Published:Updated:

`திருப்பூரிலிருந்து நடந்தே கரூர் வந்த தொழிலாளி!' -250 கி.மீ தூரத்தைக் கடக்க உதவிய செந்தில் பாலாஜி

கலியமூர்த்தியை வழியனுப்பும் செந்தில் பாலாஜி
கலியமூர்த்தியை வழியனுப்பும் செந்தில் பாலாஜி

அல்சர் பிரச்னையால வயிறு கடுமையா வலிச்சது. நடக்க முடியலை. இந்த நிலைமையில்தான், விகடன் மூலமா செந்தில் பாலாஜி சாரின் உதவி கிடைத்து, காரில் சொந்த ஊருக்குத் திரும்ப முடிஞ்சது.

ஊரடங்கால் உணவுக்கு வழியில்லாமல் அல்சர் பிரச்னையால் தத்தளித்த கட்டடத் தொழிலாளி ஒருவர் சொந்த ஊருக்கு நடந்தே செல்ல, அவரது நிலையை அறிந்து கார் மற்றும் மளிகைப் பொருள்களை ஏற்பாடு செய்து கொடுத்து நெகிழவைத்திருக்கிறார் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி.

கலியமூர்த்தியை வழியனுப்பும் செந்தில் பாலாஜி
கலியமூர்த்தியை வழியனுப்பும் செந்தில் பாலாஜி

தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை அருகில் தீபாம்பாள்புரத்தைச் சேர்ந்தவர், கலியமூர்த்தி. இவர், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருப்பூருக்கு கட்டட வேலை செய்வதற்காகச் சென்றுள்ளார். அங்கேயே தங்கி கட்டட வேலையை மேற்கொண்டு வந்திருக்கிறார்.

`என்னை உன் அண்ணனா நினைச்சுக்க!' - கலங்கி நின்ற மாற்றுத்திறனாளிக்கு உதவிய ஆய்வாளர்

இந்த நிலையில், கடந்த மாதம் 24-ம் தேதி, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட, அங்கேயே தங்கியிருக்கிறார். கையில் இருந்த பணத்தை வைத்து, நாள்களை கடத்தி வந்திருக்கிறார். கடந்த ஆறு நாள்களுக்கு முன்பு கையில் இருந்த பணம் முழுவதும் கரைய, சாப்பாட்டுக்கே வழியில்லாமல் தவித்திருக்கிறார். அவருக்கு ஏற்கெனவே அல்சர் பிரச்னை வேறு இருந்துள்ளது. சில நாள்களாக சாப்பிடாமல் இருந்ததால், அவருக்கு இருந்த அல்சர் பிரச்னை இன்னும் அதிகமாகியுள்ளது.

காரில் கிளம்பிய கலியமூர்த்தி
காரில் கிளம்பிய கலியமூர்த்தி

இதனால், அவர் அங்கிருந்த 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சொந்த ஊருக்குச் செல்ல முடிவெடுத்தார். அவருக்கு வாகன வசதி இல்லாததால், நடந்தே போக முடிவெடுத்து, வெறும் பிஸ்கட்களை சாப்பிட்டும், தண்ணீரைக் குடித்துக் கொண்டும் 60 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து வந்தார்.

கரூர் மாவட்ட எல்லையான தென்னிலைப் பகுதியில் அவர் வந்தபோது, அங்கு எதேச்சையாக அவரைச் சந்தித்த நபர் மூலமாக, நமது எண்ணை வாங்கி, நம்மைத் தொடர்புகொண்டு பேசினார். `அல்சர் பிரச்னை அதிகமானதால், என்னால் நடக்க முடியவில்லை. வயிறு கடுமையாக வலிக்கிறது. சாப்பிடவும் வழியில்லை. ஊருக்குப் போக ஏற்பாடு செய்தால், உங்களுக்குப் புண்ணியமா போகும்' என்று நா தழுதழுக்கத் தெரிவித்தார்.

அவரது துயர நிலையைக் கேட்டதும், உடனே, மாவட்ட ஆட்சியர் அன்பழகன், அரவக்குறிச்சி தி.மு.க எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி என முக்கியப் பிரமுகர்கள் சிலருக்கு கலியமூர்த்தியின் நிலைமையைப் பற்றி தகவல் தெரிவித்தோம். நமது தகவலைக் கேட்ட மாத்திரத்தில், உடனடியாக உதவ முன்வந்தார் செந்தில் பாலாஜி. கலியமூர்த்தியின் தொடர்பு எண்ணை வாங்கி, அவரிடம் பேசினார் செந்தில் பாலாஜி. தென்னிலைப் பகுதியில் இருப்பதாக கலியமூர்த்தி சொல்ல, அவரை அங்கேயே இருக்கச் சொன்னார்.

காரில் கிளம்பிய கலியமூர்த்தி
காரில் கிளம்பிய கலியமூர்த்தி

இரண்டு வழக்கறிஞர்களை, சாப்பாடு பொட்டலத்துடன் காரில் அனுப்பி வைத்தார். அங்கேயே கலியமூர்த்தியை சாப்பிட வைத்த அந்த வழக்கறிஞர்கள், அவரைக் காரில் ஏற்றி கரூருக்கு அழைத்து வந்தனர். அங்கே, அரிசி, மளிகைச் சாமான்கள் உள்ளிட்ட உதவிகளையும் வழங்கிய செந்தில் பாலாஜி, கலியமூர்த்தியை காரில் ஏற்றி, சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார்.

`அவரது வீட்டில் விட்டுவிட்டு வாருங்கள்' என்று சொல்லி வழக்கறிஞர்களை உடன் அனுப்பி வைத்தார். அதன்படி, தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டையில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தீபாம்பாள்புரத்தில் உள்ள வீட்டில் கலியமூர்த்தியை இறக்கிவிட்டுவிட்டு, வழக்கறிஞர்கள் திரும்பினர். இதற்கிடையில், நாம் உதவி கேட்ட சிலரும், ``கலியமூர்த்தி சொந்த ஊருக்குப் போய் சேர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி" என்றார்கள் உற்சாகத்துடன்.

கலியமூர்த்தியிடம் பேசினோம்.

``நான் திருப்பூர்ல மூணு நாளா சாப்பிடலை. அதனால், அல்சர் பிரச்னை அதிகமாயிடுச்சு. அதனால்தான், நடந்தே ஊருக்கு போறதுனு வைராக்கியமா கிளம்பிட்டேன். ஆனா, அல்சர் பிரச்னையால வயிறு கடுமையா வலிச்சது. நடக்க முடியலை. இந்த நிலைமையில்தான், விகடன் மூலமா செந்தில் பாலாஜி சாரின் உதவி கிடைத்து, காரில் சொந்த ஊருக்குத் திரும்ப முடிஞ்சது. 'ஊருக்குப் போக குப்பை லாரி கிடைச்சா கூட போதும்'னு இருந்த எனக்கு, கார்ல போக வாய்ப்பு கிடைச்சது.

 கலியமூர்த்தி
கலியமூர்த்தி

அதோட, பத்து நாள்களுக்குரிய அரிசி, மளிகைச் சாமான்களையும் வழங்கி, என்னை கலங்க வைத்துவிட்டார். இந்த உதவியைச் செய்த விகடனையும் செந்தில் பாலாஜி சாரையும் காலத்துக்கும் மறக்கமாட்டேன்!" என்றார், நெக்குருகி போய்!

'250 கிலோமீட்டர் தூரத்தை எப்படிக் கடப்பது?' என்று தவித்துப் போன ஒரு தொழிலாளிக்கு உதவ முடிந்ததை பாக்கியமாக கருதுகிறேன்.
செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ

கலியமூர்த்தியின் உற்சாகத்தை செந்தில் பாலாஜியிடம் தெரிவித்தோம். இதற்குப் பதிலளித்தவர்,

``கலியமூர்த்தியைப் பார்த்தபோது, உண்மையில் ரொம்பவும் களைத்துப் போயிருந்தார். தொடர்ந்து சாப்பிடாமல் இருந்தது, அதனால் அதிகமான அல்சர் பிரச்னை என அவரது நிலை மோசமாக இருந்தது. அவரால் நடக்கவே முடியவில்லை. அதனால், உடனடியாக அவரை காரில் ஏற்றி, சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தேன்.

உணவு பொருள்கள் வழங்கும் செந்தில் பாலாஜி
உணவு பொருள்கள் வழங்கும் செந்தில் பாலாஜி

கலியமூர்த்தியின் நிலைமைப் பற்றி என் கவனத்துக்குக் கொண்டு வந்த விகடனுக்கு நன்றி, `250 கிலோமீட்டர் தூரத்தை எப்படிக் கடப்பது?' என்று தவித்துப் போன ஒரு தொழிலாளிக்கு உதவ முடிந்ததைப் பாக்கியமாக கருதுகிறேன்" என்றார் உணர்ச்சி மேலிட!

அடுத்த கட்டுரைக்கு