Published:Updated:

`ஆதிச்சநல்லூர் அகழாய்வைத் தொடர வேண்டும்!'- கீழடியில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

``தமிழக பண்பாடு, கலாசாரத்தை பாதுகாக்கும் விதமாக அகழாய்வு செய்ய வேண்டும். இதற்கு மத்திய அரசிடம் மாநில அரசு வலியுறுத்த வேண்டும்" என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

கீழடியில் ஸ்டாலின்
கீழடியில் ஸ்டாலின்

மதுரை அருகே, சிவகங்கை மாவட்டத்துக்கு உட்பட்ட கீழடியில் தமிழக தொல்லியல் துறையின் சார்பாக 5-ம் கட்ட அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது. கடந்த ஜூன் மாதம் 13-ம் தேதி தொடங்கி, செப்டம்பர் 30-ம் தேதி நிறைவுபெறும் என கூறப்பட்டநிலையில், தற்போது 15 நாள்கள் கூடுதலாக அகழாய்வுப் பணி செய்ய உள்ளனர். இந்த நிலையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கீழடிக்கு வந்தார். அவர் அங்கு நடந்த அகழாய்வுப் பணியைப் பார்வையிட்டார்.

அகழாய்வு பணியை பார்வையிடும் ஸ்டாலின்
அகழாய்வு பணியை பார்வையிடும் ஸ்டாலின்

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ``தமிழக வரலாற்றுப் பெருமையைப் பறைசாற்றும் விதமாக கீழடி அகழாய்வுப் பணியில் பல்வேறு பொருள்கள் கிடைத்துள்ளன. கீழடியில் நிற்பதையே பெருமைகொள்கிறேன். இது ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் பெருமை. கீழடியின் பெருமையை வெளிக்கொண்டுவரும் விதமாக பணியாற்றிய தமிழக அரசு மற்றும் நிர்வாகத்தினர், தமிழ் அறிஞர்கள், அதிகாரிகள், பணியாளர்கள் என்று இதற்காக பணியாற்றிய ஒட்டுமொத்த நபர்களுக்கும் வாழ்த்துகள். கீழடி அகழாய்வுப் பணியை வெற்றிகரமாகத் தொடர்ந்து செய்ய வேண்டும்.

கீழடி 'வியப்பு' - தமிழர் வரலாறும் இரண்டு புதிர் முடிச்சுகளும்!

கீழடிக்கு முக்கியத்துவம் கருதி மத்திய, மாநில அரசுகள் செயல்பட வேண்டும். கீழடி கி.மு. 6-ம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்தவை என்று கண்டறியப்பட்டுள்ளது. பானை ஓடுகள், தங்கம் உள்ளிட்ட பழைமையான பொருள்கள் கிடைத்து மெய்ப்பிக்கச் செய்கிறது. உத்தரப்பிரதேச மாநிலம் சனோலி மற்றும் குஜராத் மாநிலம் வாட் உள்ளிட்ட இடங்களைப் பாதுகாக்கப்பட்ட இடங்களாக அறிவித்து அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசு அறிவித்துள்ளது. அதைப் போலவே கீழடியிலும் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்.

Stalin
Stalin

4, 5 நாள்களுக்கு முன் தமிழக மக்கள் சார்பாக தமிழக எம்.பி-க்களான கனிமொழி, சு.வெங்கடேசன், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மத்திய தொல்லியல் துறை சம்பந்தப்பட்ட இணை அமைச்சரை சந்தித்து கீழடி அகழாய்வு விஷயங்களை மேம்படுத்த வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்துள்ளனர். தூத்துக்குடியில் உள்ள ஆதிச்சநல்லூர் அகழாய்வைத் தொடர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் வரலாறு தெற்கிலிருந்துதான் தொடங்கப்பட வேண்டும் என வரலாற்று அறிஞர்கள் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார்கள். ஆனால், தமிழகத்திலிருந்து தொடங்கப்பட வேண்டும் என்பதை கீழடி உறுதி செய்துள்ளது. தமிழக பண்பாடு, கலாசாரத்தை பாதுகாக்கும் விதமாக அகழாய்வு செய்ய வேண்டும். இதற்கு மத்திய அரசிடம் மாநில அரசு வலியுறுத்த வேண்டும்" என்றார்.