Published:Updated:

நெல்லை: முதல்வரைச் சந்திக்க முடியாத முதியவர்! - வீடு தேடிச்சென்று உதவிய எம்.எல்.ஏ

முதியவர் ஆறுமுகம்
முதியவர் ஆறுமுகம்

நெல்லைக்கு வருகை தந்த முதல்வரைச் சந்தித்து, தனக்கு முதியோர் உதவித்தொகை கேட்டு மனு அளிப்பதற்காக வந்த முதியவர் ஆறுமுகத்தை போலீஸார், அனுமதிக்காமல் திருப்பி அனுப்பிய நிலையில், தற்போது அவருக்கு உதவி கிடைத்திருக்கிறது.

நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். 70 வயது முதியவரான அவர் தன்னுடைய தள்ளாத வயதில் நெல்லையில் உள்ள வாகனக் காப்பகம் ஒன்றில் சொற்ப வருமானத்துக்கு வேலை செய்து வருகிறார்.

நெல்லை: சாப்பாட்டுக்கே கஷ்டம்; முதல்வரைச் சந்திக்க வந்த முதியவர்! போலீஸ் தடுத்ததால் ஏமாற்றம்

மிகவும் நலிவடைந்த நிலையில், கஷ்ட ஜீவனம் நடத்திவரும் முதியவர் ஆறுமுகம், அரசு வழங்கும் முதியோர் உதவித் தொகை கோரி பல முறை அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளார். ஆனால், அவருக்கு இதுவரை அரசு வழங்கும் எந்த உதவியும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 9-ம் தேதி நெல்லைக்கு வந்திருப்பதை அறிந்ததும் அவரைச் சந்தித்து மனு கொடுப்பதற்காக ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்துவதை அறிந்து உள்ளே சென்று மனு கொடுக்க முயன்றார்.

ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற முதியவர்
ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற முதியவர்

ஆனால், பாதுகாப்புக்காக வாயிலில் இருந்த போலீஸார், அவரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால், அவர் கையில் மனுவுடன் ஆட்சியர் அலுவலகத்துக்கு வெளியே சோகத்துடன் சுற்றிக்கொண்டிருந்தார். அவரை போலீஸார் விரட்டியதால், மனு கொடுக்காமல் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

முதியவர் ஆறுமுகத்திடம் பேசி அவரது நிலையை விகடன் இணையத்தில் 9-ம் தேதி செய்தியாகப் பதிவு செய்தோம். ``நெல்லை: சாப்பாட்டுக்கே கஷ்டம்; முதல்வரைச் சந்திக்க வந்த முதியவர்! போலீஸ் தடுத்ததால் ஏமாற்றம்” என்ற தலைப்பில் அந்தச் செய்தி வெளியானது.

முதியவரைச் சந்தித்த எம்.எல்.ஏ இன்பதுரை
முதியவரைச் சந்தித்த எம்.எல்.ஏ இன்பதுரை

நாம் வெளியிட்ட செய்தியை சிலர் இணையத்தில் பகிர்ந்து வைரலாக்கினார்கள். இது பற்றி அறிந்ததும், ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை, அந்த முதியவரின் இல்லத்தைத் தேடிக் கண்டுபிடித்து அவரது வீட்டுக்கு நேரில் சென்று இரண்டு மாதங்களுக்குத் தேவையான அரிசி, மளிகைப் பொருள் மற்றும் உதவித் தொகை வழங்கினார்.

நெல்லை: சாப்பாட்டுக்கே கஷ்டம்; முதல்வரைச் சந்திக்க வந்த முதியவர்! போலீஸ் தடுத்ததால் ஏமாற்றம்

முதியவர் ஆறுமுகத்துக்கு முதியோர் உதவித் தொகை கிடைக்கவும் ஏற்பாடு செய்யுமாறு முதல்வரின் அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளது. அதனால், அதிகாரிகள் அவரது வீட்டுக்கே சென்று அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

உதவிகளை வழங்கும் இன்பதுரை எம்.எல்.ஏ
உதவிகளை வழங்கும் இன்பதுரை எம்.எல்.ஏ

வீடு தேடி வந்து உதவிகள் செய்த இன்பதுரை எம்.எல்.ஏ மற்றும் உதவித்தொகை கிடைக்க ஏற்பாடு செய்து வரும் அதிகாரிகள் ஆகியோருக்கு முதியவர் ஆறுமுகம் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

அடுத்த கட்டுரைக்கு