Published:Updated:

`சிக்கனுக்கு கூட்டம்; வெஜ்ஜுக்கு ஆள் இல்லை!' -ராமாவரத்தில் களைகட்டிய எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா

எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவில் அமைச்சர்கள்
எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவில் அமைச்சர்கள்

எம்.ஜி.ஆர் பிறந்தநாளையொட்டி அமைச்சர்கள் ராமாவரம் தோட்டத்துக்குச் சென்று சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் சிறப்பாகக் கொண்டப்பட்டது. எம்.ஜி.ஆரின் சிலை மற்றும் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து அ.தி.மு.க-வினர் மரியாதை செலுத்தினர். இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். இந்த நிலையில், எம்.ஜி.ஆர் வாழ்ந்த ராமாவரம் தோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் பெஞ்சமின், பாண்டியராஜன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் நடந்த விழாவில் கலந்துகொண்டு உதவிகளை வழங்கினர்.

எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா
எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா

இந்த விழாவில் எம்.ஜி.ஆர் பேரன் ராமச்சந்திரன் மற்றும் குடும்பத்தினர் கலந்துகொண்டனர். எம்.ஜி.ஆரின் குடும்பத்தினருடன் கேக் வெட்டி அமைச்சர்கள், அ.தி.மு.க-வினர் கொண்டாடினர். அந்தக் கேக்கில் 103-வது பிறந்தநாள், தலைவா என்று எழுதப்பட்டிருந்தது. மேலும், இரட்டை இலைச் சின்னமும் வரையப்பட்டிருந்தது. விழாவில் அ.தி.மு.க சிறுபான்மைப் பிரிவைச் சேர்ந்த ஜெ.எம்.பஷீர் மற்றும் பென்ஸ் சரவணன் ஆகியோர் ஆயிரம் பேருக்கு சிக்கன் பிரியாணி வழங்கினர்.

இந்தச் சமயத்தில் சிறுபான்மைப் பிரிவைச் சேர்ந்த முன்னாள் எம்.பி ஒருவர் வெஜ் பிரியாணியை ராமாவரம் தோட்டத்துக்கு கொண்டுவந்தார். பின்னர் அவர் அங்கிருந்தவர்களுக்கு பிரியாணி வழங்கியுள்ளார். ஆனால், அந்தப் பிரியாணியை சாப்பிட யாரும் ஆர்வம் காட்டவில்லை. அதனால் வெஜ் பிரியாணி காலியாகவில்லை. அதே நேரத்தில் சிக்கன் பிரியாணியைச் சாப்பிட கூட்டம் அலைமோதியது.

எம்.ஜி.ஆர்  பிறந்த நாள் விழா
எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா

இதுகுறித்து விழாவில் கலந்துகொண்டவர்கள் கூறுகையில், ``ராமாவரம் தோட்டத்தில் கொண்டாடப்படும் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழாவை அ.தி.மு.க-வில் உள்ள முக்கிய நிர்வாகிகள் யாரும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக சிறுபான்மைப் பிரிவு சார்பில் சிக்கன் பிரியாணி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நடந்த விழாவில் 2 அமைச்சர்கள் கலந்துகொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது" என்றனர்

ராமாவரம் தோட்டத்தில் நடக்கும் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழாவில் கடந்த ஆண்டு அமைச்சர்கள், அ.தி.மு.க முக்கிய நிர்வாகிகள் யாரும் கலந்துகொள்ளவில்லை. ஆனால், இந்த ஆண்டு எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி ராமாவரம் தோட்டத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரவுள்ளதாக தகவல் வெளியானது. அதுதொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் காவல்துறையினர் செய்யத் தொடங்கினர்.

கேக் வெட்டும் எம்.ஜிஆர். பேரன்
கேக் வெட்டும் எம்.ஜிஆர். பேரன்

இந்த நிலையில், விழாவில் முதல்வர் பங்கேற்கவில்லை என்ற தகவல் சொல்லப்பட்டுள்ளது. அதன்பிறகுதான் 2 அமைச்சர்கள் விழாவில் பங்கேற்றுள்ளனர். அமைச்சர்கள் ராமாவரம் தோட்டத்தில் நடந்த பிறந்தநாள் விழாவில் பங்கேற்றது எம்.ஜி.ஆரின் குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு