Published:Updated:

`காவல்துறையினர் வீடுகளுக்கு விநியோகம் கிடையாது’ -பால் முகவர்கள் சங்கம் அதிரடி

பால்
பால்

`காவல்துறையினரால் ஏற்படும் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை, காவலர்கள் தொடங்கி உயரதிகாரிகள் வரை அவர்கள் வீடுகளுக்கு பால் விநியோகம் செய்யப்போவதில்லை' - என்கிறார்கள் பால் முகவர்கள் சங்கத்தினர்.

சாத்தான்குளம் வியாபாரிகளான தந்தை-மகன், சிறையில் மரணமடைந்ததாக எழுந்த குற்றச்சாட்டு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அதற்கு நியாயம் கேட்டு தமிழகம் முழுவதும் வியாபாரிகள் உட்பட பல்வேறு அமைப்புகள் போராட்டங்கள், கடையடைப்பு முதலியன நடத்திவரும் நிலையில், காவல்துறையினர் வீடுகளுக்கு பால் விநியோகம் செய்ய மாட்டோம் என்று பால் முகவர்கள் சங்கம் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஊரடங்கு - காவல்துறை தீவிர கண்காணிப்பு!
ஊரடங்கு - காவல்துறை தீவிர கண்காணிப்பு!
தே.அசோக்குமார்

இதுபற்றி தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமியிடம் கேட்டோம், ''கொரோனா ஊரடங்கில் கஷ்டங்களைப் பொருட்படுத்தாது பால் முகவர்கள் மக்களுக்கு சேவை செய்துவருகிறார்கள். ஆனால், அப்படி சேவை செய்யும் எங்களை காவல்துறையினர் மிக மோசமாக நடத்துகிறார்கள்.

அத்தியாவசிய உணவுப் பொருளான பால் விநியோகம் செய்ய 1.5 லட்சம் பால் முகவர்கள் தமிழகம் முழுவதும் உள்ளனர். அதிலும் கொரோனா பேரிடர் காலத்தில் மக்களுக்கு பால் தங்குதடையின்றி கிடைக்க வேண்டும் என்கிற நோக்கத்தில், தகுந்த பாதுகாப்போடு பால் விநியோகம் செய்துவருகிறார்கள்.

சு,ஆ.பொன்னுச்சாமி
சு,ஆ.பொன்னுச்சாமி

அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பால் விநியோகத்திற்கும், விற்பனைக்கும் தடைஇல்லை என்று அரசு அறிவித்துள்ள நிலையில், சென்னை உட்பட பல மாவட்டங்களில் பால் முகவர்களை விநியோகம் செய்ய விடாமல் தடுப்பது, வாகனங்களைத் தடுப்பது, வாகனங்களைப் பறிமுதல்செய்வது, விற்பனை நிலையங்களை மூடச் சொல்லி மிரட்டுவது என காவல்துறையினர் தினமும் தொந்தரவுசெய்கின்றனர்.

சமீபத்தில், சென்னையில் பால் விநியோகம் செய்தவரிடம் கடுமையாக நடந்துகொண்ட காவல்துறையினர், அவர் குடும்பத்தினரையும் இழிவாகப் பேசியுள்ளனர். இதுபோன்ற கொடுமைகளைப் பலரும் சந்தித்துவருகிறார்கள்.

இதுபற்றி தமிழக முதல்வர், பால்வளத்துறை அமைச்சர், காவல்துறை தலைவர், ஆணையாளர் கவனத்திற்குக் கொண்டு சென்றும், இதுவரை எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. எனவே, நாளை முதல் காவல்துறையினர் வீடுகளுக்கு பால் விநியோகம் செய்வதில்லை என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் அவசர முடிவு எடுத்துள்ளோம்.

பால்
பால்

எங்களுக்கு காவல்துறையினரால் ஏற்படும் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை, காவலர்கள் தொடங்கி உயரதிகாரிகள் வரை அவர்கள் வீடுகளுக்கு பால் விநியோகம் செய்யப்போவதில்லை'' என்றார்.

ஏற்கெனவே காவல்துறையினரை எதிர்த்து வியாபாரிகள், மருந்துக்கடைகாரர்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில், ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு பால் விநியோகம் செய்பவர்களும் பாதிக்கப்பட்டு இப்படி ஒரு முடிவு எடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தை அரசு உடனே கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது கருத்தாகவும் இருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு