Published:Updated:

ஆரணியா, செய்யாறா... மோதிக்கொள்ளும் அமைச்சர் - எம்.எல்.ஏ?

கா.முரளி

திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டு புதிய மாவட்டங்களாக உருவாக்க வேண்டும் என்று அங்காளி பங்காளி சண்டை போட்டுவருகின்றனர் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனும் செய்யாறு எம்.எல்.ஏ தூசி மோகனும்.

Sevur Ramachandran
Sevur Ramachandran

பெரிய மாவட்டமான வேலூர் மாவட்டத்தை மூன்றாகப் பிரிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததையடுத்து, `திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, ஆரணியைத் தலைமையாகக் கொண்டு ‘ஆரணி மாவட்டமாக’ அறிவிக்க வேண்டும் என்றும், செய்யாறை தலைமையாகக் கொண்டு ‘செய்யாறு மாவட்டமாக’ உருவாக்க வேண்டும் என்றும், அங்காளி பங்காளி சண்டை போட்டுவருகிறனர் ஆரணி எம்.எல்.ஏ-வும் இந்து சமைய அறநிலையத்துறை அமைச்சருமான சேவூர் ராமச்சந்திரனும், செய்யாறு அ.தி.மு.க எம்.எல்.ஏ-வும் திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளருமான தூசி மோகனும்.

aarani
aarani

“திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, ஆரணியைத் தலைமையிடமாகக் கொண்டு ‘ஆரணி மாவட்டம்’ உருவாக்குவதற்கான வேலையில் முழு மூச்சாகச் செயல்பட்டு வருகிறேன். இது சம்பந்தமாக முதல்வரிடம் தொடர்ந்து பேசி வருகிறேன் என்று அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தன் தொகுதி மக்களிடம் நம்பிக்கையை விதைத்து வருகிறார். அவர் ஏறும் மேடைகளிலும் இதை உரக்கச் சொல்லி வருகிறார்.” இது ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க, ``செய்யாறை தலைமையாகக் கொண்டு கூடிய விரைவில் ‘செய்யாறு மாவட்டம்’ உருவாக்கப்படும். இதை நிச்சயம் நான் நிறைவேற்றுவேன் எனச் செய்யாறு எம்.எல்.ஏ தூசி மோகன் தன் தொகுதி மக்களிடம் கூறிவருகிறார்.” இந்த மாவட்டப் பிரிப்பு பிரச்னையால், இருவருக்கும் இடையே அமைதியாக ஒரு பனிப்போர் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. ஆரணி மற்றும் செய்யாறு தொகுதி மக்களும் எங்கள் பகுதியை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து கையெழுத்து இயக்கப் போராட்டம் போன்றவை நடத்திவருகின்றனர்.

`செய்யாறோடு தொடங்கப்பட்ட வருவாய்க் கோட்டங்களான திருவண்ணாமலை, வேலூர் ஆகியவை மாவட்டங்களாக மாறிவிட்டது. திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகியவை மாவட்டங்களாக மாற இருக்கின்றன. இந்த நிலையில், செய்யாறு மட்டும் மாற்றப்படாமல் அப்படியே உள்ளது' என்கின்றனர் செய்யாறு மக்கள். மாவட்டப் பிரிப்பு செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கையெழுத்து இயக்க ஊர்வலங்களும் நடத்தினர். அப்போது அவர்கள் கூறுகையில், "5,000 சதுர கி.மீ-க்கு அதிகமாக உள்ள மாவட்டங்களில் திருவண்ணாமலையும் ஒன்று. மாவட்டத்தின் கடைசியில் செய்யாறு இருக்கிறது. செய்யாறு தொகுதிக்குட்பட்ட மக்கள் கலெக்டரிடம் மனுக்கொடுக்க வேண்டும் என்றால், 110 கி.மீ பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. எஸ்.பி அலுவலகம் செல்ல வேண்டும் என்றாலும் திருவண்ணாமலைக்குத்தான் செல்ல வேண்டும்.

செய்யாறோடு தொடங்கப்பட்ட வருவாய் கோட்டங்களான திருவண்ணாமலை, வேலூர் ஆகியவை மாவட்டங்களாக மாறிவிட்டது. திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகியவை மாவட்டங்களாக மாற இருக்கிறது. இந்த நிலையில், செய்யாறு மட்டும் மாற்றப்படாமல் அப்படியே உள்ளது.
செய்யாறு மக்கள்

செய்யாறில் ஏதாவது ஒரு நிகழ்ச்சி என்றால்கூட கலெக்டர் வருவதற்கு அதிக நேரம் ஆகிறது. அதற்குள் நிகழ்ச்சியே முடிந்துவிடுகிறது. அதே போன்று செய்யாறில் இருந்து சாதாரண மக்கள் திருவண்ணாமலை சென்று வர வேண்டும் என்றால், ஒரு நாள் முழுவதும் செலவிட வேண்டியுள்ளது. பஸ் வசதிகளும் மிகமிகக் குறைவாக உள்ளது. இதனால் இங்குள்ள மக்கள் முகவும் சிரமத்துக்குள்ளாகிறனர். 2014-ம் ஆண்டு நடந்த எம்.பி தேர்தலின் போதுகூட செய்யாறுக்கு வந்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, செய்யாறு மாவட்டம் உருவாக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்'' என்கின்றனர் மக்கள்.

திருவண்ணாமலை மாவட்டத்தைப் பிரித்தால், ஆரணியைத் தலைமையிடமாக ஆக்க வேண்டும் என்று ஆரணி மக்களும் தங்கள் தரப்பு போராட்டத்தை நடத்துகின்றனர். ஆரணி வணிகர்களோ ஒரு லட்சம் பொது மக்களிடம் கையொப்பம் பெற்று முதல்வருக்கு அனுப்பும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். `ஆரணி 4 மாவட்டத்தின் மையப்பகுதி என்பதால், ஆரணியை மாவட்டமாக உருவாக்கினால் போக்குவரத்து பிரச்னைகள் இருக்காது. 4 தொகுதி மக்களுக்கும் பயனுள்ளதாக ஆரணி மாறிவிடும்' என்கின்றனர். முதல்வர் குறைதீர்வு கூட்டத்தில், பெரும்பான்மையான மனுக்கள் ஆரணியை மாவட்டமாகப் பிரிக்க வேண்டும் என்றே கொடுத்துள்ளனர் ஆரணி மக்கள்.

ஆரணியை மாவட்டமாக உருவாக்குவது குறித்து முதல்வரிடமும் வருவாய் அமைச்சரிடமும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.
அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்

``அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனோ, ஆரணியை மாவட்டமாக உருவாக்கிவிட்டால் இத்தொகுதியின் நிரந்தர எம்.எல்.ஏ-வாக மக்கள் தன்னை மாற்றுவார்கள் என்ற நம்பிக்கையில், ஆரணியை மாவட்டமாக உருவாக்குவது குறித்து முதல்வரிடமும் வருவாய் அமைச்சரிடமும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். செய்யாறு எம்.எல்.ஏ மோகனோ, அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனை பகைத்துக்கொள்ளாமல் மறைமுகமாகக் காய் நகர்த்துகிறார். அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனும் எம்.எல்.ஏ தூசி மோகனும் நல்ல நண்பர்கள். ஆனால், மாவட்டப் பிரிப்பு விஷயத்தில் எலியும் பூனையுமாக இருக்கின்றனர். இவையெல்லாம் ஒரு புறம் இருந்தாலும், திருவண்ணாமலையை இரண்டாகப் பிரிப்பாரா, மாட்டாரா முதல்வர்? என்பதுதான் கேள்விக்குறி!" எனக் கூறுகின்றனர் உள்ளூர் அ.தி.மு.க பிரமுகர்கள்.