Published:Updated:

`பிறந்ததும் கேரளா சென்ற குழந்தை; 15 நாள்களுக்குப் பின் தாயுடன் சேர்ந்தது!’ - களியக்காவிளை நெகிழ்ச்சி

குழந்தையுடன் தாய் சோபியா நசீம் பானு
குழந்தையுடன் தாய் சோபியா நசீம் பானு

`குழந்தைபிறந்த உடன் சிகிச்சைக்காகக் கேரளாவுக்குக் கொண்டு சென்றார்கள். நான் மயக்க நிலையில் இருந்ததால் குழந்தையின் முகத்தை சரியாகப் பார்க்கக்கூட இல்லை.’

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இடலாகுடியைச் சேர்ந்த பைசல் - சோபியா நசீம் பானு தம்பதிகளுக்கு கடந்த 14-ம் தேதி நாகர்கோயிலில் ஒரு தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு மூச்சுத் திணறல் காரணமாக அவசரமாக இதய அறுவைசிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்காகக் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள அதிநவீன வசதி கொண்ட தனியார் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டியிருந்தது. அதற்காக 280 கிலோ மீட்டர் தொலைவு பயணிக்க வேண்டியிருந்தது. இதையடுத்து கேரள முதல்வரின் சிறப்பு அனுமதி பெறப்பட்டது. அதன் பிறகு ஆம்புலன்ஸ் மூலம் எர்ணாகுளம் மருத்துவமனைக்குக் குழந்தை கொண்டு செல்லப்பட்டது. ஆனால், தாய்க்கு நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.

குழந்தையை பெற்றுக்கொண்ட தாய்
குழந்தையை பெற்றுக்கொண்ட தாய்

குழந்தைக்கு ஆப்பரேஷன் முடிந்த நிலையில் தொடர்ந்து அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. சிகிச்சைக்குப் பிறகு அந்த குழந்தை நேற்று ஆம்புலன்ஸ் மூலம் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்டது. தமிழக கேரள எல்லைப் பகுதியான களியக்காவிளை வரை எர்ணாகுளம் அந்தத் தனியார் மருத்துவமனைக்குச் சொந்தமான ஆம்புலன்ஸில் குழந்தை கொண்டுவரப்பட்டது. கொரோனா காரணமாகத் தமிழக கேரள எல்லை மூடப்பட்டிருப்பதால் கேரள ஆம்புலன்ஸ் தமிழ்நாட்டுக்கும், தமிழக ஆம்புலன்ஸ் கேரளத்துக்கும் அனுமதிக்கப்படுவது இல்லை.

எனவே, களியக்காவிளை எல்லையில் குழந்தையை அழைத்துச்செல்ல நாகர்கோவில் தனியார் மருத்துவமனைக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் வந்தது. அந்த ஆம்புலன்ஸில் குழந்தையின் தாய் சோபியா நசீம் பானுவும் வந்திருந்தார். கேரள மாநில ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்ட குழந்தையை நாகர்கோவில் ஆம்புலன்ஸில் மாற்றினார்கள். பெற்றெடுத்து சுமார் 15 நாள்களுக்குப் பிறகு குழந்தை கையில் கிடைத்ததால் தாய் சோபியா நசீம் பானு ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்த நிலையில் குழந்தையை வாங்கி அணைத்துக்கொண்டார்.

குழந்தையை வழங்கும் நர்ஸ்
குழந்தையை வழங்கும் நர்ஸ்

அப்போது குழந்தையின் தாய் சோபியா நசீம் பானு கூறுகையில், ``குழந்தைபிறந்த உடன் சிகிச்சைக்காகக் கேரளாவுக்குக் கொண்டு சென்றார்கள். நான் மயக்க நிலையில் இருந்ததால், குழந்தையின் முகத்தை சரியாகப் பார்க்கக்கூட இல்லை. 15 நாள்களுக்குப் பிறகு குழந்தையின் முகத்தைப் பார்ப்பது மிகவும் பூரிப்பாக உள்ளது. லாக்டெளன் சமயத்தில் மருத்துவமனைக்கு செல்வது, சிகிச்சை எப்படி அளிக்கப்படுமோ என்ற பயம் இருந்தது. இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று குழந்தையை அணைத்துக்கொண்டார்.

துபாயிலிருந்து திரும்பிய 29வது நாளில் இளைஞருக்குக் கொரோனா பாசிட்டிவ்! - அதிர்ச்சியில் கேரளா

இந்த நிகழ்வு அங்கிருந்த விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி மற்றும் காவல்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகளை நெகிழ்ச்சியடைய வைத்தது. அதன் பிறகு தாயும் குழந்தையும் ஆம்புலன்ஸ் மூலம் நாகர்கோவில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அடுத்த கட்டுரைக்கு