Published:Updated:

`பிழைப்பு இல்லை; பசியோடு சாக வேண்டுமா?'- கலெக்டரிடம் கண்கலங்கிய வடமாநிலத் தொழிலாளர்கள்

வட மாநிலத்தவர்கள்
வட மாநிலத்தவர்கள்

நாங்கள் எத்தனை நாள்தான் பிழைக்க வழியில்லாமல் பசியோடு வாழ்வது. நாங்கள் பொறுக்கலாம். சிறு பிள்ளைகளால் பொறுக்க முடியுமா?

"ஊரடங்கு உத்தரவு இன்று சரியாகிவிடும் நாளை சரியாகிவிடும் என்று பல நாள்கள் கடந்துவிட்டோம். நிலைமையும் சரியாகவில்லை. சாப்பாட்டிற்கே வழியில்லாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். எங்களைச் சொந்த ஊருக்கு அனுப்பிவிடுங்கள்" என்று 50-க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

வடமாநிலத்தவர்கள்
வடமாநிலத்தவர்கள்

கொரோனா வைரஸ் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பல நாடுகளில் ஊரடங்கு முடிந்தும் நீடிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் மே 17-ம் தேதி வரையிலும் மூன்றாவது முறையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது. இன்றளவும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த நிலையில், அத்தியாவசியத் தேவைகள் தவிர மக்கள் யாரும் வெளியே வரக் கூடாது எனத் தெரிவித்தார். அதன்படி, அத்தியாவசியத் தேவைகளான காய்கறி, மளிகைக் கடைகள், பெட்ரோல் பங்குகள் தவிர அனைத்துத் தொழில்களும் முடங்கின. இதனால் வருமானத்துக்கே வழியில்லாததால் தினக்கூலி தொழிலாளர்கள் என்ன செய்வது எனத் தெரியாமல் உணவுக்கு வழியின்றித் தவித்து வருகின்றனர். சாலையோர வாசிகள், ஆதரவற்றோர் மற்றும் பிஞ்சுக் குழந்தைகள் ஒருபிடி சோற்றுக்குக் கையேந்தும் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த ஊரடங்கால் தமிழ்நாட்டிற்கு வேலைக்காக வந்த வெளிமாநிலத் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். வாகனப் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதால், சில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு நடைப்பயணமாகச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் பல மாவட்டங்களில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் உள்ளனர்.

பெரம்பலூர் கலெக்டர் ஆபீஸ்
பெரம்பலூர் கலெக்டர் ஆபீஸ்

அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் ராஜஸ்தான், பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், வீடுகளில் டைல்ஸ் ஒட்டுவது, கிரானைட் பதிப்பது உள்ளிட்ட பணிகளைச் செய்து வந்தனர். கொரோனா பாதிப்பால் ஒரு மாத காலமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் வேலையின்றித் தவிக்கும் அவர்கள் தங்கள் சொந்த மாநிலத்திற்குச் செல்ல முடிவெடுத்தனர். இதையடுத்து பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தை அவர்கள் முற்றுகையிட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் பேசுகையில்,``ஊரடங்கு உத்தரவு இன்று சரியாகிவிடும். நாளை சரியாகிவிடும் என்று பல நாள்கள் கடந்துவிட்டோம். நிலைமையும் சரியாகவில்லை அதிகமாகிக்கொண்டே செல்கிறது. நாங்கள் எத்தனை நாள்தான் பிழைக்க வழியில்லாமல் பசியோடு வாழ்வது.

வட மாநிலத்தவர்கள்
வட மாநிலத்தவர்கள்

நாங்கள் பொறுக்கலாம். சிறு பிள்ளைகளால் பொறுக்க முடியுமா? சாப்பாட்டுக்குச் சாவதா? எங்களை எப்படியாவது எங்களது ஊருக்கு அனுப்புங்கள் என்று ஆட்சியரிடம் மனுகொடுக்க வந்தோம். வெளிநாடுகளில் இருப்பவர்களை எல்லாம் தனி விமானம் மூலம் இந்தியாவுக்குப் பத்திரமாக அழைத்து வருகின்றனர். ஆனால், எங்களைச் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பிவைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்று வேதனைப்பட்டனர்.

அடுத்த கட்டுரைக்கு