Published:Updated:

நீட் தேர்வு: ``மாணவர்கள் விபரீத முடிவு எடுக்கக் கூடாது" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்!

மெகா தடுப்பூசி முகாம்
மெகா தடுப்பூசி முகாம்

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு பெறுவது தொடர்பாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுவதுடன் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கொரோனா மூன்றாவது அலையில் இருந்து தமிழக மக்களைப் பாதுகாக்கும் வகையில் தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக மாநிலம் முழுவதும் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நெல்லை மாவட்டத்தில் 952 முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணிகள் காலை 7 மணிக்குத் தொடங்கின. நெல்லை பாளையங்கோட்டை மனக்காவலம்பிள்ளை ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த தடுப்பூசி செலுத்தும் முகாமை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து ஆய்வு செய்தார்.

நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் வகையில் இன்று தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் 40,000 மையங்களில் நடைபெற்று வருகிறது.

பேட்டியளிக்கும் மா.சுப்பிரமணியன்
பேட்டியளிக்கும் மா.சுப்பிரமணியன்

மாநிலம் முழுவதும் இன்று ஒரேநாளில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு தமிழகத்தில் ஒரே நாளில் அதிகபட்சமாக 6,12,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுவரை தமிழகத்தில் 3,74,08,989 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர் . தற்போது நடக்கும் சிறப்பு முகாம் காரணமாக இன்று மாலைக்குள் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை நான்கு கோடியை எட்டும் .நெல்லை மாவட்டத்தைப் பொறுத்தவரை 952 மையங்களில் தடுப்பூசி முகாம் நடக்கிறது. மாவட்டத்தில் 58,608 பேருக்கு ஊசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 62,650 மருந்துகள் அனுப்பப்பட்டுள்ளன.

அண்ணாமலையை பரீட்சைக்கு அழைக்கும் மா.சுப்பிரமணியன்|நீங்க கேட்டத செய்றோம்-முதல்வர் ஸ்டாலின்|#Quicklook

கேரள மாநிலத்தின் எல்லையை ஒட்டிய தென்காசி , கன்னியாகுமரி, கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்த வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதனால் அந்த மாவட்டங்களில் சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறோம்.

இந்தியாவில் மரபணு ஆய்வகம் 23 இருக்கிறது. கொரோனாவில் இருந்து மாறுபட்ட வைரஸைக் கண்டறிய இந்த ஆய்வகம் தேவைப்படுகிறது. தமிழகத்தில் டெல்டா ப்ளஸ் வைரஸ் 10 பேருக்குக் கண்டறியப்பட்டு அதில் ஒருவர் இறந்துவிட்டார். 9 பேர் நலமாக உள்ளனர். இதுபோன்ற வைரஸைக் கண்டறிவதற்கான மாதிரிகளை பெங்களூருக்கு அனுப்பி முடிவுக்காக மூன்று மாதகாலம்வரை காத்திருக்க வேண்டியுள்ளது.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அத்துடன், ஒரு மரபணு பரிசோதனைக்கு 4,000 ரூபாய் வரை செலவாகிறது. அதனால் ஆயிரக்கணக்கில் பரிசோதனை நடத்துவதில் சிக்கல் இருந்ததால் அத்தகைய பரிசோதனைகளை நாமே மேற்கொள்ளும் வகையிலான ஆய்வகத்தை நான்கு கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். நாட்டிலேயே முதல் முறையாக மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் மரபணு ஆய்வகத்தை நாளை மறுநாள் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

நீட் தேர்வு தொடர்பாக மாணவர்கள் மன உளைச்சல் கொள்ளக்கூடாது. மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்றுவதற்காக முதல்வர் மிகப்பெரிய அளவிலான திட்டங்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறார். நாங்கள் தேர்தல் அறிக்கையில், முதல் கூட்டத் தொடரிலேயே தீர்மானம் நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்போம்’ என்று தெரிவித்திருந்தோம்.

நீட் தேர்வு தொடர்பாக மாணவர்கள் மன உளைச்சல் கொள்ளக்கூடாது.
மா.சுப்பிரமணியன், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்

அதன்படி, முதல் கூட்டத் தொடரின் கடைசி நாளான நாளை நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படும். சட்ட ரீதியாக ஆய்வு நடத்தப்பட்டு சிறப்பான வகையில் தீர்மானம் நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அழுத்தம் கொடுக்கப்படும். அதனால் மாணவர்கள் மனம் தளரவோ எந்த அசாதாரண முயற்சியிலும் ஈடுபடவோ கூடாது.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகளை மத்திய அரசு தொடங்காத நிலையில் 150 மாணவர்களைச் சேர்த்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், வெறும் காம்பவுண்டு சுவரை மட்டும் வைத்துக்கொண்டு கட்டாந்தரையில் கல்லூரி தொடங்க இயலாது. மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அந்த மாணவர்களைச் சேர்த்துப் படிக்க வைக்கவும் வாய்ப்பு இல்லை

தடுப்பூசி மையம்
தடுப்பூசி மையம்

மருத்துவக் கல்லூரி மாணவர்களைக் கலைக் கல்லூரிகளில் சேர்த்துப் படிக்க வைக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதுவும் சரியான முடிவாக இருக்காது. தனியார் மருத்துவக் கல்லூரி அல்லது புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் சேர்ப்பதும் சரியான முடிவாக இருக்காது என மத்திய அரசுக்கு தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் சேரும் 150 மாணவர்களையும் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் பிரித்து அனுப்புவது தொடர்பாக அனுமதி கேட்கப்பட்டுள்ளது இதுவரை அதற்கான அனுமதி கிடைக்கவில்லை. மத்திய அரசு அனுமதித்தால், தமிழக அரசு, எய்ம்ஸ் மாணவர் சேர்க்கைக்குத் தயாராக உள்ளது” என்று தெரிவித்தார்

தடுப்பூசி மையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தடுப்பூசி மையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

பின்னர், நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டுவரும் கொரோனா கட்டுப்பாட்டு மையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார் .இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு , நெல்லை எம்.பி-யான ஞானதிரவியம் , சட்டமன்ற உறுப்பினர்களான அப்துல்வகாப், ரூபி மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு