Published:Updated:

ராமேஸ்வரம்: ``கும்பாபிஷேகம் செஞ்ச கோயிலை இப்படியா வெச்சுருப்பீங்க?" - அதிகாரிகளைச் சாடிய சேகர் பாபு

அதிகாரிகளைச் சாடிய அமைச்சர்

தமிழகத்தில் இதுவரை 3,600 கோடி ரூபாய் மதிப்பிலான அறநிலையை சொத்துகள் மீட்கப்பட்டிருப்பதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்திருக்கிறார்.

ராமேஸ்வரம்: ``கும்பாபிஷேகம் செஞ்ச கோயிலை இப்படியா வெச்சுருப்பீங்க?" - அதிகாரிகளைச் சாடிய சேகர் பாபு

தமிழகத்தில் இதுவரை 3,600 கோடி ரூபாய் மதிப்பிலான அறநிலையை சொத்துகள் மீட்கப்பட்டிருப்பதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
அதிகாரிகளைச் சாடிய அமைச்சர்

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் அமைந்திருக்கும் ராமநாதசுவாமி கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார். கோயிலிலுள்ள நான்கு பிரகாரங்களையும் சுற்றிவந்த அவர், சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் கோயில் இணை ஆணையர் உள்ளிட்ட அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை, ``கும்பாபிஷேகம் செய்த கோயிலை இப்படிப் பராமரிப்பின்றி மோசமாக வைத்திருக்கிறீர்களே" எனக் கடுமையாகச் சாடினார். மேலும் கோயில் பணியாளர்கள் மற்றும் பக்தர்களிடம் நேரடியாக குறைகளைக் கேட்டறிந்தார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, ``ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில், ராமநாதசுவாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்பாள் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களையும் தரிசித்தேன்.

ராமேஸ்வரம் கோயிலில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்
ராமேஸ்வரம் கோயிலில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்

பின்னர் 22 தீர்த்தங்களில் மக்கள் புனித நீராடுவதையும், விடுபட்டிருக்கும் கோபுரப் பணிகள் முழுமை பெறுகிறவிதத்தில் எடுக்கவேண்டிய பணிகள் குறித்தும், மழைக்காலங்களில் திருக்கோயிலுக்குள் மழைநீர் உள்ளே புகுவதை நிரந்தரமாக தடுப்பது தொடர்பாகவும், பக்தர்கள் வரிசை முறையை ஒழுங்குபடுத்தும் திட்டம் குறித்தும் பேசினேன். அதேபோல, மக்களை வரிசைப்படுத்துவதற்கு தேவையான பணியாளர்களை நியமிப்பது பற்றியும், கோயிலில் அவ்வப்போது குப்பைகளை அகற்றுவதற்கான பணியாளர்களை நியமிப்பது தொடர்பாகவும், தீர்த்தமாடும் பகுதிகளில் சில இடங்களில் ஆங்காங்கே ஏற்பட்டிருக்கும் உடைப்புகளைச் சரிசெய்வதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் ஆய்வு மேற்கொண்டேன். இங்கு தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்கள் தவிர வெளிநாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். முதல்வரின் அறிவுறுத்தலின்படி துறை ஆணையாளர் குமரகுருபரன், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் ஆகியோரை ஒருங்கிணைத்து கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு எந்தவிதத்திலும் ஏமாற்றம் அளிக்காத வகையில் என்னென்ன அடிப்படை வசதிகளை‌‌யெல்லாம் மேற்கொள்ள வேண்டும் என்பதை ஆய்வுசெய்திருக்கிறோம்.

தீர்த்தக் கடலில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்
தீர்த்தக் கடலில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்

அக்னி தீர்த்தக் கடலில் கழிவுநீர் கலப்பதாகச் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்துப் பேசியிருக்கிறேன். தீர்த்தக் கடலில் கழிவுநீர் கலப்பதைத் தடுப்பதற்கான பணிகள் கடந்த ஜூன் மாதம் முதல் தொடங்கியிருக்கின்றன. ஒருசில மாதங்களில் முற்றிலுமாக தீர்த்தக் கடலில் கழிவுநீர் கலப்பது தடுக்கப்படும். கோயிலைச் சுற்றி மழைநீர் தேங்குவதைச் சீர்படுத்துவதற்கான ஆய்வும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்தமாக ராமநாதசுவாமி திருக்கோயிலில் செயல்படுத்தபடவிருக்கும் திட்டங்களின் பெருந்திட்ட வரைவு குறித்து விரைவில் முதலமைச்சர் அறிவிக்கவிருக்கிறார்.

கோயில் பணியாளரிடம் குறைகளைக் கேட்டறிந்த சேகர் பாபு
கோயில் பணியாளரிடம் குறைகளைக் கேட்டறிந்த சேகர் பாபு

மேலும் கோயிலைச் சுற்றி அமைந்திருக்கும் மண்டபத்தில் பக்தர்கள் வரிசையாகச் செல்வதற்கு ஏற்றாற்போல் மேடை அமைக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது. இந்த மேடை அமைக்கப்பட்டால் தரிசனம் முடிந்து நடந்து செல்லும் பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் இருக்கும். பெருந்திட்ட வரைவு திட்டத்தோடு சேர்த்து இதையும் செயல்படுத்துவதற்கான திட்டத்தைத் தயார்செய்ய உத்தரவிடப்பட்டிருக்கிறது. பக்தர்களை வரிசையில் அனுப்பும் பணியில் காவலர்கள் பற்றாக்குறை இருந்துவருகிறது. உடனடியாக அந்தக் காவலர் காலி பணியிடங்களை நிரப்ப உத்தரவிட்டிருக்கிறோம். ஐஐடி கொடுத்திருக்கும் ஆய்வறிக்கையில் கோயிலின் எதிரேயுள்ள மண்டபத்தை முழுமையாக அகற்ற வேண்டும் எனக் கூறியிருக்கின்றனர். தொல்லியல்துறை கமிட்டியும் அதற்கு ஒப்புதல் அளித்திருக்கிறது. இந்தப் பணியும் பெருந்திட்ட வரைவிலேயே சேர்க்கப்படும். ஒட்டுமொத்தப் பணிகளோடு பலவீனமாக இருக்கும் அந்த மண்டபத்தை அகற்றும் பணியும் நடைபெறும்" என்றார்.

அதிகாரிகளைச் சாடிய அமைச்சர்
அதிகாரிகளைச் சாடிய அமைச்சர்

தொடர்ந்து பேசியவர், ``இதுவரை 3,600 கோடி ரூபாய் அளவுக்கு அறநிலையத்துறை சொத்துகள் மீட்கப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து அந்த மீட்புப்பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அடுத்த ஆண்டு அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின்போது முழு விவரங்கள் தெரிவிக்கப்படும். இலங்கையில் பொருளாதார நெருக்கடி சீரான பிறகு அங்கிருக்கும் ராமநாதசுவாமி கோயிலின் சொத்துகள் குறித்து நேரடியாகச் சென்று ஆய்வு செய்யப்படும்" எனக் கூறினார்.

பின்னர் 12 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கத்தேர் இயக்கத்தை தொடங்கிவைத்தார். கோயிலின் சுற்றுப் பிரகாரம் முழுவதும் தங்கத் தேரை வடம்பிடித்து இழுத்து வந்து சாமி தரிசனம் செய்தார்.