Published:Updated:

சாத்தான்குளம்: `அப்பவே நடவடிக்கை எடுத்திருந்தால்...’ -பிப்ரவரியில் நடந்தது என்ன?

மர்ம மரணம் அடைந்த ஜெயராஜ், பென்னிக்ஸ்
மர்ம மரணம் அடைந்த ஜெயராஜ், பென்னிக்ஸ்

`சாத்தான்குளம் எஸ்.ஐ-க்கள் மீது நான்கு மாசத்துக்கு முன்னாலயே நாங்க கொடுத்த புகாரில் நடவடிக்கை எடுத்திருந்தால் இப்போது இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது’ என வருத்தப்படுகிறார், ஜெபசிங். 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் போலீஸார் தாக்கியதில் தந்தை, மகன் ஆகியோர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைத்துறை நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் இந்தச் சம்பவத்தைக் கண்டித்துள்ளனர். 

சர்ச்சைக்குரிய சாத்தான்குளம் காவல் நிலையம்
சர்ச்சைக்குரிய சாத்தான்குளம் காவல் நிலையம்

இருவரின் உயிரிழப்புக்கு காரணமாகச் சொல்லப்படும் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் ஆகிய இரண்டு காவல் உதவி ஆய்வாளர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து கொலைக் குற்றவாளிகளுக்கு அளிக்கப்படும் தண்டனையை வழங்கிட வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது.

சாத்தான்குளம்: மிரட்டிய போலீஸ்; 3 மணிநேரம் போராடிய மருத்துவர்! -பதறவைத்த பரிசோதனைச் சீட்டு

இந்த நிலையில், சாத்தான்குளத்தில் பணியாற்றிய சர்சைக்குரிய இரு எஸ்.ஐ-க்கள் மீதான புகார்கள் அடுத்தடுத்து வெளிவரத் தொடங்கியுள்ளன. கொலை வழக்கு தொடர்பாக சில மாதங்களுக்கு முன்பு மகேந்திரன் என்பவரை விசாரணைக்கு அழைத்துச் சென்று அடித்ததில் மரணமடைந்ததாக சொல்லப்படுகிறது.

சாத்தான்குளம் காவல்துறையினர் மீது டி.ஐ.ஜி-யிடம் புகார்
சாத்தான்குளம் காவல்துறையினர் மீது டி.ஐ.ஜி-யிடம் புகார்

அதே கொலை வழக்கில் தொடர்புடைய ராஜாசிங் என்பவரையும் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை அடித்தது போல இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் ஆகியோர் அடித்துள்ளனர். அதன் பின்னர் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட ராஜாசிங் தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், சாத்தான்குளம் காவல்நிலையத்தில் கடந்த பிப்ரவரி 21-ம் தேதி நடந்த சம்பவம் ஒன்று தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. பழனியப்பபுரத்தைச் சேர்ந்த மதபோதகரான லாசர் பர்னபாஸ் உள்ளிட்ட 9 பேர் புளியங்குளம் கிராமத்தில் ஜெபக் கூட்டம் நடத்தியிருக்கிறார்கள்.

தாக்குதலில் காயமடைந்த லாசர் பர்னபாஸ்
தாக்குதலில் காயமடைந்த லாசர் பர்னபாஸ்

அனுமதியில்லாமல் கூட்டம் நடத்திய அவர்களை சாத்தான்குளம் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று கொடூரமாகத் தாக்கியுள்ளனர். அதில் லாசர் பர்னபாஸ் மற்றும் அவரது நண்பர்கள் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருக்கிறார்கள்.

இது குறித்து பேசிய நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சிலின் மாநில ஒருங்கிணைப்பாளரான ஜெபசிங், ``பாஸ்டர் லாசர் பர்னபாஸ் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து புளியங்குளம் பகுதியில் ஜெபகூடுகை நடத்தியிருக்கிறார்கள். அப்போது அங்கு வந்த போலீஸார், அனைவரையும் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

கிறிஸ்டியன் கவுன்சில் ஒருங்கிணைப்பாளர் ஜெபசிங்
கிறிஸ்டியன் கவுன்சில் ஒருங்கிணைப்பாளர் ஜெபசிங்

உள்ளே போனதும் சாத்தான்குளம் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் ஆகியோர் எந்தக் காரணமும் இல்லாமல் சரமாரியாகத் தாக்கியிருக்கிறார்கள். லாசர் பர்னபாஸின் முதுகுத் தண்டுவடம், ஆசனவாய் ஆகிய இடங்களில் அடித்துள்ளனர்.

விசாரணைக்கு அழைத்துச் சென்றவர்களை நிர்வாணப்படுத்தி பின்பகுதி, ஆண்குறி ஆகியவற்றிலும் அடித்திருக்கிறார்கள். விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அய்யாத்துரை என்பவர் மாற்றுத் திறனாளி. அதைக்கூடப் பொருட்படுத்தாமல் மாற்றுத் திறன் ஏற்பட்ட காலிலேயே அடித்து டார்ச்சர் செய்திருக்கிறார்கள். 

கருங்கடல் பஞ்சாயத்து தலைவர் நல்லதம்பி
கருங்கடல் பஞ்சாயத்து தலைவர் நல்லதம்பி

போலீஸ் நிலையத்தில் நடக்கும் அத்துமீறல் பற்றிக் கேள்விப்பட்ட கருங்கடல் கிராமத்தின் பஞ்சாயத்து தலைவரான நல்லதம்பி என்பவர் காவல்நிலையத்துக்குச் சென்று சமாதானம் செய்திருக்கிறார். அவரை தகாத வார்த்தைகளால் பேசியதுடன் கன்னத்தில் ஓங்கி அறைந்து விரட்டியிருக்கிறார்கள்.

போலீஸாரின் அத்துமீறல் பற்றிக் கேள்விப்பட்ட கிராம மக்கள், சாத்தான்குளம் காவல்நிலையத்தின் முன்பாகத் திரண்டு விட்டார்கள். அதன் பிறகுதான் 9 பேரையும் வெளியில் விட்டாங்க. வெளியில் வரும்போது நாலஞ்சு பேரால் சரியா நடக்கவே முடியலை. 

வயிற்றில் ஏற்பட்ட காயம்
வயிற்றில் ஏற்பட்ட காயம்

மாற்றுத்திறனாளியான அய்யாத்துரை, ராமேஸ்வரம் சென்று விட்டார். அங்குள்ள அரசு மருத்துவமனையில் ஒருவாரம் சிகிச்சையில இருந்த பிறகே அவர் குணமடைந்தார். மற்றவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக் கொண்டார்கள்.

காரணமே இல்லாமல் 9 பேர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக முதல்வரின் தனிப்பிரிவு, கலெக்டர் ஆகியோருக்கு புகார் மனு அனுப்பினோம். பிப்ரவரி 23-ம் தேதி டி.ஐ.ஜி அலுவலகத்தில் நேரில் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. மாநில சிறுபான்மை ஆணையத்திலும் புகார் செய்தோம்.

காவல் நிலையம்
காவல் நிலையம்

சிறுபான்மை ஆணையத்திலிருந்து எஸ்.பி-க்கு நோட்டீஸ் அனுப்பினாங்க. அதனால் எஸ்.பி எங்களை அழைத்து, `புகாரை வாபஸ் வாங்கிடுங்க. ரெண்டு எஸ்.ஐ-க்களையும் மன்னிப்பு கேட்கச் சொல்லுறேன்’ என்றார். நாங்கள் அதற்கு உடன்படவில்லை.

மாநில மனித உரிமைகள் ஆணையத்திலிருந்தும் எஸ்.பி-க்கு நோட்டீஸ் அனுப்பினாங்க. இந்த விவகாரம் பற்றி விசாரணை நடப்பதற்கு முன்பாகவே கொரோனா பரவல் அச்சுறுத்தல் ஏற்பட்டுவிட்டது. அதனால் விசாரணை கிடப்பில் போடப்பட்டு விட்டது. 

நான்கு மாதங்களுக்கு முன்பு நாங்கள் கொடுத்த புகாரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் இரு அப்பாவி உயிர்கள் தப்பியிருக்கும்
ஜெபசிங்

நான்கு மாதங்களுக்கு முன்பாகவே நாங்க அந்த இரு எஸ்.ஐ-க்களின் செயல்பாடுகள் சரியில்லை என்று புகார் கொடுத்திருந்தோம். எங்கள் புகார் மீது அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்திருந்தால் இப்போது இரு அப்பாவி உயிர்கள் பலியாகி இருக்காது” என்று வருத்தப்பட்டார்.

அடுத்த கட்டுரைக்கு