Published:Updated:

`தீப்பந்த வெளிச்சம்; டோலி கட்டி தூக்கிச்செல்லப்பட்ட சடலம்!’- அதிர்ச்சியில் உறங்காத நெக்னாமலை கிராமம்

டோலி கட்டி தூக்கிச்செல்லப்படும் சடலம்
News
டோலி கட்டி தூக்கிச்செல்லப்படும் சடலம்

மின்சாரம் தாக்கி பலியான இளைஞரின் உடலை, 1500 மீட்டர் உயரத்தில் உள்ள மலை கிராமத்துக்கு டோலி கட்டி தூக்கிச்சென்ற அவலம், வாணியம்பாடி அருகே நிகழ்ந்திருக்கிறது.

திருப்பத்தூர் மாவட்டத்தில், வாணியம்பாடியை அடுத்துள்ள நெக்னாமலை கிராமம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,500 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறது. இங்கு, 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகிறார்கள். இவர்கள் அனைவருமே விவசாயத்தையும் கால்நடை வளர்ப்பையும்தான் பிரதான தொழிலாகக் கொண்டுள்ளனர். `சுதந்திரமடைந்து இத்தனை ஆண்டுகளாகியும் நெக்னாமலை கிராமம் புறக்கணிக்கப்பட்ட பகுதியாகவே இருந்துவருகிறது.

டோலி
டோலி

சாலை வசதி, மின்சார வசதி, பாதுகாக்கப்பட்ட குடிநீர், கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகள் எதையுமே அரசாங்கமும் ஆட்சியாளர்களும் இதுநாள் வரை செய்துகொடுக்கவும் இல்லை. எட்டிப்பார்க்கவும் இல்லை’ என்று கொந்தளிக்கிறார்கள் நெக்னாமலை மக்கள். மலையிலிருந்து மழைநீர் வழிந்தோடும் பாதையைத்தான் (கணவாய்) அந்த மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். பெண்களுக்குப் பிரசவ வலி ஏற்பட்டாலும் யாருக்காவது உடல்நிலை பாதிக்கப்பட்டாலும் டோலி கட்டி மலை அடிவாரத்துக்குத் தூக்கிவர வேண்டும். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அங்கிருந்துதான் வாணியம்பாடி அல்லது ஆலங்காயம் மருத்துவமனைக்கு வாகனம் மூலம் கொண்டுசெல்கிறார்கள். மலையிலிருந்து இறங்கி ஏறுவதற்கே சுமார் 5 மணி நேரம் ஆகிறது. இதனால், டோலி கட்டி தூக்கி வரப்படும் நோயாளிகள், கர்ப்பிணிப் பெண்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. சில நேரங்களில் உயிரிழப்புகளும் நடந்திருக்கின்றன. அப்படி இறப்பவர்களின் உடல்களை டோலி கட்டிதான் மலை உச்சிக்கு தூக்கிச் செல்கிறார்கள். `இந்த அவலநிலையைக் களைய இதுவரை எந்த ஆட்சியாளர்களும் நடவடிக்கை எடுத்ததே இல்லை.

டோலி
டோலி

தேர்தல் நேரம் வந்தால் மட்டும் மலை முகட்டுக்கு ஓட்டு கேட்டு வந்துவிடுகிறார்கள். வெற்றிபெற்ற பிறகு எட்டிக்கூட பார்ப்பதில்லை’ என்று கொதிக்கிறார்கள் நெக்னாமலை மக்கள். இந்த நிலையில், நெக்னாமலை கிராமத்தைச் சேர்ந்த முனிசாமி (25) என்ற இளைஞர் கோவையில் கட்டடத் தொழில் செய்துவந்தார். 9-ம் தேதி சென்டரிங் வேலை செய்தபோது மின்சாரம் தாக்கி அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். அவரின் உடல் அங்குள்ள அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு 10-ம் தேதி மதியம் ஆம்புலன்ஸ் மூலம் சேலம் கொண்டுவரப்பட்டது. 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பின்னர், சேலத்திலிருந்து வேறொரு ஆம்புலன்ஸுக்கு உடல் மாற்றப்பட்டு நெக்னாமலை அடிவாரத்துக்கு நேற்றிரவு 9.45 மணிக்குக் கொண்டுவந்தனர். அங்கு தயாராக இருந்த உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டோர் முனிசாமியின் சடலத்தைப் பெற்றுக்கொண்டனர். ஆம்புலன்ஸ் புறப்பட்டுச் சென்றது. அதையடுத்து, தீப்பந்தம் ஏற்றிக்கொண்டு, அந்த வெளிச்சத்தில் மூங்கில் கொம்பில் டோலி கட்டி சடலத்தைச் சுமந்துகொண்டு மலை மீது ஏறினர். இரண்டு பேர் மட்டுமே டோலியைத் தூக்க முடியும் என்பதால் உடன் வந்தவர்கள் சிறிது நேரம் மாற்றி மாற்றிச் சுமந்துசென்றனர். மலை உச்சியைச் சென்றடைய நள்ளிரவுக்கு மேல் ஆகிவிட்டது.

சடலத்தை டோலியில் தூக்கிச்செல்லும் அவலம்
சடலத்தை டோலியில் தூக்கிச்செல்லும் அவலம்

உயிரிழந்த முனிசாமிக்கு அனிதா (22) என்ற மனைவியும் ஒன்றரை வயதில் ஒரு குழந்தையும் இருக்கிறது. அனிதா, தற்போது 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். இப்படிப்பட்ட நிலையில் கணவன் இறந்த சம்பவம் அனிதாவையும் உறவினர்களையும் மீளாத் துயரமடைய செய்திருக்கிறது. இன்று அவரின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது. `இந்த அவலநிலைக்குப் பிறகாவது, நெக்னாமலை கிராமத்துக்கு விடிவுகாலம் பிறக்க வேண்டும். சாலை அமைப்பு உட்பட அடிப்படை வசதிகளைத் தரமாக செய்துகொடுக்க வேண்டும். ஆட்சியாளர்கள், இந்தப் பிரச்னையில் அதிக கவனம் செலுத்த வேண்டும்’ என்பதே அனைவருடைய எதிர்பார்ப்பாக உள்ளது.