`தேவகோட்டை காதல்' என்ற படத்தில் ஹீரோவாக நடித்தவர் சீனிவாசன். இவர் செயின் பறிப்பில் ஈடுபட்டதாக காரைக்குடி காவல்துறையால கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை அடுத்த நாச்சுழியேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர் மனைவி குழந்தையம்மாள், கடந்த பிப்ரவரி 14-ம் தேதி காலை 6:30 மணியளவில் எப்போதும்போல நடைப்பயிற்சி மேற்கொண்டிருக்கிறார். அந்தச் சமயத்தில் இருசக்கர வாகனத்தில் முகக்கவசம் அணிந்து வந்த இரண்டு மர்ம நபர்கள், குழந்தையம்மாள் முகத்தில் பெப்பர் ஸ்பிரே அடித்து அவரை நிலைகுலையவைத்து சுமார் ஐந்து பவுன் மதிப்புள்ள நகையை அவரிடமிருந்து பறித்துச் சென்றனர். இதனால் அந்தப் பகுதியில் அதிகாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதைத் தொடர்ந்து குழந்தையம்மாள் உறவினருடன் சென்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காரைக்குடி டி.எஸ்.பி அருண் உத்தரவின்பேரில் எஸ்.ஐ-க்கள் பார்த்திபன், தவமணி காவலர்கள் சுரேஷ், தட்சிணாமூர்த்தி, முருகன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் குற்றவாளியைத் தேடிவந்தனர். காரைக்குடி அதன் சுற்றுவட்டாரங்கள் எனப் பல இடங்களில் சோதனை செய்தனர். கண்காணிப்பு கேமராக்களில் ஆய்வு செய்ததில் மர்ம நபர்கள் அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்து, பின்னர் மீண்டும் தாங்கள் தங்கியிருந்த இடத்துக்குச் சென்றது தெரியவந்தது. காரைக்குடி சுப்பிரமணியபுரத்தில் குற்றவாளிகள் தங்கியிருந்தை தனிப்படை உறுதி செய்தது.

பின்னர் குற்றவாளிகளில் ஒருவரான சீனிவசானைக் கைதுசெய்தனர். அவரிடம் விசாரணை செய்ததில், மற்றொரு குற்றவாளி குறித்து அவர் தகவல் கொடுத்ததை தொடர்ந்து அவரை ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் கைதுசெய்தனர். குற்றவாளி சீனு என்ற சீனிவாசன் இயக்குநர் ஏ.ஆர்.கே என்பவர் எடுத்த ‘தேவகோட்டை காதல்’ படத்தில் சீனு என்ற நடிகர் என்று தெரியவந்தது. படத்தில் ஹீரோவாக நடித்த சீனு நிஜத்தில் திருடானச் சிக்கியிருக்கிறார். குற்றவாளிகளைக் கைதுசெய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை செய்துவருகின்றனர்.