`இரவு 9 மணி வரை மட்டுமே பேருந்து சேவை; கட்டண உயர்வு இல்லை!'-அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
`மாவட்டங்களுக்குள் பேருந்துகள் இயக்கப்பட்டாலும், மக்களின் சிரமத்தைப் போக்கும் வகையில் எல்லையை ஒட்டிய பேருந்து நிறுத்தம் வரை பேருந்துகளை இயக்கச் சொல்லியிருக்கிறோம்' என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் மாவட்டத்துக்குள்ளான பேருந்து சேவைகள் இன்று தொடங்கப்பட்டன. சென்னையில் ஏறக்குறைய ஐந்து மாதங்களுக்குப் பின்னர் அரசுப் பேருந்து சேவைகள் இன்று தொடங்கின. சென்னை பல்லவன் பணிமனையில் ஆய்வு மேற்கொண்ட போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசினார்.
``தமிழகம் முழுவதும் 6,090 பேருந்துகள் இன்று இயக்கப்பட்டிருக்கின்றன. புறநகர் பேருந்துகளில் 60 சதவிகிதம், அதாவது 32 பயணிகளுடனும், நகரப் பேருந்துகளில் 24 பயணிகளுடனும் இயக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயணிகள் முகக்கவசம் அணிய வேண்டும். பேருந்தின் பின்புற வாயிலை ஏறுவதற்கும் முன்புற வாயிலை இறங்குவதற்கும் பயன்படுத்த வேண்டும். பின்புற வாயிலில் ஏறும்போது பயணிகளுக்குக் கைகளைச் சுத்தம் செய்ய சானிடைஸர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் போக்குவரத்துத்துறை சார்பாக செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்திலுள்ள அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம். பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. படிப்படியாக பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, அதற்கேற்ப பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். முதற்கட்டமாக, மாவட்டங்களுக்குள் பேருந்து சேவை தொடங்கப்பட்டிருக்கிறது. 22,000 பேருந்துகளில் முதற்கட்டமாக 6,090 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.
மாவட்டங்களுக்குள் பேருந்துகள் இயக்கப்பட்டாலும், மக்களின் சிரமத்தைப் போக்கும் வகையில் எல்லையை ஒட்டிய பேருந்து நிறுத்தம் வரை பேருந்துகளை இயக்கச் சொல்லியிருக்கிறோம். ஏனென்றால், மற்ற மாவட்டங்களுக்குச் செல்லும் மக்கள் இறங்கி அடுத்த பேருந்து நிறுத்தம்வரை நடந்து செல்லும் நிலை ஏற்படும். அதைத் தவிர்க்கவே, இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது'' என்றார்.
அப்போது, ` `மாநிலங்களுக்கு இடையில் போக்குவரத்துக்குக் கட்டுப்பாடு கூடாது’ என மத்திய அரசு அறிவுறுத்திய நிலையில், தமிழகத்தில் மாவட்டங்களுக்குள் மட்டுமே பேருந்து சேவை தொடங்கப்பட்டிருக்கிறது. இதனால், தனியார் பயனடைவதாகக் குற்றச்சாட்டு இருக்கிறதே...’ என்று செய்தியாளர்கள் போக்குவரத்துத்துறை அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர். அந்தக் கேள்விக்கு பதிலளித்த எம்.ஆர். விஜயபாஸ்கர், ``கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மருத்துவ நிபுணர்களோடு ஆலோசனை நடத்தி, படிப்படியாகத் தளர்வுகளை முதலமைச்சர் அறிவித்துவருகிறார். சூழலைப் பொறுத்து இந்த விவகாரத்தில் முதலமைச்சர் முடிவெடுப்பார்'' என்றார்.

மாதாந்திர பாஸ் குறித்துப் பேசிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ``மார்ச் மாதத்தில் பயணிகளுக்கான மாதாந்தர பாஸை அவர்கள் முழுமையாகப் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதனால், பழைய பாஸ் செப்டம்பர் 15-ம் தேதி வரை செல்லுபடியாகும். அதன் பிறகு புதிய மாதாந்தர பாஸ்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்'' என்றார். அதேபோல், `அரசுப் பேருந்துகள் இரவு 9 மணி வரை மட்டுமே இயக்கப்படும்ப் என்றும் அமைச்சர் தெரிவித்தார். அரசுப் பேருந்துக் கட்டணம் உயரப்போவதாக வெளியானது தவறான தகவல் என்றும் அவர் குறிப்பிட்டார்.