Published:Updated:

கொரோனா: `பிற மாநகராட்சிகளைவிட சென்னையில் அதிக பரிசோதனை!’ - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கொரோனா
கொரோனா

``ஒவ்வொரு நாளும் சராசரியாக சுமார் 12,000 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.”

இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் கடுமையாகப் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை இங்கு பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 16,38,870 ஆக உள்ளது. இதில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10,57,805 ஆகவும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 5,45,318 ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35,747 ஆகவும் அதிகரித்துள்ளது. மாநிலங்களில் பாதிப்புகளைப் பொறுத்தவரை மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாகத் தமிழகம் உள்ளது. தமிழகத்தில் இதுவரை பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 2,39,978 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,838 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் ஒருபகுதியாக மக்களுக்கு முகக்கவசங்களை வழங்கி வருகிறது. சென்னை மாநகராட்சியில் சுமார் 1.17 கோடி முகக்கவசங்கள் கொள்முதல் செய்யப்பட்டு 1.07 கோடி முகக்கவசங்கள் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளன. அதேநேரம் 6.17 லட்சம் கையுறைகள் கொள்முதல் செய்யப்பட்டு 3.84 லட்சம் கையுறைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. முகக்கவசங்கள் அணிவது என்பது கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறையாக இருப்பதால் அரசு பல்வேறு வகையில் மக்களிடம் முகக்கவசம் அணிய வலியுறுத்து வருகிறது. இதையடுத்து, ரேஷன் கடைகளின் வழியாகவும் முகக்கவசம் விநியோகம் செய்யும் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. விரைவில் இந்த நடவடிக்கையும் தொடங்கப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.

கொரோனா
கொரோனா

மாநிலங்களில் கொரோனா பரிசோதனைகளும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இதுவரை சுமார் 6.75 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார். அதாவது ஒவ்வொரு நாளும் சராசரியாக சுமார் 12,000 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். பரிசோதனை மாதிரிகளை சேகரிக்க சுமார் 30 மையங்களும் நடமாடும் பரிசோதனை மாதிரிகள் சேகரிக்கும் மையம் என்ற பெயரில் சுமார் 10 மையங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவில் உள்ள மற்ற மாநகராட்சிகளை விட சென்னையில் அதிகளவில் பரிசோதனை செய்து வருவதாகவும் கூறியுள்ளார். வீடு வீடாகச் சென்று கண்காணிக்கும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால், மிக விரைவில் பாதிப்புகள் குறையும் என அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். எனினும், ஊரடங்கு தளர்வுகள் குறித்த அச்சமும் சுகாதார நிபுணர்களிடையே நிலவி வருகிறது.

`கொரோனா பரவலை வேகப்படுத்தும் முக்கியக் காரணி புகையிலை!’ - மத்திய சுகாதாரத்துறை
அடுத்த கட்டுரைக்கு