Published:Updated:

`தேவையான வசதியை இறைவன் கொடுப்பார்!' - அதிர்ச்சி கொடுத்த அமைச்சர் துரைக்கண்ணு #corona

அமைச்சர் துரைக்கண்ணு
அமைச்சர் துரைக்கண்ணு

வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்குச் சென்று ஆய்வு செய்ததுடன் அதன் நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் பிரபாகரன் உடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

`கும்பகோணம் அரசு மருத்துவமனையில் பத்து நாள்களுக்குத் தேவையான மருந்து மட்டுமே இருப்பு உள்ளது. எல்லா வார்டுகளையும் கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் தயார் நிலையில் வைத்துள்ளோம். ஆனால் அதற்கான மருந்து, மாத்திரைகள் இல்லை' என அமைச்சர் துரைக்கண்ணுவிடம் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஆலோசனையில் துரைக்கண்ணு
ஆலோசனையில் துரைக்கண்ணு

கொரோனா பரவாமல் தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்குச் சென்று ஆய்வு செய்ததுடன், அதன் நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் பிரபாகரன் உடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

கொரோனாவுக்குச் சிகிச்சையளிக்கக் கூடிய வகையில் என்ன முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை, மருந்து இருப்பு, என்னென்ன தேவைகள் இருக்கின்றன என துரைக்கண்ணு கேட்டறிந்தார். அதன் பின்னர் மருத்துவமனை வளாகத்தையும் பார்வையிட்டார்.

`குமரி கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட மூன்றுபேர் ஒரே நாளில் பலி’ -என்ன காரணம்?

அப்போது அமைச்சர் துரைக்கண்ணுவிடம் மருத்துவர்கள் கூறுகையில், ``இப்போது இம்மருத்துவமனையில் 10 நாள்களுக்குத் தேவையான மருந்து, மாத்திரைகள்தான் உள்ளன. இதில் உள்ள எல்லா வார்டுகளையும் கொரோனாவுக்குச் சிகிச்சையளிக்கும் வகையில் தயார் நிலையில் வைத்துள்ளோம். தற்போதைக்கு 60 பேர் வரை இங்கு சிறப்பு சிகிச்சையை அளிக்கலாம்.

எதிர்காலத்தில் தேவைக்கேற்ப 200 பேருக்கு சிகிச்சை அளிக்கும்வகையில் படுக்கை வசதியுடன் கூடிய வார்டுகள் தயார் செய்யப்பட்டு உடனடி பயன்பாட்டிற்கு வர உள்ளன. இருப்பினும் 200 பேருக்குத் தேவையான அளவு மருந்து, மாத்திரைகள், உபகரணங்கள் இல்லை. இது தொடர்பாக கலெக்டர் கோவிந்தராவ் மூலமாக சுகாதாரம் மற்றும் மருத்துவப் பணிகள் இயக்குநருக்கு அனுப்பியுள்ளோம்' எனத் தெரிவித்தனர். மேலும் இதுதொடர்பான கோரிக்கை மனுவை மருத்துவர்கள் துரைக்கண்ணுவிடம் வழங்கினர். மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர், ``உடனடியாக சுகாதாரத்துறை அமைச்சரின் பார்வைக்கு அனுப்பிவைக்கிறேன்" என்றார்.

துரைக்கண்ணு
துரைக்கண்ணு

பின்னர் செய்தியாளர்களிடம் துரைக்கண்ணு பேசும்போது, `` மருத்துவத்துறையினர், கொரோனாவைத் தடுப்பதற்காக இரவுபகல் பாராமல் தூக்கமின்றி ஓய்வின்றிப் பணியாற்றுகின்றனர். எனவே அவர்களுக்கு தேவையான வசதிகளை இறைவன் கொடுப்பார். டாக்டர்களும் மருத்துவக் குழுவினரும் தன்னலம் பார்க்காமல் உழைப்பதால் இறைவனுக்குச் சமமானவர்கள். தஞ்சை மாவட்டத்தில் மருத்துவத்துறைக்குத் தேவையான எல்லாப் பொருள்களும் தயார் நிலையில் உள்ளன" என்றார்.

அமைச்சரின் பேட்டி அருகில் இருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அடுத்த கட்டுரைக்கு