Published:Updated:

``உங்களுக்காக நாங்கள்!’’ - மருத்துவ மாணவர்கள் சங்க மாநாட்டில் எம்.பிக்கள்

``மோடி அரசு குழப்பத்தில் உள்ளது. அவர்கள் அறிவிக்கும் புதிய கொள்கைகளால் மருத்துவ மாணவர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று யூகிக்க முடியாத வகையில் உள்ளது.’’

மருத்துவ மாணவர்கள் சங்க  மாநாடு
மருத்துவ மாணவர்கள் சங்க மாநாடு

தமிழ்நாடு அரசு மருத்துவர்களின் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் (TNMSA) சார்பில் தேசிய மருத்துவ ஆணையம், நெக்ஸ்ட் தேர்வு, பிரிட்ஜ் கோர்ஸ் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னை உயர் நீதிமன்றம் அருகில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் மருத்துவ மாணவர்களால் நடத்தப்படும் முதல் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் பல்வேறு கட்சித் தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்று தங்கள் ஆதரவை மருத்துவ மாணவர்களுக்குத் தெரிவித்தனர்.

திருமாவளவன் எம்.பி
திருமாவளவன் எம்.பி

தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தை (NMC act) திரும்பப் பெற வேண்டும். நெக்ஸ்ட் தேர்வை புகுத்தக் கூடாது. இணைப்புப் படிப்புகள் ( Bridge courses), ஒரு வருடம் அல்லது இரண்டு வருடகால மருத்துவ படிப்புகளுக்கு அனுமதிக்கக் கூடாது. அந்தப் படிப்புகளைப் படித்து முடித்து மருத்துவராகத் தொழில் செய்ய உரிமம் வழங்கக் கூடாது முதலிய பல கோரிக்கைகளை முன்வைத்துப் போராடி வருகின்றனர். இம்மாநாட்டில் மாநாட்டு மலரை வெளியிட்டு தொடக்க உரையாற்றினார் புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி.

இலங்கை அதிபர் தேர்தல்: இந்தியாவைப் பொருட்படுத்தாத கட்சிகள்... என்ன காரணம்?

"மோடி அரசு குழப்பத்தில் உள்ளது. அவர்கள் அறிவிக்கும் புதிய கொள்கைகளால் மருத்துவ மாணவர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று யூகிக்க முடியாத வகையில் உள்ளது. புதுச்சேரியில் நாங்கள் CENTAC முறையை இதற்கு முன் பின்பற்றி வந்தோம். 'சென்டாக்' முறைப்படி கிராமப்புற, பிற்படுத்தப்பட்ட, பழங்குடி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைத்து வந்தது. தற்போது மத்திய அரசின் நீட் திணிப்பால், துரதிர்ஷ்டவசமாக அந்த மாணவர்களின் வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு திட்டத்தை நிறைவேற்றினாலும் அது எல்லோருக்கும் சமமான வாய்ப்பு அளிக்கக்கூடியதாக இருக்க வேண்டும். ஆனால், நீட் அவ்வாறு இல்லை.

நாராயணசாமி
நாராயணசாமி

அடுத்ததாக நெக்ஸ்ட் எக்ஸாம் என்பது ஒரு கோமாளித்தனமான வேலை. நான்கரை வருட படிப்பு முடித்து பின் ஒரு வருடம் உள் படிப்பு வேலை முடித்த பிறகும் ஒருவர் மருத்துவராக, நெக்ஸ்ட் என்ற தேர்வு எழுத வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. புதுச்சேரி முதல்வர் என்ற முறையில் நெக்ஸ்ட் தேர்வு, பிரிட்ஜ் கோர்ஸ் ஆகியவற்றை எதிர்ப்பதில், உங்களுக்கு நான் எப்போதும் ஆதரவு அளிப்பேன். நீங்கள் நீட் தேர்வுக்கும் இதோடு சேர்த்து எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும்'' என்றும் கூறினார் நாராயணசாமி.

NMC பற்றி அவர் கூறுகையில் ``தேசிய மருத்துவ ஆணையத்தை அமைத்ததன் மூலம், மத்திய அரசு மருத்துவம் சம்பந்தமான அனைத்து அதிகாரத்தையும் தன் கையில் எடுத்துள்ளது.

உதாரணமாக, முன்பு அமலில் இருந்த திட்டத்துறையை எடுத்துவிட்டு நிதி ஆயோக்கை அமல்படுத்தியது மூலமாக மாநில உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு, வளர்ச்சி கேள்விக்குறியாக உள்ளது. மருத்துவ மாணவர்களின் எதிர்காலத்துக்காக போராடுகிறீர்கள், உங்களோடு நாங்கள் இருப்போம்" என்று நம்பிக்கை அளித்துப் பேசினார் புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி.

டி.கே.ரங்கராஜன்
டி.கே.ரங்கராஜன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி டி.கே.ரங்கராஜன் பேசுகையில்,

''தேசிய மருத்துவ ஆணையம் மாநில உரிமையைப் பறிக்கக் கூடியது. இதுகுறித்து எந்த மாநிலமும் கவலைப்படவில்லை. மார்க்சிஸ்ட், தி.மு.க ஆகிய கட்சிகள் அதற்கு எதிரான வலுவான எதிர்ப்பைப் பதிவு செய்தன. தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தன. ஆனால், அ.தி.மு.க எதிர்ப்பு தெரிவிப்பதுபோல தெரிவித்துவிட்டு, தீர்மானத்துக்குச் சாதகமாகவே வாக்களித்தது. உங்கள் கோரிக்கைகள் அனைத்துமே நியாயமானவை. அதில் நீங்கள் வெற்றி பெற வாழ்த்துகள்" என்று அவர் மாணவர்களை வாழ்த்தினார்.

பாராளுமன்றத்தில் உங்களுக்காக எங்களுடைய குரல் ஒலிக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்களான தொல்.திருமாவளவன் (விடுதலைச் சிறுத்தைகள்), டாக்டர் எஸ்.செந்தில்குமார் ( தி.மு.க) ஆகியோர் ஆகியோர் நம்பிக்கை அளித்தனர்.

இதில் சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளரான டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், அகில இந்திய செயலாளரான டாக்டர் ஏ.ஆர்.சாந்தி, மாநிலத் தலைவர் டாக்டர்.த.அறம் ஆகியோரும் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினர். பல்வேறு போட்டிகளில் பரிசுகள் பெற்ற மருத்துவ மாணவர்களுக்கு பரிசு வழங்கி உரை நிகழ்த்தினார் கேரள எம்.பி பினோய் விஸ்வம்.

மாணவர்கள் பேரணி
மாணவர்கள் பேரணி

மாலை, 600 -க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் பங்கேற்ற, பேரணி நடைபெற்றது. தேசிய மருத்துவ ஆணையம், நெக்ஸ்ட் மற்றும் பிரிட்ஜ் கோர்ஸ் ஆகியவற்றை எதிர்த்து கோஷங்கள் எழுப்பிய மருத்துவ மாணவர்கள் புதுப்பேட்டையிலிருந்து லாங்ஸ் கார்டன் வரை கோரிக்கை பேரணி மேற்கொண்டனர்.

மருத்துவ மாணவர்களுக்கு முதலாம் ஆண்டில் பெரும் சுமையாக இருந்து வந்த பிரேக் சிஸ்டத்தை நீதிமன்றம் மூலமாக ஒழித்தது. தேர்வுகளுக்கிடையே ஓய்வு எடுக்க வசதியாக விடுமுறை மற்றும் 90 சதவிகித வருகைப் பதிவிலிருந்து 85 சதவிகித வருகைப்பதிவாகக் குறைத்தது போன்ற நடவடிக்கைகள் மூலம் மாணவர்களின் நலனுக்காகப் போராடி வருகிறது தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.