Published:Updated:

குழந்தைகள் காப்பகத்தை சூழ்ந்த மழைநீர்; 30 நிமிடத்தில் மீட்ட அமைச்சர்; நெகிழும் பாதுகாவலர்!

``கொளத்தூர்ல நாங்க இருப்பது கொஞ்சம் தாழ்வான பகுதி. சென்னையில தொடர்ந்து மழை பெய்துகிட்டிருக்குறதால 6-ம் தேதி இரவே காப்பகத்துக்குள்ள தண்ணீர் வர ஆரம்பிச்சுருச்சு. குழந்தைகளோட சான்றிதழ்கள், புத்தகங்களை மட்டும் பத்திரப்படுத்திட்டு, நாங்க மழை தண்ணீருக்குள்ளதான் உட்கார்ந்து இருந்தோம்."

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கடந்த சில தினங்களாகத் தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியதோடு, வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்து, அடிப்படைத் தேவைகளுக்கே மக்கள் சிரமப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில், `சென்னை கொளத்தூரில் இருக்கும் ஆதரவற்றோர் காப்பகம் ஒன்றில் தண்ணீர் புகுந்து, அங்கு இருக்கும் குழந்தைகள் அடிப்படை வசதி இல்லாமல் சிரமப்பட்டு வருகிறார்கள், அவர்களுக்கு உதவி வேண்டும்' என நேற்று சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின.

கொளத்தூர் காப்பகம்
கொளத்தூர் காப்பகம்
Tamil News Today: `வரும் 10,11 தேதிகளில்  அதி கனமழைக்கு வாய்ப்பு!' - சென்னை வானிலை ஆய்வு மையம்

இந்தத் தகவல், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் கவனம் பெற்று, அடுத்த அரை மணி நேரத்தில் அந்தக் குழந்தைகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு, திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இது குறித்து, ஆதரவற்ற மையத்தின் பாதுகாவலர் பூங்கோதையிடம் பேசினோம்.

``எங்களோட இந்த ஆதரவற்ற மையம் 18 வருஷங்களுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. நூரி என்ற 64 வயசு திருநங்கைதான் இந்த ஆதரவற்ற மையத்தின் நிறுவனர். தனக்கு ஹெ.ஐ.வி பாதிப்பு இருப்பது உறுதியான பிறகு, மக்களுக்கு பல வகையில் சேவை செய்ய ஆரம்பிச்சாங்க. அதில் ஒன்றுதான் இந்த மையம். இங்கு ஆறு வயசு தொடங்கி 24 வயசு வரை மொத்தம் 30 குழந்தைகள் இருக்காங்க.

மீட்கப்பட்ட குழந்தைகள்
மீட்கப்பட்ட குழந்தைகள்

பெண் குழந்தைகள் என்றால், நாங்களே படிக்க வெச்சு திருமணம் பண்ணிக் கொடுத்துருவோம். ஆண் குழந்தைகள், வேலை கிடைச்சு வெளி இடங்களுக்குப் போயிருவாங்க. இந்த ஆதரவற்ற மையம் இயங்க முக்கிய காரணம் மக்கள்தான். குழந்தைகளின் படிப்புக்கு, சாப்பாடுக்குன்னு முகம் தெரியாத எத்தனையோ பேர் உதவி பண்றாங்க. கொரோனா சூழல்ல பள்ளிகள் திறக்காததால், ஆன்லைன்ல வகுப்புகள் நடக்குது. குழந்தைகள் மையத்துல தங்கிதான் படிச்சிட்டு இருந்தாங்க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கொளத்தூர்ல நாங்க இருப்பது கொஞ்சம் தாழ்வான பகுதி. சென்னையில தொடர்ந்து மழை பெய்துகிட்டிருக்குறதால 6-ம் தேதி இரவே காப்பகத்துக்குள்ள தண்ணீர் வர ஆரம்பிச்சுருச்சு. குழந்தைகளோட சான்றிதழ்கள், புத்தகங்களை மட்டும் பத்திரப்படுத்திட்டு, நாங்க மழை தண்ணீருக்குள்ளதான் உட்கார்ந்து இருந்தோம். குழந்தைகள் சிரமப்படுறதைப் பார்த்துட்டு பக்கத்துக் கடைக்காரர், அவருடைய கடையில தங்க இடம் கொடுத்தாரு. ஆனாலும், சாப்பாட்டுக்கு கஷ்டமா இருந்துச்சு. எவ்வளவு நேரம் குழந்தைகள் பசி தாங்குவாங்க?

காப்பகம்
காப்பகம்

எங்களோட நிலைமைய அறிஞ்சு, சமூக வலைதளங்களிலும் எங்களுக்கு உதவும்படி சமூக ஆர்வலர்கள் பதிவுகள் பண்ணியிருந்தாங்க. இதே நிலை நீடிச்சா, குழந்தைகளுக்கு உடல் நிலை சரியில்லாமப் போயிரும்னு தோணுச்சு. உடனடி தீர்வை தேட ஆரம்பிச்சோம். அமைச்சர் சேகர் பாபு சார் முன்பே எங்களோட நிலையத்துக்கு வந்து, சில உதவிகள் பண்ணியிருக்கார். அதனால் அவருக்கு போன் பண்ணி உதவி கேட்டேன்.

அரை மணி நேரத்துல மீண்டும் தொடர்பு கொள்றதா சொல்லிட்டு போனை வெச்சுட்டாங்க. ஆனால், நாங்க எதிர்பார்க்காத விதமாக அடுத்த அரை மணிநேரத்துல சேகர் பாபு சாரே நேரடியா எங்கள் காப்பகத்துக்கு வந்து, குழந்தைகளை மீட்டெடுத்தார். அந்த ஆச்சர்யத்தில் இருந்து இப்போவரை நாங்க வெளிய வரல.

மீட்கப்பட்ட குழந்தைகள்
மீட்கப்பட்ட குழந்தைகள்
புதுச்சேரியில் அடித்து நொறுக்கும் கன மழை!

கொளத்தூர்ல இருக்கும் ஒரு திருமண மண்டப உரிமையாளர்கிட்ட பேசி நாங்க தங்குவதற்கு ஏற்பாடு பண்ணிக்கொடுத்து, வாகனத்தில் கூட்டிட்டு வந்து விட்டாங்க. அதோடு மூன்று நேர சாப்பாட்டுக்கும், ஆடை, போர்வைகள்னு எல்லா அடிப்படை வசதிகளுக்கும் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கார். நாங்க எல்லாரும் இப்போ பாதுகாப்பா இருக்கோம். எங்களுக்கு அரசியல் எல்லாம் தெரியாது, ஆனா மனுஷங்களை நம்புறோம். பெத்தவங்க இல்லாத இந்தக் குழந்தைகளைக் காக்க, மனுஷங்க எப்போதும் துணையாய் இருக்காங்க" என்று விடைபெறுகிறார் பூங்கோதை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு