தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பல்வேறு பகுதிகளில் மருத்துவமனைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் திண்டுக்கல் மாவட்டம் வந்த அமைச்சர் பண்ணைக்காடு அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து கொடைக்கானலில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அவர் குழந்தைகள் நலப்பிரிவுக்கான புதிய கட்டடத்தையும் திறந்து வைத்தார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``திண்டுக்கல் மாவட்டத்துக்கு மட்டும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 124,98,12,000 ரூபாய் ஒதுக்கப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. கொடைக்கானல் அரசு மருத்துவ மனைக்கு 2.10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய சிடி ஸ்கேன் அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் மலைப் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கொடைக்கானல் நகர்ப்புற சுகாதார மையம் மேம்படுத்துவதற்கு 1.20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதி பண்ணைக்காடு அரசு மருத்துவமனை பகுதியில் உள்ள பழைய கட்டடங்களை இடித்து புதிய கட்டடங்கள் கட்டி மேம்படுத்துவதற்கு 2.37 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பழனி மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு மாவட்ட தலைமை மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை 1.64 கோடி பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. இவர்களைக் கண்டறிந்து தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். குரங்கு அம்மை நோய் காரணமாக 22 நாடுகளில் இருந்து தமிழகம் வரும் சுற்றுலா பயணிகள் கண்காணிக்கப்படுவார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தமிழகத்தில் தற்போது பரவிவரும் பி.ஏ.4 மற்று பி.ஏ.5 வகை ஒமிக்ரான் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவக்கூடியது. தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இந்த நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அந்தப் பகுதி கண்காணிக்கப்படும். தமிழகத்தில் நோய்த்தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது. இருப்பினும் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது உள்ளிட்ட பரவல் தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்'' என்றார்.

மேலும், ``வெளிநாடு, குறிப்பாக உக்ரைன் நாட்டில் படித்த மருத்துவ மாணவர்களுக்கு மருத்துவ மேல்படிப்புக்கும் பணிக்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தற்போது பணியில் உள்ள 10,000 செவிலியர்கள் படிப்படியாகக் காலமுறை ஊதியத்தில் இருந்து நிரந்தரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.