Published:Updated:

தெரியாத ஊர்; புரியாத மொழி; உ.பியில் தவித்த தம்பதிக்குக் கைகொடுத்த விழுப்புரம் எம்.பி ரவிக்குமார்

கொரோனா
கொரோனா

”கொரோனா சோதனை பண்ணணும்னு சொல்லிட்டு போலீஸ் எங்களை தனியா ஒரு அறையில வெச்சிட்டாங்க. அந்த போலீஸ்காரங்ககிட்ட, நாங்க தமிழ்நாட்டைச் சேர்ந்தவங்க. தமிழைத் தவிர வேற எந்த பாஷையும் எங்களுக்குத் தெரியாதுனு சொல்லி எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தோம்”

உலகம் முழுக்க ஈவு இரக்கமற்று ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கிக்கொண்டிக்கும் கொரோனா வைரஸ், மனித நேயத்தை வெளிப்படுத்துவதற்கான சூழலை உருவாக்கி வருவதையும் காண முடிகிறது. விழுப்புரத்தைச் சேர்ந்த வயதான தம்பதியர் ஆஸ்திரேலியாவில் இருக்கும் தங்களது மகனைப் பார்த்துவிட்டுத் திரும்பும்போது டெல்லியில் தனிமைப்படுத்தப்பட்டார்கள். மொழி தெரியாத அவர்கள், கொரோனா சோதனைக்காக உத்தரப்பிரதேச மாநிலமான நொய்டாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். இரண்டு நாள்கள் அங்கு தங்க வைக்கப்பட்டு அவர்களுக்குக் கொரோனா தொற்று இல்லை என்று உறுதியானதும், இரவோடு இரவாக விடுதியைவிட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். மொழி தெரியாத ஊரில் தி்சையற்று தவித்த அவர்களை மீட்டு தனது டெல்லி வீட்டில் தங்க வைத்திருக்கிறார் விழுப்புரம் எம்.பி ரவிக்குமார்.

பர்குணன் - சாந்தி தம்பதியர்
பர்குணன் - சாந்தி தம்பதியர்

டெல்லியில் இருக்கும் பர்குணன், சாந்தி தம்பதியரிடம் தொலைபேசியில் பேசினோம். ``விழுப்புரம் மருதூர்லதான் எங்கள் வீடு. நானும், என் வீட்டுக்காரரும் ஆஸ்திரேலியாவுல இருக்கற எங்க பையன் வீட்டுக்கு டூரிஸ்ட் விசாவுல போன வருஷம் டிசம்பர் மாசம் போனோம். அங்க பேரப் பசங்க, மகன், மருமக கூட இருந்துட்டு சிங்கப்பூர் வழியா மார்ச் 21-ம் தேதி காலைல 8 மணிக்கு டெல்லிக்கு வந்தோம். கொரோனா சோதனை பண்ணணும்னு சொல்லிட்டு போலீஸ் எங்களை தனியா ஒரு அறையில வெச்சிட்டாங்க. அந்த போலீஸ்காரங்ககிட்ட, நாங்க தமிழ்நாட்டைச் சேர்ந்தவங்க. தமிழைத் தவிர வேற எந்த பாஷையும் எங்களுக்குத் தெரியாது. எங்க ரெண்டு பேருக்குமே சுகர், ரத்த அழுத்த நோய் இருக்குதுன்னு சொல்லி எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தோம். ஆனால் நாங்க சொன்னது அவங்களுக்குப் புரியலை. அவங்க என்ன சொல்றாங்கனு எங்களுக்கும் புரியல.

என்ன பண்றதுன்னு தெரியாம தவிச்சிக்கிட்டு நின்ன நேரத்துலதான் விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் சார் எங்களுக்கு போன் பண்ணி ஆறுதல் சொல்லி, கவலைப்படாதீங்க. நான் இருக்கிறேன்னு சொன்னதும்தான் எங்களுக்கு தைரியமே வந்துச்சு. அன்னைக்கு முழுக்க நாங்க ஏர்போர்ட்டுலயேதான் இருந்தோம். அன்னைக்கு இரவு 70 கிலோ மீட்டர் தள்ளி உத்தரப்பிரதேச மாவட்டத்துல இருக்கற நொய்டாவுக்குக் கூட்டிட்டுப் போயி, அங்க ஒரு ஹாஸ்டல்ல தனித்தனி அறையில தங்க வெச்சிட்டாங்க. அந்த அறைக்குள்ள கரப்பான் பூச்சி, எலி, நாய்ங்க எல்லாம் சர்வசாதாரணமா வந்து போச்சுங்க.

உத்தரப் பிரதேசம் மாநிலம் நொய்டா
உத்தரப் பிரதேசம் மாநிலம் நொய்டா

மறுநாள் 22-ம் தேதி எங்களைக் கூட்டிட்டுப் போயி டெஸ்ட் எடுத்தாங்க. 24-ம் தேதி இரவு உங்களுக்குக் கொரோனா தொற்று இல்லை நீங்க வெளியில போங்கனு அனுப்பிட்டாங்க. என் வீட்டுக்காருக்கு 63 வயசு, எனக்கு 53 வயசு. நாங்க எங்க போறது ? தெரியாத ஊரு, புரியாத மொழியில என்ன செய்யறதுன்னே தெரியாம, அங்கிருந்த ஹோட்டல்கள்ல தங்குறதுக்கு ரூம் கேட்டோம். ஆனால் யாருமே கொடுக்கல.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

எங்களை அங்க இருந்து டெல்லிக்குக் கூட்டிக்கிட்டுப் போறதுக்காக எம்.பி சார் நிறைய பேருக்கிட்ட பேசினாங்க. ஆனால் கொரோனா பயத்துனாலயும், ஊரடங்கு சட்டத்தாலயும் யாரும் வரலைன்னு சொல்லிட்டாங்க. அப்புறம் ராஜேஷ் சார்னு ஒரு ஐ.பி.எஸ் அதிகாரிகிட்ட அவர் மூலமா போலீஸ் பாதுகாப்போட டெல்லிக்கு வந்தோம். டெல்லியில எம்.பி சாருக்கு அரசாங்கம் ஒதுக்கிக் கொடுத்த வீட்டுல பாதுகாப்பா இருக்கோம். 3 வேளையும் நல்ல சாப்பாடும் கிடைக்குது. எம்.பி ரவிக்குமார் சாரும், உதவி கமிஷனர் ராஜேஷ் சாரும் இல்லைன்னா, இந்த வயசான காலத்துல நாங்க ரெண்டுபேரும், உத்தரப்பிரதேசத்துல ரோட்டோரத்துலதான் நின்னுருப்போம்” என்று கலங்கினர்.

எம்.பி ரவிக்குமாரிடம் பேசினோம். “ஆஸ்திரேலியாவில் இருக்கும் அந்தத் தம்பதியரின் மகனின் நண்பர் ஒருவர் விழுப்புரத்திலிருந்து என்னைத் தொடர்பு கொண்டு அந்தச் சூழல் குறித்துக் கூறினார். அதன்பிறகு அவர்களின் செல்போன் எண்ணை வாங்கி நானே அவர்களுக்கு போன் செய்து பேசினேன். அன்றிரவு நொய்டாவில் இருக்கும் மாணவிகள் விடுதி ஒன்றில் அவர்களை தங்க வைத்திருக்கிறார்கள்.

விழுப்புரம் எம்.பி ரவிக்குமார்
விழுப்புரம் எம்.பி ரவிக்குமார்

சோதனையில் கொரோனா தொற்று இல்லை என்றதும் 24-ம் தேதி இரவு அவர்களை விடுதியிலிருந்து வெளியேற்றிவிட்டனர். அவர்களுக்கு தமிழைத் தவிர வேறெந்த மொழியும் தெரியாததால் அழுதபடியே எனக்கு போன் செய்தார்கள். நான் புதுச்சேரியில் இருப்பதால் அவர்களுக்கு நேரில் சென்று உதவ முடியாத நிலையில், அவர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு அங்கிருந்த அதிகாரிகளிடம் பேசினேன். ஆனால் மற்றவர்களிடம் தொற்று இருந்தால் இவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று யோசித்தார்கள்.

பர்குணன் - சாந்தி
பர்குணன் - சாந்தி

புதுச்சேரியைச் சேர்ந்த எனது நண்பரின் மகன் ராஜேஷ்தான் நொய்டாவில் உதவி ஆணையராக இருக்கிறார். அவரைத் தொடர்புகொண்டு அவர்களை டெல்லிக்கு அழைத்து வருவதற்கு உதவி கேட்டேன். ஆனால் கொரோனா நோய் தொற்று இல்லை என்றாலும் அவர்களை அழைத்து வருவதற்கு அனைவரும் பயப்படுகிறார்கள் என்று கூறியவரிடம், அன்றிரவு அவர்கள் தங்குவதற்கு மட்டும் ஏதாவது விடுதியை ஏற்பாடு செய்யுங்கள் என்றேன். அவரும் எவ்வளவோ முயற்சி செய்தும் எந்த விடுதியும் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அதன்பிறகு ’டெல்லியில் இருந்து நீங்கள் எதாவது கார் ஒன்றை அனுப்பினால் அவர்களை அதில் பாதுகாப்பாக அனுப்பி வைக்கிறேன் என்றார்.

இரவு முழுக்கப் பல நண்பர்களிடம் பேசியும் பலனளிக்காததால், எப்படியாவது ஒரு காரை ஏற்பாடு செய்து அவர்களை டெல்லிக்கு அனுப்பி வையுங்கள் என்று உதவி ஆணையர் ராஜேஷிடம் கேட்டேன். அதையடுத்து அவரின் நீண்ட முயற்சிக்குப் பிறகு தனியார் கார் ஒன்றில் அவர்கள் இருவரும் டெல்லி வந்து சேர்ந்தார்கள். ஆனால் அவர்களை தங்க வைக்க எந்த இடமும் இல்லை. அதனால் அரசு எனக்கு ஒதுக்கிய வீட்டில் அவர்களை தங்க வைத்தேன். உணவுக்கும் உதவிக்கும் ஆள்களை அனுப்பியிருக்கிறேன். அவர்கள் யார் என்று கூட எனக்கு தெரியாது. அவர்கள் நான் எம்.பியாக இருக்கும் விழுப்புரம் தொகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்தார்கள். என்னிடம் உதவி கேட்டு வருபவர்களை தொகுதிக்காரர்களாகவோ, வாக்காளர்களாகவோ பார்ப்பதில்லை. என்னால் முடிந்த உதவிகளை அவர்களுக்குச் செய்வது வழக்கம். அப்படித்தான் இதுவும்” என்றார்.

டெல்லி சர்வதேச விமான நிலையம்
டெல்லி சர்வதேச விமான நிலையம்

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவின் உதவி ஆணையர் சு.ராஜேஷ் ஐ.பி.எஸ் அவர்களை தொடர்புகொண்டபோது, ”என்னைப் பொறுத்தவரை அன்றாடம் உதவி கேட்டு வரும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொலைபேசிகளில் ஒன்றாகவே இதைக் கருதினேன். எம்.பி ரவிக்குமார் கூறியதன் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களைப் பார்க்காமலே உதவி செய்த உ.பி காவல்துறை, தன் கடமையை மட்டுமே செய்துள்ளது. இதுபோல் நாட்டின் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் நொய்டாவில் சிக்கி உதவி கேட்டால் அதை நிறைவேற்றத் தயாராகவே இருக்கிறோம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு