Published:Updated:

`விசைப்படகிலேயே சமையல்.. அங்கேயே உறக்கம்!' - 48 நாள்களாகத் தவிக்கும் 300 தொழிலாளர்கள்

படகில் சமைக்கும் வடமாநிலத் தொழிலாளர்கள்
படகில் சமைக்கும் வடமாநிலத் தொழிலாளர்கள்

தங்குவதற்கு இடம் இல்லாததால் சுமார் 48 நாள்களாக விசைப்படகிலேயே சமைத்து உண்டு அங்கேயே உறங்கி நாள்களைக் கடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து ஆழ்கடல் மீன்பிடித் தொழிலுக்குச் செல்லும் மீனவர்களுடன் வெளி மாநிலத் தொழிலாளிகளும் செல்வது வழக்கம். ஆண்டு முழுவதும் மீன்பிடித் தொழிலுக்குச் செல்லும் வடமாநிலத் தொழிலாளர்கள் மீன்பிடித் தடைக்காலத்தில் தங்கள் சொந்த ஊருக்குச் செல்வார்கள். பின்னர் தடைக்காலம் நிறைவடைந்ததும் மீண்டும் மீன்பிடித் தொழிலுக்குத் திரும்புவார்கள்.

இப்போது கொரோனா லாக்டெளன் காரணமாக வடமாநிலத் தொழிலாளர்கள் மீன்பிடிக்கவும் செல்ல முடியவில்லை, ஊருக்கும் போக வழியில்லாமல் உள்ளனர். மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் தங்களை ஊருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் விண்ணப்பித்துள்ளனர். இதற்கிடையில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்களை ஊருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கக்கோரி நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

படகில் வாழ்க்கை
படகில் வாழ்க்கை

வெளிமாநிலத் தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பிவைக்க அரசும் அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்தநிலையில் தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் சுமார் 300 பேர் தவித்துவருகின்றனர். அவர்களுக்குத் தங்குவதற்கு இடம் இல்லாததால் சுமார் 48 நாள்களாக விசைப்படகிலேயே சமைத்து உண்டு அங்கேயே தூங்கி நாள்களை நகர்த்தி வருகின்றனர்.

`ஊரடங்கு; பழைமையான படகு; 2 மூட்டை அரிசி!' - அதிகாரிகளை மிரளவைத்த 1000 கி.மீ கடல் பயணம்

அவர்களுக்கு தேவையான அரிசி, காய்கறி போன்ற பொருட்களை விசைப்படகு உரிமையாளர்கள் வழங்கி வருகின்றனர். அந்தப் பொருட்களைக் கொண்டு படகிலேயே சமையல் செய்து சாப்பிட்டு வருகின்றனர். வெளியில் தங்குவதற்கு வேறு இடம் இல்லை என்பதால் படகிலேயே வசித்துவருவதாகவும் கூறுகின்றனர்.

துறைமுகத்தில் வடமாநில தொழிலாளர்கள்
துறைமுகத்தில் வடமாநில தொழிலாளர்கள்

படகில் வசிக்கும் வடமாநில தொழிலாளர்கள் கூறுகையில், "நாங்கள் மீன்பிடித் தொழிலுக்குச் சென்றுவந்தோம். கடந்த 48 நாட்களாக எங்களுக்குத் தொழில் இல்லாததால் வருமானமும் இல்லை. தமிழக அரசு வெளி மாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்வதாக அறிவித்துள்ளது. எங்களை விரைந்து ஊருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு