Published:Updated:

`வட மாநிலத் தொழிலாளர்கள் போராட்டத்தில் வன்முறை’ -கூடங்குளத்தில் காவலர் படுகாயம், பதற்றம்!

அணு உலை வளாகத்தில் தொழிலாளர்கள் போராட்டம்
அணு உலை வளாகத்தில் தொழிலாளர்கள் போராட்டம்

கூடங்குளம் அணு உலையின் கட்டுமானப் பணிகளில் வட மாநிலத் தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். அவர்களைச் சொந்த ஊருக்கு அனுப்ப அனுமதி மறுக்கப்படுவதால் வன்முறையில் ஈடுபட்டனர். 

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் இரு அணு உலைகளின் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கூடுதலாக இரு அணு உலைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. 

கூடங்குளம் அணு உலை
கூடங்குளம் அணு உலை

3 மற்றும் 4-வது அணு உலைகளுக்கான கட்டுமானப் பணிகளை எல் அண்ட் டி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இந்தப் பணியில் 4,800 வட மாநிலத் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக ஒரு மாதத்துக்கும் மேலாகப் பணிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் ஒரு வாரத்துக்கு முன்பு, மீண்டும் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன.

அடிக்கடி சுவரேறிக் குதிக்கும் நபர்... அச்சத்தில் மக்கள்... இது கூடங்குளம் அணு உலை சர்ச்சை!

பணிகள் தொடங்கிய போது, சமூக இடைவெளி இல்லாமலும் மாஸ்க் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமலும் தொழிலாளர்கள் பணியாற்றுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த நிலையில், தங்களைச் சொந்த ஊருக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் எனக் கடந்த 4-ம் தேதி வட மாநிலத் தொழிலாளர்கள் பணிகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

போலீஸாருடன் வாக்குவாதம்
போலீஸாருடன் வாக்குவாதம்

அப்போது பேச்சுவார்த்தை நடத்திய அணு உலை நிர்வாகத்தினரும் விரைவில் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதாகத் தெரிவித்தனர். ஆனால், இதுவரை அவர்களைச் சொந்த மாநிலத்துக்கு அனுப்ப எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் அதிருப்தியடைந்த தொழிலாளர்கள் இன்று வேலையைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தாங்கள் தங்கியிருக்கும் லேபர் கேம்ப் பகுதியில் இருந்த இரும்பு கேட்டை உடைத்து எறிந்தனர். அதனால் கூடங்குளம் போலீஸார் அவர்களைக் கட்டுப்படுத்த முயன்றார்கள். ஆனால் வெளி மாநிலத் தொழிலாளர்கள் போலீஸார் மீது கற்களை வீசியும் தடிகளால் அடித்தும் தாக்குதல் நடத்தினார்கள். 

காயமடைந்த காவலர் சக்திவேல்
காயமடைந்த காவலர் சக்திவேல்

இதில் கூடங்குளம் பெண் இன்ஸ்பெக்டர் ஜெகதா தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. காவலர் சக்திவேல் என்பவருக்கு மண்டை உடைந்தது. சம்பவ இடத்துக்கு நெல்லை மாவட்ட எஸ்.பி-யான ஓம்பிரகாஷ் மீனா நேரில் சென்று பார்வையிட்டார். சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை அணு உலை நிர்வாகத்தைச் சந்தித்து தொழிலாளர்களின் கோரிக்கை குறித்து விவாதித்தார்.

இந்தப் பிரச்னை குறித்து வட மாநிலத் தொழிலாளர்கள் தரப்பினர் கூறுகையில், “வெளி மாநிலங்களைச் சேர்ந்த நாங்கள் அணு உலை வளாகத்திலேயே தங்கியிருந்து வேலை செய்கிறோம். எங்களோடு சேர்ந்து உள்ளூர் தொழிலாளர்களும் வேலை செய்கிறார்கள். 

உள்ளூர்காரர்கள் எங்களோடு வேலை செய்வதால், எங்களுக்குக் கொரோனா பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் உள்ளது.
வெளி மாநிலத் தொழிலாளர்கள்

தற்போது தமிழகத்தில் கொரோனா வேகமாகப் பரவிவரும் நிலையில், அவர்கள் எங்களோடு பணியாற்ற வருவது எங்களுக்குக் கொரோனா அச்சத்தை ஏற்படுத்துகிறது. அதனால்  எங்களை மட்டுமே வேலை செய்ய அனுமதிக்க வேண்டும்.

இதுவரை நாங்கள் உள்ளூரைச் சேர்ந்த சிறிய கான்ட்ராக்டர்களின் கீழ் வேலை செய்து வந்தோம். அவர்கள் எங்கள் பெயரில் எல்.அண்ட் டி நிர்வாகத்திடம் அதிகமான கூலியை வாங்கிக் கொண்டு சொற்பத் தொகையையே கொடுத்திருக்கிறார்கள்.

போராடும் தொழிலாளர்கள்
போராடும் தொழிலாளர்கள்

இப்போது வேலை நிறுத்தப்பட்டிருப்பதால் எல் அண்ட் டி நிர்வாகமே எங்களுக்கு நேரடியாக ஒரு மாதச் சம்பளத்தைக் கொடுத்தபோது நாங்கள் இதுவரை ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இந்தக் கோபத்துக்கிடையே எங்களைச் சொந்த ஊருக்குச் செல்ல அனுமதிக்க மறுத்ததால் வன்முறை ஏற்பட்டுவிட்டது” என்கிறார்கள். 

வெளி மாநிலத் தொழிலாளர்கள் விவகாரத்தில் சரியான வழிகாட்டு நெறிமுறைகளைக் கையாள வேண்டிய கட்டத்துக்குத் தமிழக அரசு வந்திருப்பதையே இந்தக் கலவரம் சுட்டிக் கட்டுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு