Published:Updated:

`பணம் இல்லைன்னாலும் எப்படியாவது கட்டச் சொல்றாங்க!’- மிரட்டும் மைக்ரோஃபைனான்ஸ் நிறுவனங்கள்?

கழுத்தை நெரிக்கும் மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்கள்
கழுத்தை நெரிக்கும் மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்கள்

``இப்போ பணம் இல்லைன்னு சொன்னாலும் எப்படியாவது கட்டுங்க.இல்லைன்னா வட்டியோட கட்டுறமாதிரி இருக்கும்னு சொல்லி மிரட்டுறாங்க. வேலையில்லை, கையில் பணமும் இல்லை என்ன செய்யிறதுன்னே தெரியலை"

நாடு முழுவதும் மே 31-ம் தேதி வரையிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகள் விதிக்கப்பட்டுள்ளன. சிலர் அன்றாட வாழ்க்கையைத் தொடங்கிவிட்டாலும், பலரும் இன்னும் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலைதான் உள்ளது. குறிப்பாக, கூலித் தொழில் செய்பவர்களுக்கு அடுத்தடுத்து வேலை கிடைக்கவில்லை. கூலித்தொழிலாளர்கள், நடுத்தர வர்க்கத்தினர் பழைய நிலைக்குத் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இவர்கள் சுய உதவிக்குழு என்ற பெயரில் மாதக் கடன், வாரக் கடன் என இவர்களைக் குறிவைத்தே இயங்கும் மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்களில் பணம் பெற்று கடனைச் செலுத்தி வருகின்றனர்.

கொரோனா
கொரோனா

தற்போது, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதிலிருந்து வேலைவாய்ப்பு இல்லாததால், பணத்தைத் திருப்பி செலுத்த முடியாத நிலை. இந்த நிலையில்தான், தற்போது இந்த மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்கள் பணத்தைக் கட்டச் சொல்லி வாடிக்கையாளருக்கு நெருக்கடி கொடுத்து வருவதாகப் புகார் எழுந்திருக்கிறது. கூலித்தொழிலாளர்கள் பலரும் என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பி வருகின்றனர். இதற்கிடையே புதுக்கோட்டையைச் சேர்ந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர், நெருக்கடி கொடுக்கும் மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

மாவட்ட ஆட்சியரிடம் அளித்த கோரிக்கை மனுவில், ``மத்திய, மாநில அரசுகள் கால அவகாசம் அளித்தும், தனிப்பட முறையில் வாடிக்கையாளர்களை அழைக்கும் மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்கள் கடனை உடனே திரும்பச் செலுத்தச் சொல்வதுடன், கடனுக்கான தவணையை உடனே செலுத்தவில்லை என்றால், வட்டியோடு சேர்த்துக் கட்ட வேண்டும் எனக் கந்துவட்டிக்காரர்கள் போல வாடிக்கையாளர்களை மிரட்டுகின்றனர். இந்தச் சூழலில் இதுபோன்று கடுமையாக நடந்துகொள்ளும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பணம் கட்டுவதற்கான கால அவகாசத்தையும் நீட்டிக்க வேண்டும். தவணைக் கட்டாத மாதங்களுக்கு வட்டி கேட்கக்கூடாது என்று உடனே அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும்" இவ்வாறு தெரிவித்திருந்தனர்.

மைக்ரோ ஃபைனான்ஸ்
மைக்ரோ ஃபைனான்ஸ்

கடன்பெற்ற கூலித்தொழிலாளி ஒருவரிடம் கேட்டபோது, ``தினமும் கடன் கட்டச் சொல்லி போன் பண்றாங்க. இப்போ, பணம் இல்லைன்னு சொன்னாலும் எப்படியாவது கட்டுங்க. இல்லைன்னா வட்டியோட கட்டுறமாதிரி இருக்கும்னு சொல்லி மிரட்டுறாங்க. வேலையில்லை, கையில் பணமும் இல்லை என்ன செய்யிறதுன்னே தெரியலை" என்று புலம்புகிறார்.

இதுபற்றி மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவன அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது,``உயர் அதிகாரி உத்தரவின் பேரில், வாடிக்கையாளர்களைத் தொடர்புகொண்டு இப்போது உங்களால் பணம் கட்ட முடியுமா? என்று விசாரித்து, பணம் கட்ட முடியும் என்பவர்களைக் கட்டச் சொல்கிறோம். மற்றபடிக் கட்டாயப்படுத்தவோ, நெருக்கடியோ ஏதும் கொடுக்கவில்லை" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு