Published:Updated:

மவுலிவாக்கம் கட்டடம் இடிந்து 5 ஆண்டுகள்... வீடு வாங்கியவர்களின் தற்போதைய நிலை என்ன?

மவுலிவாக்கம் கட்டடம் இடிந்த இடம் விற்பனைக்கு.
மவுலிவாக்கம் கட்டடம் இடிந்த இடம் விற்பனைக்கு.

மவுலிவாக்கம் கட்டடம் இடிந்து கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாகி விட்டன. இப்போது அந்த இடம் எப்படியிருக்கிறது என்று பார்க்கச் சென்றோம்.

மவுலிவாக்கத்தில் இடிந்துபோன அந்தக் கட்டடம், இடியாமல் நல்ல நிலையில் இருந்திருந்தால்... இன்று மவுலிவாக்கத்திலேயே பெரிய குடியிருப்பாக அது மாறியிருக்கும். மாடி பால்கனிகளில் துணிகள் காய்ந்துகொண்டிருக்கும். லிப்ட் பரபரப்பாக மேலேயும் கீழேயும் இயங்கிக்கொண்டிருக்கும். நீச்சல்குளத்தில் குழந்தைகள் ஆட்டம் போட்டுக்கொண்டிருப்பார்கள். பெரியவர்கள் பூங்காவில் அளவாளாவிக் கொண்டிருந்திருப்பார்கள். குடியிருப்புக்கு முன்னால், வாட்ச்மேன்கள் கூட்டம் தென்படும். பல குடும்பங்கள் சேர்ந்து ஒரே குடும்பமாக வாழ்ந்து களித்திருப்பார்கள்.

மவுலிவாக்கம் கட்டட விபத்து.
மவுலிவாக்கம் கட்டட விபத்து.

இயற்கையும் செயற்கையுமான காரணிகள் இணைந்து மாபெரும் பேரழிவை உண்டாக்கிவிட, பல உயிர்கள் பரிதாபமாகப் பலியாகின. மவுலிவாக்கத்தில் பிரேம் சிருஷ்டி நிறுவனம் சார்பாக 11 மாடியில் இரண்டு கட்டடங்கள் கட்டப்பட்டன. ஒரு கட்டடம் இடிந்து 61 உயிர்கள் பலியானதால் மற்றொரு கட்டடத்தை இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் உத்தரவின்படி கட்டடம் இதே நாளில்தான் ( 2016 நவம்பர் 2-ம் தேதி) வெடி வைத்து தகர்க்கப்பட்டது. 11 மாடிக்கட்டடமும் ஒரே விநாடியில் தகர்க்கப்பட்ட சம்பவம் தொலைக்காட்சிகளில் நேரலையாகக் காட்டப்பட, தமிழகமே பரிதவிப்புடன் அந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்ததை மறக்கவே முடியாது.

மவுலிவாக்கம் கட்டடம் இடிந்து கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாகி விட்டன. இப்போது அந்த இடம் எப்படியிருக்கிறது என்று பார்க்கச் சென்றோம். இடம் நீலநிற தகர ஷீட்களால் மறைக்கப்பட்டிருந்தது. பாழடைந்த பங்களாவின் வாசல் போன்று கேட் தெரிந்தது. துருப்பிடித்த நிலையில், பூட்டு ஒன்று தொங்கிக்கொண்டிருந்தது.

புதர் மண்டி கிடக்கும் மவுலிவாக்கம் கட்டடம் இடிந்த இடம்.
புதர் மண்டி கிடக்கும் மவுலிவாக்கம் கட்டடம் இடிந்த இடம்.

இடுக்கு வழியாக உள்ளே எட்டிப்பார்த்தபோது, நமக்குள் பழைய சம்பவங்கள் நினைவுக்கு வந்து போயின. இடிபாடுகள், பொக்லைன் எந்திரங்கள், சடலங்கள், காயமடைந்தவர்களின் கதறல்கள், ஆம்புலன்ஸ்கள், உயிரை இழந்தவரின் உறவுகள் அழக்கூட திராணியற்று நின்றது. அலட்சியம் காட்டிய அதிகாரிகள் முதல் அமைச்சர்கள் வரை வந்து சென்றது. ஜெயலலிதா வந்துபோனது, சந்திரபாபு நாயுடு வந்தது என மனக் கண் முன்னால் பல காட்சிகள் ஓடி மறைந்தன. அந்த அசம்பாவிதம் மட்டும் நிகழாமல் இருந்திருந்தால் அழகிய குடியிருப்பாக மாறியிருக்க வேண்டிய இடம் இப்போது புதர் மண்டி ஆள் அரவமற்ற பகுதியாகக் காணப்பட்டது. முகப்பில், 'லேண்ட் ஃபார் சேல்' என்ற விளம்பரம் வைக்கப்பட்டிருந்தது. மவுலிவாக்கம் கட்டடம் இடிக்கப்பட்ட பிறகு, நிலத்தை விற்க பிரேம் சிருஷ்டி நிர்வாகத்தினர் முயன்று வருவது தெரிந்தது.

இது தொடர்பாக பிரேம் சிருஷ்டி நிறுவனத்தின் மனோகரனை தொடர்பு கொண்டோம், ''சார்... அந்தச் சம்பவம் இயற்கையாக நடந்த விபத்து. எங்க கவனக்குறைபாடால நடக்கல. இப்போ, நிலத்தை விற்க முழு வீச்சுல முயற்சி செய்துட்டு இருக்கோம். சீக்கிரம் வித்துருவோம். தற்போது, ரியல் எஸ்டேட் பிசினஸ் கொஞ்சம் டல்லா இருக்குது. மீண்டும் ரியல் எஸ்டேட் பிசினஸ் பீக்ல வரும்போது கண்டிப்பா இந்த நிலத்துக்கும் மவுசு வரும். ஐ.டி பார்க், மால், ஹோட்டல்கள் போன்ற கமர்சியல் கட்டடங்கள் இங்கே கட்டலாம். கிட்டத்தட்ட 76 குடும்பங்களுக்கு 30 கோடி ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கு. அதற்காக, எங்கள் பங்காக உள்ள 20 சதவிகித நில மதிப்பையும்கூட நாங்க விட்டுக் கொடுக்கத் தயாரா இருக்கோம்.

எங்களை நம்பி பணத்தை முதலீடு செய்தவர்களுக்கு கண்டிப்பாகப் பணத்தை செட்டில் செய்துவிடுவோம்.
பிரேம் சிருஷ்டி மனோகரன்

வாங்குறவங்க வசதிக்காகவும் எங்களை நம்பி முதலீடு செய்தவங்களுக்காகவும் இதைச் செய்றோம். இதே இடத்துல நீங்க கட்டடம் கட்ட மீண்டும் விண்ணப்பிங்கனு, சி.எம்.டி.ஏ எங்களுக்கு அனுப்பிய கடிதம்கூட இருக்குது. இங்கே, கிரவுண்ட் ரூ. 2 கோடிக்கு விலை போகும். எங்க வாடிக்கையாளர்களுக்கு நன்மை கிடைக்க, அதற்கும் குறைவான விலைக்கும் கொடுக்க தயாரா இருக்கோம். நாங்க யார் யாருக்கு எவ்வளவு கொடுக்கணும்ங்கிற லிஸ்ட் எங்ககிட்ட இருக்கு. பிளாட்டுக்காக 25 சதவிகித தொகையில் இருந்து 80 சதவிகிதம் வரை எங்களிடம் பணம் கொடுத்தவர்களுக்கு கண்டிப்பாக நிலத்தை விற்று செட்டில் செஞ்சுருவோம். இப்போ நிறைய பேர் வந்து நிலத்தைப் பார்த்துட்டு போறாங்க. போரூர் மெட்ரோ ரயில் பாதை வேற வருது. அதனால் விரைவில் தீர்வு கிடைக்கும்'' என்றார் நம்பிக்கையுடன்.

2014-ம் ஆண்டு ஜூன் 28-ம் தேதி மவுலிவாக்கம் கட்டட விபத்து நடந்தது. பல விதிமுறைகளை மீறி கட்டடம் கட்டப்பட்டதாகக் கட்டுமான நிறுவனம் மீது அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து மனோகரனிடம் கேட்டபோது, ''எந்த விதிமுறைகளையும் மீறி நாங்கள் கட்டவில்லை. அப்போது, என்ன விதிமுறைகள் இருந்ததோ அவற்றைப் பின்பற்றியே கட்டடத்தைக் கட்டினோம்'' என மறுத்தார்.

கட்டடம் கட்டுவதற்கு திட்ட அனுமதி கேட்டு கொடுக்கப்பட்ட விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டிருந்த, நிலத்தின் மொத்த பரப்பளவு 1,11,684 சதுர அடி. திறந்த வெளி இடம், பூங்கா, நீச்சல்குளம் அமைத்தது போக 3,986.17 சதுர மீட்டரில், 11 தளங்கள் கொண்ட இரண்டு கட்டடங்களைக் கட்டுவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

மவுலிவாக்கம் கட்டடம் தகர்க்கப்பட்ட காட்சி
மவுலிவாக்கம் கட்டடம் தகர்க்கப்பட்ட காட்சி

அடுக்குமாடிக்குடியிருப்பு கட்டுவது என்றால் அருகில் 60 அடி சாலை இருக்க வேண்டும். நிலத்தின் பட்டா, கட்டட வரைபடம், மண் தன்மையை உறுதி செய்யும் சான்றிதழ், தீயணைப்புத்துறை, போக்குவரத்து துறை, சென்னை மாநகராட்சி, சென்னை குடிநீர் வடிகால் வாரியம், சுற்றுச்சூழல் ஆகிய துறைகளின் அனுமதி கடிதங்கள் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இந்தக் கட்டடம் கட்டப்பட்டதில் இவற்றில் பெரும்பாலான சான்றுகள் இல்லை என்றும் பலதரப்பிலும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. ஆனால், தேவையான அனைத்துச் சான்றுகளையும் சமர்ப்பித்தே திட்ட அனுமதி பெறப்பட்டுள்ளதாகக் கட்டுமான நிறுவனம் தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. நீதிமன்றத்திலும் இவை தொடர்பான பல்வேறு ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

சொந்த வீடு வாங்கினால்தான் வாழ்க்கையில் செட்டில் ஆனதாக அர்த்தம் என்று நினைக்கும் நடுத்தர வர்க்கத்தினர்தான், மவுலிவாக்கம் கட்டடத்தில் பல லட்சங்கள் முதலீடு செய்திருந்தனர். சொந்த சேமிப்பு, வங்கியில் லோன் வாங்கி தங்கள் சொந்தவீட்டுக் கனவை எட்டிவிட வேண்டுமென்ற எண்ணத்தில் இருந்த அவர்களின் ஆசையிலும் மண் விழுந்தது. தற்போது, வீடும் கிடைக்காத நிலையில், வாடகை வீட்டில் இருந்து கொண்டு, வங்கி லோனையும் கட்டி வருகின்றனர்.

முதலீடு செய்தவர்கள் Moulivakkam Trust Heights Flat Affected Association என்கிற அமைப்பையும் தொடங்கி தங்கள் பணத்தை திரும்பப் பெற போராடி வருகின்றனர். இப்போது, நிலத்தை வாங்க பலரும் ஆர்வம் காட்டி வருவதால், அவர்களுக்கு விரைவில் செட்டில்மென்ட் கிடைக்க வாய்ப்பு உருவாகியுள்ளது.

பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கு விரைவாக விடிவுகாலம் பிறக்க வேண்டுமென்பதே எல்லோருடைய விருப்பம்!

Vikatan
அடுத்த கட்டுரைக்கு