Published:Updated:

`பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்!’ - ஜமாத்திலிருந்து எம்.பி முகமதுஜான் அதிரடி நீக்கம்

குடியுரிமைச் சட்டத்திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்த எம்.பி முகமதுஜான், ஜமாத் பொறுப்பிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

எம்.பி முகமதுஜான்
எம்.பி முகமதுஜான்

குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா பலத்த எதிர்ப்புகளுக்கிடையே நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. மசோதாவுக்கு ஆதரவாக தமிழகத்தைச் சேர்ந்த அ.தி.மு.க-வின் மாநிலங்களவை எம்.பி முகமதுஜான் வாக்களித்துள்ளார்.

அமித் ஷா
அமித் ஷா

இதனால், அவர் மீது இஸ்லாமியர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ராணிப்பேட்டை மாவட்ட அனைத்து ஜமாத் காப்பாளர் பொறுப்பிலிருந்து முகமதுஜான் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். முத்தவல்லியாக இருந்தால் மட்டுமே ஜமாத்தில் பொறுப்பில் இருக்க முடியும்.

அவர்களைத் தவிர வேறு யாருக்கும் பொறுப்பு கிடைக்காது. முகமது ஜான் முத்தவல்லி இல்லை. ஆனாலும், அவருக்கு ராணிப்பேட்டை, ஆற்காடு, வாலாஜாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 50 மசூதிகளுக்குச் சிறப்புக் காப்பாளர் என்ற பொறுப்பை வழங்கியிருந்தனர். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக முகமதுஜான் அந்தப் பொறுப்பில் இருந்தார்.

எம்.பி முகமதுஜான்
எம்.பி முகமதுஜான்

இந்த நிலையில், சொந்த மதத்துக்கு எதிராகச் செயல்பட்டதாக கூறி முகமதுஜானை பொறுப்பிலிருந்து நீக்கியிருக்கிறார்கள் ஜமாத் நிர்வாகிகள். இதுபற்றி நம்மிடம் பேசிய முத்தவல்லி ஹசேன், ``குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா இஸ்லாமியர்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் எதிராக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்கு எங்கள் பகுதியைச் சேர்ந்தவரும் இஸ்லாமியருமான முகமதுஜானே ஆதரவு தெரித்துள்ளார். இது, சொந்த சமூகத்துக்கே செய்த துரோகம். அவரைப் பொறுப்பிலிருந்து நீக்குவதற்கு முன்பு ஜமாத் தரப்பில் அழைப்புவிடுத்தோம். அவர், வரவில்லை. சிலர் மூலம் தகவல் சொன்னோம்.

மோடி
மோடி

`விஷம பிரசாரம்’ செய்வதாக ஜமாத் நிர்வாகிகளை முகமதுஜான் விமர்சனம் செய்துள்ளார். அதன் பிறகும், நாங்கள் நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியாது. பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டோம். எங்கள் சமூக மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்டால் மட்டுமே அவரை ஜமாத்தில் மீண்டும் சேர்த்துக்கொள்வோம்’’ என்றார் கொதிப்புடன்.