Published:Updated:

திருவாரூர்: ஆம்புலன்ஸே இல்லாத அரசு மருத்துவமனை; 15 நிமிடங்களில் ஏற்பாடு செய்த அமைச்சர்!

அமைச்சர் மெய்யநாதன்
அமைச்சர் மெய்யநாதன்

கடந்த சில தினங்களுக்கு முன்பு 33 வயது இளைஞர் சத்தியதாசன் உயிரிழந்த பரிதாபத்தையும், அந்தப் பத்திரிகையாளர் அமைச்சர் மெய்யநாதனிடம் சுட்டிக்காட்டினார். இதைக் கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்த அமைச்சர், அதிரடி ஆக்ஷனில் இறங்கினார்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு பொது மருத்துவனை ஒன்றில் ஆக்சிஜனுடன் கூடிய ஆம்புலன்ஸ் இல்லாததால், நோயாளிகள் பலர் உயிரிழக்கக்கூடிய அவலம் நிலவியது. கொரோனா ஆய்வுப்பணிக்காக வந்த அமைச்சரிடம் பத்திரிகையாளர் ஒருவர் இதை சுட்டிக்காட்டினார். அமைச்சரின் அதிரடி நடவடிக்கையால், அடுத்த 15 நிமிடத்தில் ஆக்சிஜனுடன் ஆம்புலன்ஸ் அந்த மருத்துவமனை முன்பு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. இது பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றுள்ளது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில், தேவையான அடிப்படை வசதிகள் இல்லாததால், இப்பகுதி மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகிறார்கள். குறிப்பாக, இந்த மருத்துவமனையில் ஒரு ஆம்புலன்ஸ் கூட கிடையாது. தமிழக அரசு மாநில அளவில் செயல்படுத்தக்கூடிய 108 ஆம்புலன்ஸை மட்டுமே இப்பகுதி மக்கள் முழுமையாக நம்பியிருக்க வேண்டிய சூழலில் இருந்து வந்தார்கள். ஆனால் உரிய நேரத்தில் 108 ஆம்புலன்ஸும் கிடைப்பதில்லை.

ஆக்சிஜனுடன் கூடிய ஆம்புலன்ஸ்
ஆக்சிஜனுடன் கூடிய ஆம்புலன்ஸ்

வழக்கமான காலங்களில் சாதாரண ஆம்புலன்ஸ் கிடைப்பதே இங்கு எளிதான காரியமல்ல. தற்போது கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிக அளவில் பரவி வரும் சூழலில், ஆக்சிஜனுடன் கூடிய ஆம்புலன்ஸை இப்பகுதி மக்கள் கற்பனை செய்துகூட பார்க்க முடியாதல்லவா? இதனால் சில உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.

திருவாரூர்-நாகப்பட்டினம் எல்லையில் உள்ள துளசய்யாபுரத்தைச் சேர்ந்த 33 வயது இளைஞர் சத்தியதாசன், கொரோனா பாதிப்பினால் திருத்துறைப்பூண்டி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். ஆக்சிஜன் அளவு குறைந்ததால், மேல் சிகிச்சைக்காக, அந்த இளைஞரை உடனடியாக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆக்சிஜனுடன் கூடிய தனியார் ஆம்புலன்ஸ் கொண்டு வர இவரது குடும்பத்தினர் நீண்ட நேரம் போராடியிருக்கிறார்கள். இதில் காலதாமதம் ஏற்பட்டதால், அந்த இளைஞர் உயிரிழந்ததாகத் திருத்துறைப்பூண்டி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கிறார்கள்.

இந்நிலையில்தான், சுற்றுச்சூழல் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தடுப்பூசி மையங்களை ஆய்வு செய்வதற்காகவும், இம்மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளைப் பார்வையிடுவதற்காகவும் இங்கு வருகை புரிந்தார். திருத்துறைப்பூண்டி அரசு பொது மருத்துவமனைக்கு வந்த அமைச்சர் மெய்யநாதன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

இப்பகுதியைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் ரவி, ``இந்த மருத்துவமனையில் ஆபத்துக் காலத்தில் மேல் சிகிச்சைக்கு நோயாளிகளைக் கொண்டு செல்ல ஆக்சிஜன் வசதியுடன்கூடிய ஆம்புலன்ஸ் இல்லை’’ எனச் சுட்டிக்காட்டினார். இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு 33 வயது இளைஞர் சத்தியதாசன் உயிரிழந்த பரிதாபத்தையும் அவர் அமைச்சர் மெய்யநாதனிடம் சுட்டிக்காட்டினார். இதைக்கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்த அமைச்சர், அதிரடி ஆக்‌ஷனில் இறங்கினார்.

ஆக்சிஜனுடன் கூடிய ஆம்புலன்ஸ்
ஆக்சிஜனுடன் கூடிய ஆம்புலன்ஸ்

திருவாரூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநரை அழைத்து, ``உடனடியாக இப்போதே, ஆக்சிஜன் வசதியுடன்கூடிய ஆம்புலன்ஸுக்கு ஏற்பாடு செய்யுங்கள். 24 மணிநேரமும் இந்த மருத்துவமனையில் அது இயங்க வேண்டும்" என அதிரடியாக உத்தரவிட்டார். அடுத்த 15 நிமிடத்தில், ஆக்சிஜனுடன்கூடிய ஆம்புலன்ஸ் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டது. அமைச்சர் மெய்யநாதன், ஆம்புலன்ஸ் சாவியை திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சிவக்குமாரிடம் ஒப்படைத்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சொந்த மாவட்டம் திருவாரூர். இங்குள்ள அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன்கூடிய ஆம்புலன்ஸ் இல்லாமல் இருந்தது, கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வந்தது. அமைச்சர் மெய்யநாதன் அதிரடியாகச் செயல்பட்டு, உடனடியாக இதற்கு ஏற்பாடு செய்திருப்பது இப்பகுதி மக்கள் மத்தியில் பரவலான பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு