Published:Updated:

நிலக்கரி விவகாரம்: `மேட்டூரிலும் ஆய்வு நடத்தப்படும்!’ - அமைச்சர் செந்தில் பாலாஜி

 அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி

``நிலக்கரி விவகாரத்தில் சென்னை, தூத்துக்குடியில் இருப்பு குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் மேட்டூரை ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது" -அமைச்சர் செந்தில் பாலாஜி.

வடசென்னை, தூத்துக்குடியைத் தொடர்ந்து மேட்டூரிலும் ஆய்வு மேற்கொள்ளப்படவிருப்பதாக, கரூரில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

ஆசிரியர்களை கௌரவித்த செந்தில் பாலாஜி
ஆசிரியர்களை கௌரவித்த செந்தில் பாலாஜி

கரூர் மாவட்ட தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கம் சார்பில், டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுபெற்ற ஆசிரியர், ஆசிரியைகளுக்குப் பாராட்டுவிழா நடைபெற்றது. கரூரை அடுத்த புலியூரிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் இந்த விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயர்த்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, நல்லாசிரியர் விருது பெற்ற 10 ஆசிரியர், ஆசிரியைகளுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

நிலக்கரியை காணவில்லை - செந்தில் பாலாஜி| கொடநாடு: அதிமுக-வினர் மீது குற்றமில்லை - அண்ணாமலை|#Quicklook

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ``தமிழகத்தில் 4,52,777 விவசாயிகள் இலவச மின்சார இணைப்பு கேட்டு விண்ணப்பித்து 18 ஆண்டுகளாகக் காத்திருக்கிறார்கள். இந்தநிலையில், தமிழக வரலாற்றிலேயே ஒரே ஆண்டில் ஒரு லட்சம் இலவச மின்சார இணைப்பு வழங்குவது இதுவே முதன்முறை. அந்தச் சிறப்புத் திட்டத்தை, தமிழக முதல்வர் விவசாயிகளின் நலன் கருதி அறிவித்திருக்கிறார். `நடப்பு நிதியாண்டிலேயே 1 லட்சம் இணைப்புகளை வழங்க வேண்டும்' என முதல்வர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இது தொடர்பான, ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலியில் நடக்கவிருக்கிறது. அதில், மின்வாரிய அதிகாரிகள் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். `தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்' என்று முதல்வர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

பேட்டியளிக்கும் செந்தில் பாலாஜி
பேட்டியளிக்கும் செந்தில் பாலாஜி

நிலக்கரி விவகாரத்தில் சென்னையிலும் தூத்துக்குடியிலும் இருப்பு குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் மேட்டூரை ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது. சென்னை பிரச்னையைப் பொறுத்தமட்டில், இது குறித்து முழுவதுமான விசாரணைக்குப் பிறகு, அதன் அறிக்கை முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, அதன் பிறகு என்ன நடவடிக்கை என்பதை முதல்வரிடம் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும். யார் தவறு செய்தார்கள், எந்த இடத்தில் தவறு நடந்திருக்கிறது என ஆராய்ந்து, வரும் காலங்களில் அந்தத் தவறு நடக்காமல் பார்த்துக்கொள்ள தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

நிலக்கரி முறைகேடு... கரியாகிப்போன ரூ.7,906 கோடி!

ஆனால், கடந்த ஆட்சிக்காலத்தில் குழு அமைக்கப்பட்டது என்றும், இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஆய்வு செய்ததாகவும் சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர் தெரிவித்தார். அப்படிச் செய்திருப்பின், அதன் விசாரணை அறிக்கையை ஏன் வெளியிடவில்லை, யாரைக் காப்பாற்ற இது போன்று நடந்து கொண்டார்கள் என்பதை அவர்கள் விளக்குவார்களா... கடந்த ஆட்சியில் இந்த முறைகேட்டை மூடிமறைக்கப் பார்த்தார்கள், அதுதான் உண்மை. அந்த முயற்சி தற்போது எடுபடாது. கரூர் மாவட்டத்துக்கு ரூ. 2,000 கோடி மதிப்பிலான வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டங்களை முதல்வர் வழங்கியிருக்கிறார். கரூர் மாவட்டத்துக்கு காவிரி ஆற்றின் குறுக்கே இரண்டு இடங்களில் தடுப்பணைகள் கட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. சட்டசபை கூட்டத்தொடர் முடிவுற்ற பிறகு அரசாணை வெளியிடப்பட்டு, அதன் பிறகு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பிறகு பணிகள் தொடங்கப்படும். தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்றிவருகிறார். கடந்த ஆட்சிக் காலத்தில் முடக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் தூசுதட்டி எடுக்கப்பட்டு, 100% நிறைவேற்றப்படும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு