Published:Updated:

`தினமும் குடிச்சுட்டு அடிக்கிறான்யா; குடிகார மகனைக் கைது செய்யுங்க!’ - கண்ணீருடன் மனு அளித்த தாய்

மனு அளிக்க வந்த தாழபுஷ்பம்
மனு அளிக்க வந்த தாழபுஷ்பம்

தினமும் மது அருந்திவிட்டு அடித்துத் துன்புறுத்தும் குடிகார மகனைக் கைது செய்யக்கோரி தாயார் ஒருவர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீருடன் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி அருகே உள்ள அத்திமரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தாழபுஷ்பம். இவர் கணவர் முனியசாமி சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், 35 வயதான மகன் சின்னதுரையுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், குடிப்பழக்கத்துக்கு அடிமையான சின்னத்துரை, தினமும் மது அருந்திவிட்டு கொடுமைப்படுத்துவதாகவும், அரசு உடனடியாக டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் எனவும் சின்னத்துரையின் தாயார் தாழபுஷ்பம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீருடன் மனு அளித்துள்ளார்.

மனு அளிக்க வந்த தாழபுஷ்பம்
மனு அளிக்க வந்த தாழபுஷ்பம்

இதுகுறித்து தாழபுஷ்பத்திடம் பேசினோம், ``எனக்கு ஒரே மகன்தான். உடம்பு சரியில்லாம என்னோட கணவர் ஏற்கெனவே இறந்து போயிட்டாரு. ஆரம்பத்தில் குறைவான குடிப்பழக்கத்தில் இருந்த என் மகன், கல்யாணம் செஞ்சு வச்சா திருந்திடுவான்னு கல்யாணம் செஞ்சு வச்சேன். ஆனா, குடிப்பழக்கம் அதிகமாகி அடிமையாயிட்டான். அதனால, அவனோட மனைவி இங்க இருந்துப் பிரிஞ்சு அவளோட அம்மா வீட்டுக்குப் போயிட்டா. வீட்டுல நானும் மகனும்தான் இருக்கோம். தினமும் குடிச்சுட்டு வந்து என்னைத் திட்டுவதும், சம்பந்தமே இல்லாமல் ஏதாவது சொல்லி சண்டை போட்டுக்கிட்டே இருப்பான்.

இந்தநிலைமையில, கொரோனா ஊரடங்கு அறிவிச்ச கொஞ்ச நாள் வெளியில பிராந்தி பாட்டில் வாங்கிக் குடிச்சான். ஒரு கட்டத்துக்குமேல அவனுக்கு சரக்கு கிடைக்காததுனால குடிக்காம ஒழுங்கா இருந்தான். நானும் மகன் திருந்திட்டானேன்னு சந்தோஷப்பட்டேன். இப்ப திரும்பவும் டாஸ்மாக் கடைகள் திறந்ததுனால மறுபடியும் அதிகமா குடிக்க ஆரம்பிச்சுட்டான். விடிஞ்சதுல இருந்து ராத்திரி வரைக்கும் தொடர்ந்து ஒரே குடிதான்யா. வீட்ல உள்ள விளக்கு, பித்தளைப் பாத்திரம், டிவி, சிலிண்டர் வரை எல்லாத்தையும் வித்து குடிச்சிட்டான்யா.

மனு அளிக்க வந்த தாழபுஷ்பம்
மனு அளிக்க வந்த தாழபுஷ்பம்

குடிபோதையில் பெத்த தாயையே ரொம்பக் கேவலாமாகப் பேசுறான். அடிச்சு வீட்டைவிட்டு விரட்டிட்டான்யா. சோறுகூட பொங்க விடமாட்டேங்குறான். நான் சாப்பிட்டு ரெண்டு நாளாச்சு. வீட்டுக்குள்ளப் போக முடியல. தெரிஞ்சவங்க வீட்லயும், சொந்தக்காரங்க வீட்லயும் ஒழிஞ்சுக்கிறேன். போலீஸ்ல சொன்னா, `குடிகாரப்பயலுகள திருத்த முடியாதும்மா... திரும்பவும் உங்களை அடிச்சா சொல்லுங்க நாங்க கண்டிக்கிறோம்’னு மட்டும்தான் சொல்றாங்க.

வாழவே பிடிக்கலய்யா. வயசான காலத்துல இந்த உச்சி வெயிலுக்குள்ள வீட்ல இருந்து 12 கி.மீ நடந்தே கலெக்டர் ஆபீஸுக்கு மனு கொடுக்க வந்தேன். அவனைப் பிடிச்சு ஜெயில்ல போடணும். இனிமேலும் அவன் திருந்துவான்னு எனக்கு நம்பிக்கையில்ல. என்னால ஒவ்வொரு நாளும் சித்ரவதையை அனுபவிக்க முடியல. நான் கொடுத்த மனுவுக்கு கலெக்டர் நடவடிக்கை எடுக்கணும் இல்லேன்னா செத்துப் போறதைத் தவிர எனக்கு வேற வழி தெரியல.

மனு அளிக்க வந்த தாழபுஷ்பம்
மனு அளிக்க வந்த தாழபுஷ்பம்

இந்தப் பாழாப் போனக் குடிப் பழக்கத்தாலயும், குடிகாரர்களாலயும் என்னை மாதிரி இன்னும் எத்தனை தாய்மார்கள், மனைவிமார்கள், மகள்கள், அண்ணன், தம்பிகள் தினமும் கண்ணீர் வடிக்கிறாங்கன்னு தெரியல. பல குடும்பத்தோட கண்ணீரில் நடத்துற இந்த பிராந்தி கடையில இருந்து கிடைக்குற வருமானத்தை வச்சுதான் அரசாங்கத்தை நடத்தணுமாய்யா? 40 நாளுக்கும் மேல மூடி வச்சுருந்த இந்தக் கடைகளை நிரந்தரமா மூடணும்” என்றார் கண்ணீருடன்.

அடுத்த கட்டுரைக்கு