Published:Updated:

`நீட் தேர்வு, 7 பேர் விடுதலை விவகாரம்; நீதி நிச்சயம் வெல்லும்!’ - அமைச்சர் ரகுபதி நம்பிக்கை

``தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய வீடுகள் தரமற்று இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.”

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

புதுக்கோட்டை நகரப் பகுதிக்கு உட்பட்ட நரிமேடு சமத்துவபுரம் அருகே, வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்கும் நோக்கில் தமிழக அரசின் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு ஆணையம் சார்பில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக ஆட்சியில் சுமார் ரூ.150 கோடி மதிப்பில் 1,920 அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகள் கட்டும் பணி தொடங்கி முடிக்கப்பட்டது. வீடில்லாத பயனாளிகளிடம் அந்த வீட்டுக்கான பங்களிப்பு தொகையாக 95,500 ரூபாய் வரவோலையாக வசூல் செய்யப்பட்டது. ஆனாலும், வீடுகள் கட்டப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆன நிலையிலும் பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்தது. இந்தநிலையில் தற்போது 1,920 வீடுகளில் முழுமையாகப் பங்களிப்பு தொகையைக் கட்டிய தகுதி வாய்ந்த பயனாளிகள் 376 பேருக்குக் குலுக்கல் முறையில் வீடுகள் ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது. தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதியும், தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதனும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அடுக்குமாடிக் குடியிருப்பு
அடுக்குமாடிக் குடியிருப்பு

வீட்டுக்கு முழுப் பங்களிப்பு தொகையும் கட்டிய பயனாளிகள் மகிழ்ச்சியுடன் வந்து தங்களுக்கு உரிய வீட்டைக் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்துக்கொண்டனர். தொடர்ந்து அவர்களுக்கான வீடு ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

``நீண்ட போராட்டத்துக்குப் பிறகு தமிழக அரசு வீடுகளை ஒதுக்கீடு செய்து கொடுத்தது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனாலும் வீடுகள் அனைத்தும் தரமாக இருக்கின்றனவா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும். சில இடங்களில் கண்ணாடிகள் உடைந்திருப்பதால் அதைச் சரிசெய்து கொடுப்பதோடு, இங்கு சிறுவர்களுக்கான பூங்காவும் செல்போன் கோபுரமும் அமைத்துத் தர வேண்டும்’’ என்று பயனாளர்கள் அமைச்சர்களிடம் கோரிக்கைவைத்தனர்.

நீட் தேர்வு விவகாரம்:  அண்ணாமலையின் 'லாஜிக்' எந்த அளவுக்குச் சரி? - ஓர் அலசல் ரிப்போர்ட்!

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ``தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய வீடுகளின் தரம் ஆய்வு செய்யப்பட்டுத்தான் பயனாளிகளிடம் வீடுகள் ஒப்படைக்கப்பட்டுவருகின்றன. வீடுகள் தரமற்று இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஆன்லைன் ரம்மி தடை செய்வது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருப்பதால், தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருக்கிறது.

 சட்டத்துறை அமைச்சர் ரகுபதி
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

ஆன்லைன் சூதாட்டத்துக்கு உச்ச நீதிமன்றத்தில்‌ முறையீடு செய்தாலே தடை வாங்கிவிடலாம் என்ற அட்வகேட் ஜெனரலின் ஆலோசனையால், நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத்துக்குத் தடை சட்ட மசோதா தாக்கல் செய்யப்படவில்லை. நீட் தேர்வு, ஏழு பேர் விடுதலை உள்ளிட்ட பிரச்னைகளில் சட்டப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. நீதி நிச்சயம் ஒருநாள் வெல்லும். அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 700 சிறைக் கைதிகள் நன்னடத்தையின் அடிப்படையில் உரிய விதிமுறைகளைப் பின்பற்றியே விடுவிக்கப்படவிருக்கின்றனர். இதில் எந்த விமர்சனத்துக்கும் இடமில்லை" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு