Published:Updated:

`ஒரே திருமண மண்டபத்துக்கு இருவரிடம் வசூல்; நகராட்சி ரசீதுகளுடன் மோதல்!'- தாம்பரத்தில் நடந்த குழப்பம்

தாம்பரம் நகராட்சியில் வாக்குவாதம்
தாம்பரம் நகராட்சியில் வாக்குவாதம்

ஒரே நாளில் பதிவு செய்வதற்கு நகராட்சி ஊழியர்கள் இருவரிடம் எப்படிப் பணத்தைப் பெறலாம் என இருதரப்பினரும் கொந்தளிக்க ஆரம்பித்தனர். இருதரப்பினரும் நகராட்சி ஊழியர்களிடம் கடுமையாகத் தகராறு செய்தனர்.

தாம்பரம் நகராட்சியில், நகராட்சி திருமண மண்டபத்தில் நிகழ்ச்சி நடத்திக்கொள்ள இருதரப்பினரிடம் நகராட்சி ஊழியர்கள் பணம் பெற்றிருக்கிறார்கள். இருதரப்பினரும் ஒரே நாளில் சீர்வரிசை பொருள்களுடன் மண்டபத்துக்குள் நுழைய நாங்கள்தான் பதிவு செய்திருந்தோம் என இருதரப்பினரும் ரசீதைக் காட்டினார்கள். இதனால் இருதரப்பினரிடையே சலசலப்பு ஏற்பட்டது. பல மணிநேரம் நகராட்சி ஊழியர்களுடன் வாக்குவாதம் நடைபெற்றதால் நகராட்சி அலுவலகமே போர்க்களம்போல ஆனது. காவல்துறை துணையுடன் நகராட்சி ஊழியர்கள் ஒரு வழியாக பிரச்னைக்கு முடிவு கண்டிருக்கிறார்கள்.

தாம்பரம் நகராட்சி திருமண மண்டபம்
தாம்பரம் நகராட்சி திருமண மண்டபம்

தாம்பரம் அருகே உள்ள வரதராஜபுரத்தைச் சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ். இன்று நடைபெறும் இவரின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காகத் தாம்பரம் நகராட்சிக்குச் சொந்தமான அம்பேத்கர் மண்டபத்தில் ஜூலை மாதம் பதிவு செய்ய வந்திருந்தார். அன்றைய தேதியில் மண்டபம் காலியாக இருப்பதால் நகராட்சி ஊழியர்கள் பணத்தைக் கட்டச் சொல்லியிருக்கிறார்கள். 80,000 பணத்தைச் செலுத்திய பிறகு, ஜெயப்பிரகாஷ் ரசீதை வீட்டுக்குக் கொண்டு சென்றுவிட்டார்.

பணம் செலுத்திய ரசீதை மேல்தளத்தில் உள்ள அலுவலர்களிடம் கொடுக்க வேண்டும். ரசீதுடன் திருமண அழைப்பிதழ், மணமக்கள் புகைப்படங்கள், அடையாள சான்றுகள் போன்ற விவரங்களையும் நகராட்சி ஊழியர்களிடம் கொடுத்துப் பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகே அந்தத் தேதி அவர்களுக்கு ஒதுக்கப்படுவது பதிவேட்டில் குறிப்பிடப்படும். ஆனால், பணம் செலுத்திய ரசீதை நகராட்சியில் கொடுத்துப் பதிவு செய்யாமல் எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார்.

நகராட்சி ஊழியர்களுடன் தகராறு
நகராட்சி ஊழியர்களுடன் தகராறு

இதனால் அந்தத் தேதி காலியாகவே பதிவேட்டிலிருந்து வந்தது. இந்த நிலையில் செப்டம்பர் மாதம் திருவஞ்சேரி பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் திருமணம் என இரண்டு நாள்களுக்குப் பதிவு செய்ய வந்துள்ளார். ஜெயப்பிரகாஷ் பதிவு செய்த தேதியில் காலியாக இருப்பதாக நகராட்சி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து அதே தேதியில் ராமச்சந்திரனும் பணத்தைச் செலுத்தி இருக்கிறார். ராமச்சந்திரன் முறையாக ஆவணங்களை நகராட்சி ஊழியர்களிடம் கொடுத்து பதிவேட்டில் பதிவு செய்து சென்றுவிட்டார்.

இரவு நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சிக்காக இன்று காலை 10 மணிக்கு மேல் ராமச்சந்திரனின் உறவினர்கள் சமையல் பொருள்கள், சீர்வரிசை பொருள்களைக் கொண்டுவந்து இறக்கினார்கள். அதே நேரத்தில் ஜெயப்பிரகாஷ் தரப்பினரும் சமையல் பொருள்களைக் கொண்டு வந்து இறக்கினார்கள். இருதரப்பினரும் விசாரித்துக்கொண்டபோது இருவரும் பணத்தைச் செலுத்தி இருப்பது தெரியவந்தது. ஒரே நாளில் பதிவு செய்வதற்கு நகராட்சி ஊழியர்கள், இருவரிடமும் எப்படிப் பணத்தைப் பெறலாம் என இருதரப்பினரும் கொந்தளிக்க ஆரம்பித்தனர்.

நகராட்சி ஊழியர்களுடன் தகராறு
நகராட்சி ஊழியர்களுடன் தகராறு

இருதரப்பினரும் நகராட்சி ஊழியர்களிடம் கடுமையாகத் தகராறு செய்தனர். அவர்களைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் நகராட்சி ஊழியர்கள் இறங்கினார்கள். ஜெயப்பிரகாஷ் பணத்தைக் கட்டிவிட்டு அதைப் பதிவு செய்யாமல் போனது அவரின் தவறு என நகராட்சி ஊழியர்கள் தெரிவித்தனர். ஆனாலும், ஜெயப்பிரகாஷ் தரப்பினர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அருகில் உள்ள வேறொரு தனியார் மண்டபத்தை ஏற்பாடு செய்து கொடுக்கிறோம் என நகராட்சி ஊழியர்கள் ஜெயப்பிரகாஷிடம் தெரிவித்தனர். அதையும் அவர் ஏற்கவில்லை. தகவல் அறிந்து தாம்பரம் காவல் ஆய்வாளர் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து முறையாகப் பதிவு செய்த ராமச்சந்திரன் குடும்பத்தினரின் வரவேற்பு நிகழ்ச்சியை மண்டபத்தின் உள்ளே நடத்திக்கொள்ள அனுமதித்தனர். பணத்தைக் கட்டி பதிவு செய்யாததால் ஜெயப்பிரகாஷ் குடும்பத்தினரின் வரவேற்பு நிகழ்ச்சி வெளியில் உள்ள காலி மைதானத்தில் அரங்கு அமைத்து நிகழ்ச்சி நடத்திக்கொள்ள முடிவு செய்யப்பட்டது. முறையாக அனுமதி பெற்றவருக்குப் பணத்தைத் திருப்பிக் கொடுக்கவும் நகராட்சி நிர்வாகம் முன்வந்தது.

ஒருவழியாக சுமுக முடிவெடுக்கப்பட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

பின் செல்ல