Published:Updated:

`இரவு முதல் தொடரும் மீட்புப் பணி; என்ன நடந்தது?' - விவரித்த அமைச்சர் விஜயபாஸ்கர் #SaveSujith

நடுக்காட்டுப்பட்டி ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியிருக்கும் சிறுவனை மீட்கும் பணி 15 மணி நேரத்துக்கும் மேலாக நடந்துவருகிறது.

மீட்புப் பணி
மீட்புப் பணி

திருச்சி மணப்பாறை அருகில் உள்ள நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில், ஆழ்துளைக் கிணற்றில் நேற்று குழந்தை சுர்ஜித் விழுந்தது. ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியிருக்கும் குழந்தையை மீட்கும் பணி, 15 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்துவருகிறது. இந்தப் பணியை நேற்று மாலை முதலே அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் நேரில் பார்வையிட்டுவருகிறார்கள்.

மீட்புப் பணி
மீட்புப் பணி

நடுக்காட்டுப்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், ``ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க, தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டுவந்தோம். முதலில் குழாய் வழியாக கயிறை இறக்கி, அந்தக் குழந்தையின் ஒரு கையில் சுருக்குப் போட்டோம். 30 அடியில் சிக்கியிருந்த குழந்தையைத் தொடர்ந்து 5 மணி நேரத்துக்கும் மேலாக மேலும் கீழே சென்றுவிடாமல் வைத்திருந்தோம். ஒருபுறம் இந்தப் பணி தொடர்ந்தாலும், மறுபுறம் கேமரா உதவியுடன் குழந்தையின் மறுகையில் சுருக்குப் போட தொடர்ந்து முயற்சிசெய்தோம்.

நொடிக்கு நொடி கவனமாக அந்த வேலையைச் செய்தோம். குழந்தையின் மறுகையில் சுருக்கைப் போட்டு, வெளியே எடுக்க முயற்சிசெய்தோம். வெளியே இழுக்கும் நேரத்தில் துரதிஷ்டவசமாக கயிறு நழுவியது. தொடர்ந்து குழந்தையின் அழுகுரல், முனகன் கேட்டுக்கொண்டே இருந்தது. அம்மா, அப்பா எனப் பையன் பேசிக்கொண்டிருந்ததையும் நம்மால் கேட்க முடிந்தது. இதனால், நம்பிக்கையுடன் எல்லா குழுவினரும் போராடினர். மீட்புப் பணி சவாலாகவே இருந்தது.

மீட்புப் பணி
மீட்புப் பணி

ஏறக்குறைய ஒரு மணி நேரத்துக்குப் பின்னர், கவனமாக மீண்டும் கயிறை இறக்கி குழந்தையை வெளியே எடுக்க முயற்சி செய்தோம். அந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. அதையடுத்து ஒன்றரை மணி நேரம் கழித்து மூன்றாவது முறையாக முயற்சி செய்தோம். மிகக் கடினமாகப் போராடி, இரண்டாவது கையிலும் சுருக்குப் போட்டு கயிறை இருக்கினோம். எப்படியும் வெளியே எடுத்துவிடலாம் என்று அப்போது எங்களுக்குப் பெரிய நம்பிக்கை வந்தது. ஆனால், மூன்றாவது முயற்சியும் பலனளிக்கவில்லை. ஈரப்பதம் அதிகமாக இருந்ததால் வெளியே எடுக்கும் முயற்சி தோல்வியடைந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக முதலாவதாகக் குழந்தையின் கையில் இறுக்கிய கயிறும் நழுவி, குழந்தை 70 அடி ஆழத்துக்குச் சென்றுவிட்டது. மீட்புப் பணியில் இது பின்னடைவை ஏற்படுத்தியது.

14 மணி நேரத்துக்கு மேலாக நீடிக்கும் மீட்புப் பணி: பேரிடர் மீட்புக் குழுவினர் விரைவு! #SaveSujith

இதையடுத்து, நாமக்கல்லைச் சேர்ந்த குழுவினர் அதிநவீன தொழில்நுட்பத்துடன் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் கொண்டுவந்திருந்த கருவியில் கேமரா, ஆக்ஸிஜன் செலுத்தும் வசதி, வெளியே எடுக்கும் கருவிகள் இருந்தன. இதனால், நம்பிக்கையுடன் முயற்சிசெய்தோம். அந்தக் கருவியை குழியில் 50 அடி ஆழத்துக்குக் கொண்டு சென்றவுடன் குழந்தை மூச்சுவிடும் ஓசையை எங்களால் கேட்க முடிந்தது. அந்தக் கருவி 5 இன்ச் விட்டத்துடன் இருந்தது. கிராமங்களில் போடப்படும் போர்வெல்கள், மேல்பகுதியில் 6 இன்ச் விட்டத்துடனும் கீழ்ப்பகுதியில் 4 இன்ச் விட்டத்துடனும் இருக்கும்.

மீட்புப் பணியில் அமைச்சர் விஜய பாஸ்கர்
மீட்புப் பணியில் அமைச்சர் விஜய பாஸ்கர்

இதனால், 5 இன்ச் விட்டம் கொண்ட அந்தக் கருவியால் 40 அடிக்கு மேல் கொண்டு செல்ல முடியவில்லை. சென்னை ஐஐடியால் அங்கீகரிக்கப்பட்ட கருவி அது. அதன்மூலம் எப்படியும் மீட்டுவிடலாம் என்று நம்பிக்கை இருந்தது. அதிகாலையில் இந்த முயற்சி பலனளிக்காமல்போனது. இதற்கிடையே, மண் துகள்கள் குழந்தையின்மீது விழுந்தது. இது மிகப்பெரிய பின்னடைவாகிவிட்டது.

பிரசவத்தின்போது குழந்தையின் தலையைப் பிடித்து வெளியே எடுப்பது போன்ற முறை, அதேபோல், பாம்பு பிடிப்பது போன்ற முறை எனப் பலமுறைகள் மூலம் முயற்சிசெய்துவிட்டோம். ஆனால், அந்தக் குழந்தையை வெளியில் எடுக்க முடியவில்லை. பின்னர், அதிகாலையில் அந்தக் குழந்தையிடமிருந்து அழுகுரலையோ மற்ற எந்த ஓசையையோ எங்களால் கேட்க முடியவில்லை. இது, மிகப்பெரிய வேதனையை எங்களுக்குக் கொடுத்திருக்கிறது. இருப்பினும் அந்தக் குழந்தையைப் பத்திரமாக மீட்க முடியும் என்று எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது.

மீட்புப் பணியில் அமைச்சர் விஜய பாஸ்கர்
மீட்புப் பணியில் அமைச்சர் விஜய பாஸ்கர்

சென்னை மவுலிவாக்கம் கட்டட விபத்தின்போது உணவு, தண்ணீரில்லாமல் கிட்டத்தட்ட 72 மணிநேரத்துக்கு மேல் சிக்கித்தவித்தவர்களை நாம் உயிரோடு மீட்டிருக்கிறோம். அந்த நம்பிக்கையுடன்தான் நாங்கள் முயற்சி செய்துவருகிறோம். முதல்வர் தகவல் கொடுத்ததை அடுத்து, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட இருக்கிறார்கள். இதுபோன்ற சூழல்களில் திறமையாக செயல்பட்டு 18-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் அந்தக் குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். குழந்தையைப் பத்திரமாக மீட்க எல்லாவகையிலும் முயன்றுவருகிறோம்'' என்றார்.

மீட்புப் பணியில் அன்பறிவ் குழுவினர்
மீட்புப் பணியில் அன்பறிவ் குழுவினர்

இதற்கிடையே, சம்பவ இடத்துக்கு சண்டைப் பயிற்சியாளர்கள் அன்பறிவ், தங்களது குழுவினரோடு சென்றிருக்கிறார். மீட்புப் பணியில் ஈடுபடும் குழுவினரோடு இணைந்து அவர்கள் மீட்புப் பணியில் ஈடுபட இருக்கிறார்கள்.