Published:Updated:

கும்பகோணம்: அரிசி விநியோக முறைகேடு; ஒரே ஒரு போன்கால்! - அதிரடி காட்டிய அமைச்சர்

அமைச்சர் ஆர்.காமராஜ்
அமைச்சர் ஆர்.காமராஜ்

அமைச்சர் ஆர்.காமராஜை செல்போன் மூலம் தொடர்புகொண்டு நியாய விலைக் கடையில் நடக்கும் அநியாயத்தைப் பற்றிக் கூறினேன்.

கும்பகோணம் அருகே ரேஷன் கடை ஒன்றில் கொரோனா பாதிப்பிலும் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய அரிசியை அதன் ஊழியர் முழுமையாக வழங்காமல் முறைகேடு செய்வதாக இளைஞர் ஒருவர் அமைச்சர் ஆர்.காமராஜிடம் புகார் செய்த நிலையில், உடனடியாக அந்தக் கடையில் அதிகாரிகள் ஆய்வு நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

ரேஷன் கடையில் ஆய்வு செய்த அதிகாரிகள்
ரேஷன் கடையில் ஆய்வு செய்த அதிகாரிகள்

கும்பகோணம் அருகே உள்ள கெளுத்தூர் கிராமத்தில் இரண்டு ரேஷன் கடைகள் உள்ளன. இதில் கடை எண் 812-ல் ரேஷன் கார்டுகளுக்கு நிர்ணயிக்கப்பட்டு வழங்க வேண்டிய முழு அளவு அரிசியைக் கொடுப்பதில்லை. அங்கு பணிபுரியும் ஊழியர்கள் அதைத் தனியாருக்கு விற்பனை செய்துவிடுவதாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக, அந்த ஊரைச் சேர்ந்த இளைஞரான நந்தகோபாலன் என்பவர் ரேஷன் கடை ஊழியரிடம், `ஏன் அரசு அறிவித்துள்ளபடி அரிசியைத் தருவதில்லை?' எனக் கேட்டுள்ளார்.

அதற்கு அந்த ஊழியர், `நாங்க அப்படித்தான் செய்வோம். நீ யார்கிட்ட வேணாலும் போய் சொல். எந்த அதிகாரியை வேண்டுமானாலும் பார்' எனக் கூறியதாகத் தெரிகிறது. இதையடுத்து உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜின் கவனத்துக்கு இதை நந்தகோபாலன் கொண்டு சென்றுள்ளார். பின்னர், காமராஜின் உத்தரவின் பேரில் அதிகாரிகள் குறிப்பிட்ட அந்த ரேஷன் கடையில் ஆய்வு செய்துவிட்டு ஊழியரை எச்சரித்ததுடன் நடவடிக்கை எடுப்பதாகவும் கூறிவிட்டுச் சென்றுள்ளனர்.

அரிசி வழங்குவதில் முறைகேடு புகார் கூறப்பட்ட ரேஷன் கடை
அரிசி வழங்குவதில் முறைகேடு புகார் கூறப்பட்ட ரேஷன் கடை

இதுகுறித்து நந்தகோபாலனிடம் பேசினோம். ``நான் சென்னையில் சினிமா துறையில் வேலை செய்கிறேன். கொரோனா லாக்டெளனால் என் சொந்த ஊரில் வந்து தங்கியிருக்கிறேன். வழக்கமாக ரேஷன் கடைகளில் அரசு இலவசமாக அரிசி வழங்கி வருகிறது. தற்போது கொரோனா பாதிப்பால் பலரும் வேலையிழந்துள்ளதால் ரேஷன் கார்டில் உள்ள நபர்களுக்குத் தகுந்தாற்போல் ஒரு நபருக்கு 5 கிலோ என்கிற அளவில் அரிசி வழங்கி வருகின்றனர்.

மக்கள் பயனடையும் வகையில் மத்திய, மாநில அரசுகள் இதைச் செய்கின்றன. ஆனால், கெளுத்தூரில் உள்ள கடையில் சுமார் 50 கிலோ அரிசி தர வேண்டும் என்றால் 30 கிலோ மட்டுமே தந்து வந்தனர். இதைப் பற்றி விசாரித்ததில் மீதமுள்ள அரிசியை வெளிமார்க்கெட்டில் விற்று விடுவதாகத் தெரிவித்தனர். கிட்டதட்ட இந்தக் கடையில் மட்டும் 700 குடும்பத்தினர் பொருள்களை வாங்கி வருகின்றனர்.

 நந்தகோபாலன்
நந்தகோபாலன்

போதிய விழிப்புணர்வு இல்லாததால் எங்க ஊர் மக்களும் கொடுக்கும் அரிசியை வாங்கிக்கொண்டு செல்கின்றனர். இதைப் பொறுத்துக்கொள்ள முடியாதை பெரியவர்கள் சிலர், `கொரோனா பாதிப்பால் எங்க வயிறு காயகூடாதுன்னுதான் அரசு எங்களுக்கு அரிசி கொடுக்கிறது.. அதிலேயும் எங்க வயித்துல அடிக்கிறீங்களேப்பா' என தங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்திச் செல்வதும் வழக்கமாக இருந்தது.

`ஒரே ரேஷன்' திட்டம்... தமிழகத்துக்குப் பாதகமா?! - அமைச்சர் காமராஜ் பதில்

நானும் அரிசி வாங்கச் சென்றேன். எனக்கும் இதையே செய்தனர். என்னை விடுங்கள், கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ள ஏழைகள் என்ன செய்வார்கள் என ரேஷன் கடை ஊழியரிடம் கேட்டதற்கு ரொம்பவே திமிராகவே பேசினார். உடனே நான், அமைச்சர் ஆர்.காமராஜை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நியாய விலைக் கடையில் நடக்கும் அநியாயத்தைப் பற்றி கூறினேன்.

கொரோனா  நேரத்திலும் முறைகேடு ஆய்வு செய்த அதிகாரிகள்
கொரோனா நேரத்திலும் முறைகேடு ஆய்வு செய்த அதிகாரிகள்

என்னுடைய புகாரை பொறுமையாகக் கேட்டவர், `தம்பி கொஞ்சம் லைன்லேயே இருங்க' எனக் கூறிவிட்டு `முதல்வன்' பட பாணியில் உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு போன் செய்து குறிப்பிட்ட ரேஷன் கடையில் ஆய்வு செய்வதுடன் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.

அதன் பிறகு என்னிடம் பேசிய அமைச்சர், `நாளைக்கே அதிகாரிகள் வருவாங்க... அப்படி வரவில்லை என்றால் மீண்டும் எனக்கு போன் செய்யுங்க' எனக் கூறினார். இதைத் தொடர்ந்து அந்த ரேஷன் கடைக்கு வந்த அதிகாரிகள் ஊழியரிடம் ஆய்வு செய்துவிட்டு சென்றதுடன் அவர் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் கூறிவிட்டுச் சென்றனர்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு