Published:Updated:

`அரசுக்கு எதிரான தவறான தகவல்; நடிகர் வரதராஜன் மீது நடவடிக்கை!’ - அமைச்சர் விஜயபாஸ்கர்

விஜயபாஸ்கர்
விஜயபாஸ்கர்

``கண்ணுக்குத் தெரியாத வைரஸுடன் போராடிக்கொண்டிருக்கும் நிலையில், தொடர்ந்து விமர்சனங்களை எழுப்ப வேண்டாம். நெருக்கடியான சூழலில் அரசு செயல்பட்டுக்கொண்டிருக்கும்போது வதந்திகளை பரப்பக் கூடாது.”

தமிழகத்தில், கொரோனாவால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. மிக அதிகமாக, சென்னையில் ஒவ்வொரு நாளும் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கில் பல தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளதும் தேர்வுகளை நடத்தத் திட்டமிடுவதும், மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியதோடு விவாதத்தையும் கிளப்பியுள்ளது. இதையடுத்து, சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்த பின்னர், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

கொரோனா
கொரோனா

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்துப் பேசிய அவர், ``கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க அனைத்துவிதமான வசதிகளும் மருத்துவமனைகளில் உள்ளன. அவர்களுக்கு சிகிச்சையளிக்க ஏற்படுத்தப்பட்ட தனிமை வார்டுகளில் தேவையான படுக்கை வசதிகள் உள்ளன. சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மட்டும் 5,000 படுக்கைகள் உள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் 75,000 படுக்கை வசதிகள் உள்ளன.

கண்ணுக்குத் தெரியாத வைரஸுடன் போராடிக்கொண்டிருக்கும் நிலையில் தொடர்ந்து விமர்சனங்களை எழுப்ப வேண்டாம். நெருக்கடியான சூழலில் அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது வதந்திகளை பரப்பக் கூடாது. ஆதாரம் இல்லாத தகவல்கள் பற்றி பேசக்கூடாது. கொரோனாவைத் தடுக்க ஊழியர்கள் சிறப்பாகப் பணியாற்றிவருகின்றனர். கொரோனாவைத் தடுக்க மக்களின் ஒத்துழைப்பும் தேவை” என்று கூறியுள்ளார்.

`எண்ணிக்கையை வைத்து அரசியலும் வேண்டாம்... அச்சமும் வேண்டாம்!’ - அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

நடிகர் வரதராஜன் `அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது’ எனக் கூறியது குறித்து பேசிய அமைச்சர், ``பேரிடர் காலத்தில் அவர் தவறான தகவல்களை வெளியிட்டுள்ளார். மக்கள் அச்சத்தில் இருக்கும் சூழலில் தவறான குற்றச்சாட்டுகளை எழுப்புகிறார். அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார். கொரோனா தொடர்பாக தவறான தகவல்களை அளித்தால், அரசு வேடிக்கை பார்க்காது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார். வைரஸுக்கு எதிராக சுகாதாரப் பணியாளர்கள் பலரும் கடுமையாகப் போராடிவரும் சூழலில், வெறும் குறைகளை மட்டும் கூறாதீர்கள் என்றும் தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.

கொரோனா
கொரோனா

தமிழகத்தில் இதுவரை 31,667 பேர் கொரோனா வைரஸால் பாதிப்படைந்துள்ளனர். சென்னையில் மட்டும் 22,149 பேர் பாதிப்படைந்துள்ளனர். இறந்தவர்களின் எண்ணிக்கை 269 ஆக உள்ளது.

`776 பாசிட்டிவ்; ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 28 மாவட்டங்களில் புதிய தொற்று இல்லை!’- அமைச்சர் விஜயபாஸ்கர் #NowAtVikatan
அடுத்த கட்டுரைக்கு