Election bannerElection banner
Published:Updated:

தேக்கம்பட்டி முகாம்: தாமதமாக வந்த அமைச்சர்கள்! - 3 மணி நேரம் காக்கவைக்கப்பட்ட யானைகள்

யானைகள் முகாம்
யானைகள் முகாம்

கோவை தேக்கம்பட்டி பகுதியில், கோயில் யானைகள் புத்துணர்வு முகாம் தொடங்கியது.

தமிழக அரசின் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் ஒவ்வோர் ஆண்டும், கோயில் யானைகளுக்குப் புத்துணர்வு அளிக்கும்விதமாக, நலவாழ்வு முகாம் நடத்தப்பட்டுவருகிறது. முதன்முதலாக கடந்த 2003-ம் ஆண்டு நீலகிரி மாவட்டம், முதுமலை தெப்பக்காட்டில் முகாம் நடத்தப்பட்டது. அதன் பிறகு, கடந்த 2012-ம் ஆண்டு முதல் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகேயுள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் புத்துணர்வு முகாம் நடத்தப்பட்டுவருகிறது.

யானைகள் முகாம்
யானைகள் முகாம்
கேரளா: மாஸ் யானை `மங்கலம்குன்னு கர்ணன்' மரணம்... கண்ணீரில் `கடவுளின் தேசம்!'

அதன்படி, கோயில் யானைகளுக்கான 13-வது முகாம் தேக்கம்பட்டியில் நேற்று தொடங்கியது.

பொதுவாக யானைகள் முகாம், டிசம்பர், ஜனவரி மாதங்களில் நடைபெறும். ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக 2020-21 முகாம் குறித்த அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, பிப்ரவரி 8-ம் தேதி யானைகள் முகாம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, யானைகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, 7-ம் தேதி தேக்கம்பட்டிக்கு அழைத்துவரப்பட்டன. வழக்கமாக, காலை நேரங்களில்தான் தொடக்க விழா நடைபெறும். ஆனால், இந்த முறை தொடக்கவிழா நேரம் குறித்து முன்கூட்டியே அறிவிக்கப்படவில்லை.

மதியத்துக்கு மேல், 4 மணிக்கு மேல் என்று உறுதிபடுத்தப்படாத தகவல்கள் வெளியாகிக்கொண்டிருந்தன. காலை 11:45 மணியளவில்தான், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் மாலை 3:30 மணியளவில் முகாமைத் தொடங்கிவைக்கவிருக்கிறார்கள் என்று அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியானது.

அதையடுத்து, பவானி ஆற்றங்கரையோரம் அமைக்கப்பட்ட ஷவர் குளியலில் யானைகள் குளிக்கவைக்கப்பட்டன. மாலை 3:15 மணியளவில் யானைகளுக்கு அலாங்காரம் செய்து, வரிசையாக அணிவகுத்து நிறுத்தினர்.

ஆனால், 3:30 மணி ஆகியும் அமைச்சர்கள் வரவில்லை. யானைகள் அருகருகே நின்று அன்பை வெளிப்படுத்திக்கொண்டிருந்தன. பொதுமக்களும் அதிகாரிகளும் அவ்வபோது யானைகளைப் பார்த்து போட்டோ எடுத்துக்கொண்டிருந்தனர். தொடக்க விழா தாமதம் குறித்து அதிகாரிகள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் விசாரித்தோம்.

சசிகலா வருகையால் அ.தி.மு.க-வில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. அதனால்தான், நிகழ்ச்சியைச் சரியான திட்டமிடலின்படி நடத்த முடியவில்லை எனத் தகவல் கிடைத்தது. மாலை 5:30 மணியளவில்தான் மேட்டுப்பாளையம் டு தேக்கம்பட்டி வழித்தடத்தில் அமைச்சர்களை வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டன.

வழக்கமாக, காலையில் யானைகள் குளிக்கவைக்கப்பட்டு, அணிவகுப்பாக நிறுத்திய அரை மணி நேரத்தில், பூஜைகள் முடிந்து, உணவு கொடுக்கப்பட்டு முகாம் தொடங்கிவிடும். ஆனால், நேற்று அமைச்சர்கள் மூன்று மணி நேரம் தாமதமாகத்தான் தேக்கம்பட்டி வந்தனர். இதனால் பாகன்கள் சோர்வடைந்துவிட்டனர். யானைகள் நீண்ட நேரம் நிற்கும் என்றாலும், அலங்காரம், மக்கள் கூட்டம் போன்றவை அவற்றுக்கு ஒருவித அசௌகரியத்தைக் கொடுக்கும் என்கின்றனர் வனவிலங்கு ஆர்வலர்கள்.

6 மணியளவில் வந்த அமைச்சர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அவை முடிந்த பிறகே, அமைச்சர்கள் யானைகளுக்கு உணவு கொடுத்து, முகாமைத் தொடங்கிவைத்தனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு