Published:Updated:

`பள்ளியில் வைக்கோல்போர் வைத்து மாடு கட்டுகிறார்கள்!' - அமைச்சர் வேதனை

பெண்கள் விவசாயம் செய்வதில்லை. பெண்களுக்கு நைட்டி ஒன்றைக் கண்டுபிடித்துக் கொடுத்துவிட்டார்கள். அதை அணிந்துகொள்கிறார்கள். விவசாய வேலை செய்யவே வரமாட்டேன் என்கிறார்கள்.

அமைச்சர் ஜி.பாஸ்கரன்
அமைச்சர் ஜி.பாஸ்கரன் ( சாய்தர்மராஜ் )

சிவகங்கை மாவட்டத்தில் 20 தொடக்கப் பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தும் விழாவும் சூரிய மின்சக்தி மூலம் தொலைக்காட்சி வழியாகப் பாடம் கற்பிக்கும் திட்டத்தின் தொடக்கவிழாவும் காரைக்குடியில் நடந்தது.

ஜி.பாஸ்கரன், ஜெ.ஜெயகாந்தன் விழாவில்
ஜி.பாஸ்கரன், ஜெ.ஜெயகாந்தன் விழாவில்

இந்த நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன், காதி மற்றும் கதர் கிராமத் தொழில்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேடையில் அமைச்சர் பாஸ்கரன் பேசுகையில்,``பள்ளி முன்னேற்றத்துக்கான விழா என்பதால் அவசியம் கலந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தேன். தற்போது சில அரசுப் பள்ளிகளில் 5 மாணவர்கள் மட்டுமே படிக்கிறார்கள்.

வசதி இல்லாத ஏழை, எளிய குடும்பத்துக் குழந்தைகள் பயன்பெற வேண்டும் என அம்மாவின் அரசும், எடப்பாடியார் அரசும் பல்வேறு திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தியுள்ளது. இதை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சிவகங்கை மாவட்ட ஆட்சியரும் பள்ளிகள் சீராக, சுத்தமாக இருக்க வேண்டும் என நடவடிக்கை எடுக்கிறார்.

விழாவில் அமைச்சர் பாஸ்கரன்
விழாவில் அமைச்சர் பாஸ்கரன்

எனவே, பெற்றோர்கள் மாணவர்களை அரசுப் பள்ளியில் படிக்கவைக்க வேண்டும். சி.இ.ஓ., அதிகாரிகள் எல்லோரும் கிராமங்களுக்குச் சென்று அரசுப் பள்ளியில் மாணவர்களைப் படிக்க வைக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். அரசுப் பள்ளியில் படிக்க வைக்கவில்லை என்றால் பள்ளிகளை மூடிவிடுவார்கள் என்று சொல்லுங்கள். அப்போதுதான் அரசுப் பள்ளியில் படிக்க வைப்பார்கள்.

நான் ஒரு வகுப்பை 2 முறை படித்துள்ளேன். அதனால் அதிகளவு படிக்கவில்லை. ஆனால், எனக்கு படிப்பின் மீது ஆர்வம் அதிகம் உள்ளது. எனவே, அனைவரும் நன்றாகப் படிக்க வேண்டும். தற்போது ஆடு, மாடு மேய்ப்பது, விவசாயம் செய்வது போன்ற தொழில்கள் எல்லாம் இல்லாமல் போய்விட்டன. எனவே, படிப்பு ஒன்றுதான் வழி. அப்போதுதான் நல்ல நிலைக்குப் போகமுடியும். பெண்கள் விவசாயம் செய்வதில்லை. பெண்களுக்கு நைட்டி ஒன்றைக் கண்டுபிடித்து கொடுத்துவிட்டார்கள். அதை அணிந்துகொள்கிறார்கள். விவசாய வேலை செய்யவே வரமாட்டேன் என்கிறார்கள். 5 வயது குழந்தைகளிடம் கூட செல்போன் உள்ளது.

நிகழ்ச்சியில் பாஸ்கரன்
நிகழ்ச்சியில் பாஸ்கரன்

இரவு தூங்குபோதும் போர்வைக்குள் அதை வைத்துக்கொண்டுதான் தூங்குகிறார்கள். பள்ளிக்கூடத்தில் வைக்கோல்போர் வைத்து மாடு கட்டுகின்றனர். இது வேதனைக்குரியது. இதுபோன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும்" என்றார்.