள்ளலாம் என வாக்கு தரலாம் என்று யோசித்தேன். குடும்பத்தினரிடம் பேசினேன்.

சுப மருத்துவமனை
சுப மருத்துவமனை

அவர்கள் சம்மதம் தெரிவித்தனர். அடுத்ததாக, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர், எம்.எல்.ஏ ஆகியோரிடம் பேசினேன். அவர்கள் மூலம் அரசாங்கத்துக்கு தகவல் சென்றுவிட்டது. சில நாள்களுக்கு முன்பு முதல்வரின் தனிப்பிரிவில் இருந்து அழைத்து தகவல்களை கேட்டுக்கொண்டனர்.

எங்களது மருத்துவமனையில் 60 பெட்கள் இருக்கின்றன. ஆனால், `கொரோனோ நோயாளிகளை அரசு மருத்துவமனையில் வைத்துதான் சிகிச்சை கொடுக்க முடியும். இருந்தாலும் உங்கள் மருத்துவமனையையும் நாங்கள் வேறு உபயோகங்களுக்கு பயன்படுத்திக் கொள்கிறோம்' என்று கூறினர். கொரோனா பணி காரணமாக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் வீட்டுக்குச் செல்ல முடியாது.

மருத்துவர் மகேஸ்வரன்
மருத்துவர் மகேஸ்வரன்

அவர்கள் எங்களது மருத்துவமனையில்தான் தங்கி வருகின்றனர். அரசாங்கத்துக்கு எல்லோருமே பணமாக கொடுப்பதைவிட, நம்மால் முடிந்த பணிகளைச் செய்து அரசின் பணியை எளிமைப்படுத்த வேண்டும்" என்றார்.

மகேஸ்வரனைத் தொடர்ந்து, இந்துஸ்தான் குழுமமும் தங்களது மருத்துவமனையை அரசு உபயோகத்துக்கு வழங்கியுள்ளனர். கொரோனாவின் அச்சுறுத்தல் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், பல தனியார் மருத்துவமனைகள் பூட்டிவிட்டு சென்றுவிட்டனர்.

இந்துஸ்தான் மருத்துவமனை
இந்துஸ்தான் மருத்துவமனை

அவர்களுக்கு மத்தியில், மகேஸ்வரன் மற்றும் இந்துஸ்தான் குழுமத்தின் உதவி நிச்சயம் வரவேற்கத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு